தொல்காப்பியத்தைப் பைத்தான் தொழில்நுட்பத்தோடு கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு இந்தப் பாடம் ஒரு புதிய அனுபவத்தைத் தரக் காத்திருக்கின்றது. அப்படி என்ன அனுபவம் எனும் எண்ணம் உருவாகின்றதா? அது தொழில்நுட்ப முறையிலான விளக்கமாகும். அது என்ன தொழில்நுட்ப விளக்கம் என்ற வினா எழுகின்றதா? அது மனித மொழியைப் போன்று கணினி மொழியாகிய பைத்தான் அடிப்படையிலான விளக்கமாகும். இப்படி விளக்குவதனால் என்ன நடக்கும். தொல்காப்பிய விதிகளை மையமிட்ட தொழில்நுட்பம் உருவாகும். தட்டச்சுப் பிழைகளைச் சரிசெய்யும் நுட்பம் இன்னும் பொலிவுறும். இக்கால மாணவர்கள் மொழியைப் பிழையுடன் எழுதி வருவது பெரும் மன வருத்தைத் தருகின்றது. அதுவும் குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உயிர், மெய், குறில், நெடில் எழுத்துக்களைக்கூட அவர்கள் கற்காமல் உயர்கல்வி வரை வந்திருக்கின்றனர். இதுபோன்ற நிலைகளை ஓரளவிற்கு எதிர்காலத்தில் குறைத்திட இதுபோன்ற கற்றலும் தேவைப்படும். தொழில்நுட்ப மேம்பாட்டில் விளையாட்டுக் குறுஞ்செயலிகள் உருவாக்கவும் இந்தக் கற்றல் மிக முக்கியமானதே. ஆகையால் இந்தக் கட்டுரை அதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு அமைகின்றது. அதுமட்டுமின்றித் தொல்காப்பிய இலக்கணம் கணினி மொழிக்கு ஏற்ப எழுதப்பெற்றிருக்கும் சிறப்பையும் இக்கட்டடுரை வலியுறுத்துகின்றது.