வெண்பா
என்றால் நம்மின் நினைவில் நிற்பது சங்கப் பாடல்களும் ஔவையார் பாடல்களும் காளமேகப்
புலவர் பாடல்களுமே. இக்காலத்தில் புதுக்கவிதை, ஐக்கூ,
ஒருவரி போல்வன கவிதைகளுக்கே சிறப்பிடம் உண்டு, பழங்கதை வடிவமான வெண்பாவில் எழுதுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமே.
அத்தகையோரில் ஒருவரே தகடூர்த் தமிழ்க்கதிர். அவர் எழுதியிருக்கும் வெண்பாக்கள்
நிறைய உள. அவற்றுள் தமிழ்க் கதிர் முப்பது எனும் தொகுப்பின் சிந்தனைகளுள் பன்முகத்
தன்மைகளைச் சுட்டிக்காட்டகின்றது இக்கட்டுரை.
இவரின்
இத்தொகுப்பில் முப்பது வெண்பாக்கள் உள. இத்தொகுப்பு, தமிழ்வழிக் கல்வி வெண்பா விளக்கு எனும் இதழில் வெளிவந்துள்ளது. இவ்விதழின்
நோக்கங்கள்: 1.தமிழ்வழிக் கல்வி வெண்பாவைத் தொடர்ந்து
வெளியிடுவது, 2.வெண்பா தமிழரங்கம் எனத் தமிழ் மொழியில்
பல்துறையைப் பாடுவது, 3.தமிழறிவால் உலகின் (நமது உலகம்
பகுதி) மேன்மையைக் காப்பது எனும் முக்கொள்கையை உடையதாக விளங்குகின்றது (2015:2).
இச்சிறப்புமிகு இதழில் வெளிவந்த தொகுப்பே தமிழ்க்கதிர் முப்பது. இத்தொகுப்பால் இடம்பெற்ற முப்பது வெண்பாக்கள் கல்விழி நூலாசிரியன் சிறப்பு, நூலின் சிறப்பு, மனிதன்
வாழ வேண்டிய வழிமுறை, இயற்க்கையின் சிறப்பு, உலகப் பொதுமையை ஏற்கும் தன்மை, சங்கப்பாடல்களின்
சிறப்பு, வாழ்க்கை, படைப்பாற்றல்,
பொதுநலம் போல்வன கருத்துக்களை மையமிட்டனவாக அமைந்துள்ளன. அவை
குறித்து சிறிது விளக்குதும்.