புதன், 22 ஜூன், 2022

தேவயானி - இயற்கைக்குத் திரும்புவோம்

விஞ்ஞானிகளே

விடை கூறுங்கள்.


உலகை வென்றுவிட்டதாய்

உவகை கொள்ளாதீர்!


சாபக்கற்களில்தான்

சந்தனம் அரைத்துப்

பூசிக் கொள்கிறீர்...


என்னைத் தட்டி எழுப்பும்

சூரிய கிரணத்தில் புற்று நோய்


என் மீது தவழும்

சந்திர ஒளியில் சர்க்கரை வியாதி!


இங்கு

சுவாசப் பைகள் சுமப்பது

கரியமில வாயுவைத்தான்.


அமுதம் பொழிந்த

ஆகாயத்தை

அமிலம் சொரிய வைத்தீர்!


கவிதை பாடிய

காற்றை தண்டித்து

கறுப்பு முக்காடிட்டீர்!


பூமிப் பெண்ணின்

ஓசோன் திரையை

ஓட்டை போட்டீர்!


கல்லுக்குள் மறைந்திருந்த தீயை

இரும்புக்குள் புகுத்தி

நெஞ்சுக்குள் நெருப்பு மூட்டினீர்!


நஞ்சை வயல்களுக்கு

உரம் கொடுப்பதாய்

நஞ்சைக் கலந்தீர்!


பருகும் பானங்களில்

எலும்புகள் உருகும்

இரசாயனம் சேர்த்தீர்...


என்

தாய்ப்பால் கசந்துபோனது

இப்போது

நோயை விட மருந்துதான்

மனிதனை அதிகம் கொல்கிறது.

மரங்களுக்கு பதில்

மருத்துவமனைகள்தான்

உயரமாக வளர்கின்றன...


நான்கடி நடப்பதற்குள்

நாக்கு காய்கிறது..

கால்கள் தேய்கிறது...


அன்று

இளவட்டக் கல் தூக்கி

பலம் காட்டிய இளைஞர்களை

எண்ணிப் பார்க்கிறேன்

அன்றைய அந்த

இயற்கை உணவுக்காக ஏங்குகிறேன்...


காணொலி

பார்வை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன