புதன், 22 ஜூன், 2022

பழநிபாரதி - காடு

 கவிதை எழுத

காகிதம் எடுத்தேன்


உலகெங்கும்
காகிதத்திற்காக அழிக்கப்பட்ட
காடுகளின் மணம் 
துளைத்தது என் மூச்சை

வார்த்தையாக வந்த 
மிருகமொன்று
இழுத்துச் சென்றது காட்டுக்குள்

நானும் ஒரு
விலங்காகப் பிறக்க நினைத்து 
கலந்தாலோசித்தேன்
மற்ற விலங்குகளை!

போராடத் தெரியுமா என்றது 
புலி

நன்றி மறக்காமல்
இருக்கத் தெரியுமா என்றது
நாய்

தன்மானத்தோடு
வாழத்தெரியுமா என்றது
கவரிமான்

அடுத்தவர் அழுக்கை  உன் முதுகில் 
சுமக்க முடியுமா என்றது
கழுதை

பாலைவனங்களைக் 
கடக்க முடியுமா என்றது
ஒட்டகம்

பந்தயங்களில்
ஜெயிக்க முடியுமா என்றது 
குதிரை

வைக்கோல் கன்றுக்கும் உன்னால் 
பால் சுரக்க முடியுமா என்றது 
பசு

ஆசீர்வதிக்கத் தெரியுமா என்றது 
யானை

இருட்டிலும் 
பார்க்கத் தெரியுமா என்றது
பூனை

ஆண்பெண் 
வேற்றுமை பார்க்காமல்
குழந்தைகளை
வளர்க்கத் தெரியுமா என்றது 
கடைசியாக
கங்காரு

நான் முடிவு செய்துவிட்டேன்
அஃறிணைகளெல்லாம்
உயர்திணைகளாகிவிட்ட பிறகு 
விலங்காக வேண்டுமெனில்
விலங்காகத் தான் வேண்டுமெனில்
மனிதனாகத்தான்
பிறக்க வேண்டும்


காணொலி



பார்வை

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF

https://www.youtube.com/watch?v=7QCeDX3kh4A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன