முன்னுரை
பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப்புதினத்தில் இடம்பெறும் பல்வேறு தகவல்களை இக்கட்டுரையின் முன்வைக்கின்றது.
பதிப்பாளர் குறிப்புரையில் ஒத்தைப்பனையின் சிறப்பு
பதிப்பாளர் குறிப்புரையில் பழமன் எழுதிய ஒத்தைப்பனை நூலின் சிறப்பு இடம்பெற்றுள்ளது. அக்குறிப்பு வருமாறு;-
மேற்குத் தமிழகத்து வேளாண் குடிகளின் கைக்கும் வாய்க்கும் எட்டாத, துயரம் மிகுந்த வாழ்க்கையினை இந்த நாவல் பதிவு செய்துள்ளது. வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் நொடிந்து போன வாழ்க்கை நடத்தும் சம்சாரி குடிக்கும் சீட்டாட்டத்திற்கும் பலியாகும் போது குழுகின்ற துன்பம் மீண்டும் அந்த குடும்பம் தலையெடுக்க ஒட்டாமல் ஒரே விதமான சுற்றுப் பாதையில் வந்து கொண்டிருக்கும் போது தாத்தாகாலத்தில் நாயக்கருக்கு செய்த உதவியை எண்ணிப் பார்த்து அவரது ஜின்னிங் பேக்டரியில் செல்லத்திற்கு நல்ல பொறுப்பளித்து பணிக்கமர்த்தும் போது இந்நாவல் நிறைவடைந்து விடுகின்றது.
இதுமட்டுமன்றி,
"சீட்டு ஆடின காலத்திலே அவர் தோட்டத்திலேயே ஒரு மூலையில் சும்மா படுத்திருக்கக் கூடாதான்னு நெனச்சேன்... இப்போ ஊரை விட்டே போயிட்டாரு. சீட்டாடிட்டே ஊரிலேயே இருக்கக் கூடாதான்னு நெனைக்கிறேன்... சத்தியமா அப்படிந்தான் நெனைக்கிறேன்... எங்கே எந்த கோலத்தில் இருக்கிறாறோ" என்று காணமால் போன கணவனை நினைத்து எங்கி கதறியழுகின்ற காளியம்மாள், அன்பே உருவான செல்லம். தொழிற்சங்கத்து மாமன் வடிவேலு, அன்புக்கும் நியாயத்திற்கும் கட்டுபட்ட சின்னையன் இளகிய மனமும், உற்றாறை அரவணைக்கும் பண்பும் கொண்ட மங்களம் என்று புதினத்தின் உயிர் பெற்று உலவுகின்ற கதாபாத்திரங்களை கொண்டது இக்குறு நாவல். மண்ணின் மணம் வீசும் இந்த நாவலைப் படைத்த பழமன் பாரட்டுக்களுக்கு உரியவர். இந்நாவலை வெளியிட வாய்ப்பளித்த நூலாசிரியருக்கு நன்றி. தமிழ் வாசகர்களிடயே இந்நாவல் மிகுந்த வரவேற்பினைப் பெறும் என நம்புகிறோம்.
என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளது. இவ்விரு குறிப்புகளும் ஒத்தைப்பனை புதினத்தின் சிறப்பை மேலும் உணர்ந்துகொள்ள உதவுகின்றன. அந்நாவலினை வாசிப்பதன் மூலம் கொங்கு வட்டார மக்களின் வாழ்வியலை உணர்ந்து கொள்ளலாம். அதைப்போல கௌதம நீலாம்பரன் அவர்களின் குறிப்பும் கவனிக்கத்தக்கது.
செம்மொழித் தமிழின் சிறப்பினைப் போற்றிக் கொண்ட உலகளாவிய தமிழறிஞர்களை அழைத்து ஓர் ஒப்பற்ற மாநாடு, கோவை மாநகரில் நடத்தப்பட்ட பொன்னான தருணத்தில், அதே கோவையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரின் அருமையான தமிழ் நவீனத்தை வெளியிடுகிற 'பாவை பப்ளிகேஷன்ஸ்' புத்த நிறுவனத்தை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
'ஒத்தைப் பனை' என்கிற இந்த ஒப்பற்ற நவீனத்தை எழுதியுள்ள எழுத்தாளர் பழமன் அவர்களை நான் ஓர் இலக்கிய விழாவின் மேடையில்தான் சந்தித்தேன். அது, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியப் பரிசளிப்புகள் நிகழ்ந்த விழா. 'இலக்கியப் பீடம்' மாத இதழின் சார்பில் நிகழ்த்தப்பெற்ற சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்ற கதைகளை வாசித்துப் பரிசுக்குரியவற்றைத் தெரிவு செய்யும் நடுவர்களில் நானும் ஒருவனாக இருந்ததால், அந்தப் பரிசளிப்பு விழா மேடையில் நானும் அமர்ந்திருந்தேன். என்னருகில் பழமன் அமர்ந்திருந்தார். இலக்கியப்பீடம் நிகழ்த்திய அமரர் ரங்கநாயகி அம்மாள் நிலைய நாவல் போட்டியில் கலந்துகொண்டு, பழமன் வெற்றி பெற்றிருந்தார். அந்தப் பரிசைப் பெற அங்கு வந்து அமர்ந்திருந்த பழமன், இந்த நவீனம் பற்றிக் குறிப்பிட்டு, இதற்கு முன்னு எழுதித்தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். நானு மகிழ்வுடன் இசைவு தெரிவித்தேன்.
பொன் ஊற்று போல, அமுதனைய உணவுப் பொருள் நகுஅள்ளியள்ளி வழங்குகிற விளைநிலங்கள் எவ்வாறெல்லாம் மானுடரின் மடமையினால் புறம் தள்ளப்படுகின்றன என்கிற வேதனையை வெளிப்படுத்த எண்ணம் கொண்டு, ஓர் அருமையான விவசாயக் குடும்பத்தைப் பின்புலமாகக் கொண்டு அந்த உயரிய நவீனத்தைப் படைத்தளித்துள்ளார், பண்பட்ட எழுத்துகளால் பரிசுகள் பல பெற்று, மேம்பட்டுத் திகழும் எழுத்தாளர் பழமன்.
இந்தக் கதையை வாசிக்க, வாசிக்க இதனுள் மூழ்கிப் போனேன் நான். சமூகப் புதினங்கள் என்கிற பெயரில் பலரும் காதல் கதைகள், துப்பறியும் கதைகள், திகில் மற்றும் மர்மக் கதைகளே எழுதிக் குவிக்கிறார்கள். படிக்க விறுவிறுப்பும், சுவராஸ்யமும் அமைவது மட்டுமே அவசியம் என்றொரு கருத்து அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. எழுதும் உத்திகளால் அவை மேம்பட்டுத் திகழ்கின்றன. அதிக வரவேற்பும் பெறுகின்றன என்பது உண்மைதான். ஆனால், அவற்றில் சமூகப் பிரக்ஞை என்பது மருந்துக்கும் இருப்பது கிடையாது.
அர்த்தமற்ற ஆயிரம் கதைகளை வீணே விமரிசித்துக் கிடப்பதைவிட, ஓர் அருமையான, ஆழமான சமூகப் புதினத்தைப் பாராட்டிக் கொண்டிருப்பது உசிதம் என எண்ணுபவன் நான். அந்த வகையில் பழமன் எழுதியுள்ள இந்த அருமையான சமூகச் சித்திரத்தைப் பாராட்டுவதில் நான் பெருமைப்படுகிறேன்.
இங்கே இக்கதையின் சுருக்கத்தை நான் எழுதுவது அவசியமில்லை என்றெண்ணுகிறேன். கோவை மாவட்டச் சிற்றூர் ஒன்றில் கதை தொடங்கினாலும், கொங்குத் தமிழன் மணி முழுவதையுமே இக்கதை பிரதிபலிப்பதாகவே நான் கருதுகிறேன். மங்களம் என்னும் மங்கையின் மாடு, சின்னையாவின் தோட்டத்தில் போய்மேய்வதில் கதை தொடங்கும் போதே களைகட்டிவிடுகிறது. சிறு சிறு சீண்டல்கள், பின் நிஜக் காதலின் மங்கல ஊர்வலம், பெரியோர் பார்த்து மணம் பேசுதல் என, கிராமிய இலக்கண வரம்புகளை மீறாமல் கதை விறுவிறுப்பாக விரைகிறது.
சின்னையா, பிளேக் நோய்க்குப் பெற்றோரைப் பறிகொடுத்தவன். பெரியப்பா குடும்பமே அவனுக்கு ஆதரவு பெரியப்பா முருகையன், பெரியம்மா காளியம்மாள் அவர்கள் புதல்வி செல்லம், புதல்வன் சுப்பு என்கிற அழகியக் குடும்பத்தைச் சுற்றிச் சூழ்ந்து நிகழும் சம்பவங்கள்தான் கதைத்தளம்.
மண்ணைப் பற்றிச் சொல்வதானாலும் மனிதர்களைச் சொல்லாமல் முடியுமா?
விவசாய நிலம், கிணறு தோண்டுதல், முழத்திற்கு மூவாயிரம் செலவு என்று பணம் தண்ணீராய் விரயமாதல், கிணற்றுக்குள் உள்ள பாறையை வெடி வைத்துத் தகர்க்கும்போது, வெடி விபத்து, கூலித் தொழிலாளர் மண்டை பிளந்து மடிதல் என்று மண்ணும் மனிதரும் சதையும் இரத்தமுமாகச் சேர்த்தே கதை நெடுகிலும் பேசப்படுகின்றனர்.
விவசாய பூமியில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், முருகையன் குடிக்கு அடிமையாதல், சீட்டாடுதல், இவற்றால் எல்லாம்அந்த நல்ல விவசாயக் குடும்பம் எப்படியெல்லாம் இன்னல்களைச் சந்திக்க நேருகிறது என்று, கதை நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று காட்சிகளில் சஞ்சரிக்கச் செய்கிறது.
காளியம்மாள் படும் துயரை அவர்கள் வார்த்தைகளில் கேட்டால் நெகிழாத நெஞ்சங்களும் நெகிழும் என்பது உறுதி. இதோ அந்த அம்மாள் பேசுகிறார்:
"பொதுவா என் கஷ்டத்தை நான் இதுவரை யாரிடமும் சொன்னதில்லே. அது எனக்குப் பிடிக்கிறதும் இல்லே. சின்னையன் கிட்ட கூட சொல்ல மாட்டேன். ஆனால் உன்னெப் பாத்ததும் எல்லாத்தையும் சொல்லித் தீர்க்கணும் போல் இருக்குது. அவரைக் கைபிடிச்ச நாளிலிருந்து என்ன சுகத்தைக் கண்டேன்? தோட்டமுண்டு நானுண்டு... மாடா பாடுபட்டு என்ன பலன்? கடன்தான் ஏறிட்டுப் போச்சு... எங்கம்மா என் கலியாணத்தப்ப முப்பது பவுன் நகை போட்டு என்னை அனுப்பி வச்சாங்க... எல்லாமே எப்படியோ போச்சு... இப்போ செல்லத்தின் கழுத்தைப்பாரு... நான் பாவியம்மா... நாலு பேரைப் போல வாழ் நான் புண்ணியம் செய்யலை. என்னைப் படைச்ச கடவுள் இப்படிப் படைச்சிட்டான்... யாரைக் குத்தம் சொல்ல...?"
ஏதோ காளியம்மாள் தன் புதல்வியை நல்ல வண்ணம் கரையேற்ற முடியாமல் புலம்புவதுதான் கதை என எண்ணிவிட வேண்டாம். இது ஒரு காளியம்மாள் குடும்பத்துக் கஷ்டமோ, நிலவரமோ இல்லை. எண்ணற்ற விவசாயக் குடும்பங்களின் துயர் நிலைதான். கோவை மாவட்டப் பின்புலக் கதைதான் என்றாலும் கூட, தமிழ்நாட்டின் எந்தப் பகுதி விவசாயக் குடும்பத்திலும் இதே நிகழ்வுகள் உண்டுதான்.
இன்று, எதார்த்தப் பிரதிபலிப்புடன் கூடிய எத்தனையோ திரைப்படங்கள் வருகின்றன, வரவேற்பும் பரிசுகளும் பெறுகின்றன. அப்படி ஒரு நல்ல இயக்குநரின் பார்வை பட்டு, இக்கதையும் திரைப்படமாக எடுக்கப் பெற்றால், சர்வதேசக் கவளிப்பை இக்கதை பெறக்கூடும். அதற்கான சகல தகுதிகளும் சிறப்பம்சங்களும் இப்புதினத்தில் அமைந்துள்ளன.
பழமன் வெற்றி பெற வேண்டும்! அவருடைய படைப்புகள் உயரிய விருதுகள் பல பெற வேண்டும்.
இக்குறிப்புகள் அப்புதினத்தைப் பற்றிய ஒரு பகுதியான பார்வையை முன்வைத்துள்ளது.
கதைமாந்தர்கள்
- இராமசாமிக் கவுண்டர்
- முருகையன்
- காளியம்மாள்
- செல்லம்
- சுப்பு
- சின்னையன்
- மங்களம்
- குமார்
இனிவரும் குறிப்புகள் இவை தவிர்த்த பார்வைகளை முனவைக்கும். அவை தனித்தனிக் கட்டுரைகளாக இனி வெளிவரும்.
குறிப்பு - பதிப்புரைக் குறிப்புகளும், வாழ்த்துரைக் குறிப்புகளும் அவ்வாறே தந்திருப்பதன் நோக்கம் இந்நூல் குறித்த அவர்களின் பார்வையை அவ்வாறே தருவேண்டும் என்பதனாலே. இனிவரும் இந்நூல் குறித்த எனது பார்வையைத் தனித்த கட்டுரைகளில் எழுத இருக்கின்றேன்.
பழமனின் ஓத்தைபனை - கதை மாந்தரை பற்றி கூறவும்.
பதிலளிநீக்கு