செவ்வாய், 21 ஜூன், 2022

வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு

 

மகனே
வழக்கமான தாலாட்டை 
உனக்கு நான் 
வாசிக்க முடியாது

அவை 
மொழியின் ஆடம்பரங்கள்
கைது செய்து வைத்த 
கனாக்கள் 

நிர்ப்பந்த உறக்கத்திற்கு
உன்னை
இட்டுச் செல்லும் ஏற்பாடுகள்

என் தாலாட்டு
இசை என்னும் 
தூக்க மாத்திரைகள் இல்லாதது

இது
உறக்கத்தையல்ல 
உன் விழிப்பையே பாடுபொருளாய்க் கொண்டது

தந்தை மகற்காற்றும்
சம்பிரதாயச் சடங்குகளின்
நீட்டோலையை என்னிடம் நீ
நீட்டாதே. 

சுவாசிக்கத் தெரிந்த உனக்குக் 
காற்று மண்டலத்தை
அறிமுகம் செய்வது அவசியமில்லை. 

நாங்கள் உனக்குப்
பெயரிட்டது
எங்கள் சௌகர்யம் 
கருதித்தான் மகனே

பாஷை
தனது 
அர்த்த மண்டபத்திற்கு
உன்னை
அழைத்துச் செல்லும் போது 
உன் பெயரை 
நீயே இட்டுக் கொள்வதே நீதி.

உன்
தூளியின்மேல் தொங்கவிட 
வர்ண பலூன்கள் இல்லையென்று
வருந்தாதே.

உன் தூளிக்குக்
கயிறு கிடைத்ததே என்று களி.

ஆமாம் மகனே
உனக்கு அணிவிக்க 
என்னிடம் ஆபரணங்களில்லை
விலங்குகளுமில்லை

உனக்கு நான்
செல்வம் எதுவும் 
சேர்த்து வைக்க முடியாது

நீ
செலவழிப்பதற்கு
உன்
வேர்வை இருக்கிறது

பள்ளிக் கூடத்தில்
உன்னைச்
சேர்ப்பது பற்றி நான் 
சிந்திக்கவில்லை

அங்கே
உனக்கு நிகழ்வது 
எழுத்துக்களின்
கட்டாய அறிமுகந்தான்

வாழ்க்கையை வாசிக்க
நீ
தெருவுக்குத்தானே 
திரும்பி வரவேண்டும்

உன் சாலையில்
மரங்கள்
பூக்களைப் பரப்பிவைக்கலாம்

ஆனால்
மனிதர்கள் நீ
முட்களைப் பரப்பி வைக்கலாம்

நீ
பூவையும் எடுத்துக் கொள்
முள்ளையும் எடுத்துக் கொள்.

அந்தப் பூவைச்
சட்டையில் குத்திக் கொள்ள 
முள்ளைக்
குண்டூசியாக்கிக் கொள்

உன்னை நான் வாழ்த்துகிறேன்.
ஆனால்
வாழ்த்துக்களே உன்னை
வாழ வைத்து விடுவதில்லை.

நதிக்கரை ஓரத்து நகரம் 
வெள்ளப் பெருக்கை எதிர்பார்த்து 
விழிப்போடிருப்பது போல்
எப்போதும் விழிப்பாய் இரு.

உறங்கும்போதும் உன் மனக்கண்கள்
இமைத்துக் கொண்டே இருக்கட்டும் 
இந்தச் சமூகத்தின் வேர்களை
கொஞ்சம் விசாரி.

அஸ்திவாரங்களின் அறிமுகம் இல்லாமல்
சுவர்களை இரசிக்காதே 
மானுடத்தை உன் தோள்களில் ஏற்றி 
ஓர் அங்குலமாவது உயர்த்து.... 
திசைகளின் நெற்றிகளுக்கு உன்பெயர் 
பொட்டாகட்டும்!

காணொலி



பார்வை

https://www.youtube.com/watch?v=mPvi7XZPoJU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன