நாமகள் இலம்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாமகள் இலம்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜூலை, 2024

சீவகசிந்தாமணி - நாமகள் இலம்பகம்

(கதைக் சுருக்கம்)

இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் நிரம்பிய இவ் வேமாங்கத நன்னாட்டை இராசமாபுரம் என்னும் சிறந்த நகரத்தின்கண்ணிருந்து சச்சந்தன் என்பான் செங்கோலோச்சினன். இம் மன்னர் மன்னன் கட்டிளமையும், பேரழகும், பேராற்றலும், நுண்ணறிவும், வண்மையும், பிறவும் ஒருங்கேயுடையனாய் விளங்கினான். இவன் அருட்குடைத் தண்ணிழலில் வையகம் மகிழ்ந்து வைகியது.

இம் மன்னன் தன் மாமனாகிய விதையநாட்டரசன் மகள் விசயை என்பவளை இனிதின் மணந்தான். விசயை ஒப்பற்ற பேரழகுடையவள்; நற்குணங்கட்கு உறையுள் போன்றவள். கலங்காக் கற்புடைய காரிகை. சச்சசந்தன் இவள் பெண்மை நலத்திற் பெரிதும் ஈடுபாடுடையனாய் அவளை இமைப்பொழுதும் பிரியவியலாதவனாயினன். அவளோடு உடனுறைதற்குத் தன், அரசியற் கடமைகள் இடையூறாதல் கண்டு தன் அமைச்சருள் ஒருவனாகிய கட்டியங்காரனை அழைத்து அரசாட்சியை அவன் பால் ஒப்புவித்துத் தான் உவளகத்தே விசயையோடு நொடிப் பொழுதும் பிரிவிலனாய் உறைந்தின்புற்றனன்.