செவ்வாய், 21 ஜூன், 2022

பச்சியப்பன் - காலம் பிரசவித்த மற்றொரு காலம்

 

மொட்டை மாடியெங்கும் 
குரோட்டன்ஸ் படர்ந்து கிடக்கும்
இதோ
இந்த வீடிருக்கும் இடத்தில்தான் 
என் வயல் இருந்தது. 

சிமெண்ட் பலகையிட்டு மூடியிருக்கும்
இந்தக் கழிவுநீர்த்தொட்டி
நேற்றுவரை
ஜீவரசம் சுரந்த கிணறு.

உயரச் சுவரெழுப்பி
உச்சிப் பரப்பெங்கும் 
கண்ணாடிச் சில்லுகள் பதித்த
சுற்றுச் சுவரோரம்தான்
கிணற்று மேடிருந்தது
மேட்டின் வலதுபுறம் மாமரம்
இடத்தில் அரச மரம்

கனியின் காலங்களில்
பறவைகளின் பாடல்கள் 
காது நிறைக்கும்

உன் தொலைக்காட்சிப் பெட்டிகளில்
ஒரு நாளும் கேட்டறியாப் பாடல்கள் அவை

நகரம் விழுங்கிய
தாய்மையின் அணைப்பறியா உனக்கு
மரங்களின் நிழல் பற்றி
உதாரணத்தோடு சொல்ல முடியவில்லை 
தொண்டை பிரித்துத் தலையாட்டும்
நெற் பூக்களுடையதும்
கம்பம் பூக்களுடையதுமான 
வாசக்கலவை சுமந்து வரும் காற்று

சுழன்று பறக்கும்
உன் மின்விசிறி ரெக்கைகள்
தொடமுடியாத தூரத்திற்குப் போய்விட்டது

துடிப்பு நிறுத்துவதான
கீச்சுக் குரல் கொண்டு குரைக்கும் 
முடி செழித்த அல்சேஷனைக்
கட்டி வைத்திருக்கிறாயே
இங்குதான்
என் காலத்தை சுமந்திருந்துபோன 
உழவு மாடுகளைக் கட்டி வைத்திருந்தேன்.

இருக்கவும் கூடும்
அல்சேஷனுக்கு வீசப்படும் கறி 
அவைகளுடையதாகவும்.

காணொலி

பார்வை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன