சனி, 18 ஜூன், 2022

சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி

 அழித்து எழுதமுடியாத

அழித்து எழுதமுடியாத
சித்திரம் ஒன்றுண்டு
அம்மா

எப்போதும் பெண்களெனில்
இளக்காரம் ஆண்களுக்கு

"காயம் பட்டாக்கூட
ரத்தம் வர்ரதில்லே
டாக்டர்கிட்ட அவளெக்
காட்டுங்கடா...'

அம்மாவைப் பற்றி
அங்கலாய்த்த அப்பா
காணாது போன 
பேரன் திருமணமும்
கொள்ளுப்பேத்தி வரவும்

பிடிவாதமாய்ப் பார்த்துப்
போனவள் அம்மா

தாமிர முகம்
கொங்குக் கொண்டை
வெற்றிலைக் கறைபடிந்த 
'எந்து பல்'
சிவப்பு மேனி மறைக்கும் 
பின் கொசுவக்
கைத்தறிச் சேலையும்
'அங்கிங்கெனாதபடி'
குத்திவைத்த பச்சையும்

பட்டுப் புடவையில்
அம்மாவைப் பார்த்ததே இல்லை
அப்பா எடுத்துக் கொடுக்க
இல்லையோ என்னவோ

நேசிப்புக்கு எடுத்த ஜென்மம் 
கறி தின்னும் அப்பாவுக்குக் 
கை கூசாமல் சமைத்தளிக்கும் 
கடும் சைவக்காரி.

நேசிப்பு... நேசிப்பு
புருசனைப் போலவே 
பண்ணையத்தையும் 
குழந்தைகள் போலவே
எருமைகளையும்!
உறவுகளைப் போலவே 
அக்கம் பக்கத்தையும்

ஓலைக்குடிசை - 
மாளிகை பேதங்கள் 
கைப் பக்குவத்தைக் 
கடுகளவும் மாற்றவில்லை 
கூட்டுச் சாற்றிலும்
வெறும் மிளகு ரசத்திலும் 
அதே சுவை... அதே... மணம் 
மேதினியில் அதுபோல
ஏது இனி?

ஊரையே தூக்கும்
அப்பாவின் கோபத்தை 
ஒற்றைப் பார்வையால்
செதுக்கி ஊமையாக்குவாள்

எழுபது வயதிலும் 
மூத்தவரைக் கண்டால்
தலைகுனிந்து நிலம் கீறும்
அம்மா ஓர் அதிசயம்
மட்டும் மரியாதையும் 
கொட்டிய களஞ்சியம்

ஒற்றையடிப் பாதையில் 
நடக்கச் சலித்த குழந்தையை
முன்னால் நடத்தி 
"ஓடு ஓடு சங்கிலி 
ஓடோடு. 
காலை மிதிப்பேன்
கையை மிதிப்பேன் 
ஓடு ஓடு சங்கிலி 
ஓடு ஓடு... 
என்று பாடித் துரத்துவாள். 
அம்மா.

சோர்வு சூழும்பொழுது
இன்றும் அம்மாவின் குரல்: 
"ஓடு ஓடு சங்கிலி 
ஓடோடு..."

காணொலி


பார்வை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன