(கதைக் சுருக்கம்)
இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் நிரம்பிய இவ் வேமாங்கத நன்னாட்டை இராசமாபுரம் என்னும் சிறந்த நகரத்தின்கண்ணிருந்து சச்சந்தன் என்பான் செங்கோலோச்சினன். இம் மன்னர் மன்னன் கட்டிளமையும், பேரழகும், பேராற்றலும், நுண்ணறிவும், வண்மையும், பிறவும் ஒருங்கேயுடையனாய் விளங்கினான். இவன் அருட்குடைத் தண்ணிழலில் வையகம் மகிழ்ந்து வைகியது.
இம் மன்னன் தன் மாமனாகிய விதையநாட்டரசன் மகள் விசயை என்பவளை இனிதின் மணந்தான். விசயை ஒப்பற்ற பேரழகுடையவள்; நற்குணங்கட்கு உறையுள் போன்றவள். கலங்காக் கற்புடைய காரிகை. சச்சசந்தன் இவள் பெண்மை நலத்திற் பெரிதும் ஈடுபாடுடையனாய் அவளை இமைப்பொழுதும் பிரியவியலாதவனாயினன். அவளோடு உடனுறைதற்குத் தன், அரசியற் கடமைகள் இடையூறாதல் கண்டு தன் அமைச்சருள் ஒருவனாகிய கட்டியங்காரனை அழைத்து அரசாட்சியை அவன் பால் ஒப்புவித்துத் தான் உவளகத்தே விசயையோடு நொடிப் பொழுதும் பிரிவிலனாய் உறைந்தின்புற்றனன்.
இஃதிங்ஙனமாக, ஒருசில திங்களிலேயே விசயை கருவுற்றனள். ஒருநாள் விசயை மூன்று கனாக்கண்டு அவற்றைச் சச்சந்தனுக்குணர்த்தி அவற்றின் பயன்களைத் தனக்குணர்த்தும்படி வேண்டினாள். அக் கனவுகளுள் ஒன்று தனக்கு வரும் கேட்டினைக் குறிப்பதுணர்ந்த சச்சந்தன், தன் உள்ளுணர்வின் தூண்டுதலாலே ஒரு தச்சனை யழைத்து வான்வழிப் பறந்து செல்லுமொரு மயிற்பொறி செய்வித்தனன். அம் மயிற் பொறியினை வானத்தே செலுத்தவும் கீழிறக்கவும் விசயைக்குக் கற்பித்தனன்.
பெறலருந்திருப் பெற்றபின் யாவர்க்குஞ் சிந்தனை பிறிதாதல் இயல்பன்றோ? அரசாட்சிப் பொறுப்பனைத்தும் தன்பால் எய்தியிருக்கும் இச்செவ்வி இதனைத் தன்னுடையதாகவே ஆக்கிக்கொள்ளத் தகுந்ததொரு செவ்வியாகும் என்று கருதிய கட்டியங்காரன் அமைச்சரோடு ஆராய்ந்தனன்; அவருட் சிலர் இக் கருத்தினை எதிர்த்துக் கட்டியங்காரனைத் திருத்த முயன்றனர்; கட்டியங்காரன் அவர் நல்லுரை கேளானாய்த் தான்கருதியதே முடிப்பத் துணிந்து ஆவன செய்து அரசனை அந்தப் புரத்தில் வைத்தே நால்வகைப் படைகளுடன் முற்றுகையிட்டனன்.
இத் தீச்செயல் உணர்ந்த சச்சந்த மன்னன் சீறினன் ; என் செய்வான்! மகவின் நலங்கருதி விசயையை மயிற்பொறியிலேற்றி வானத்தின் வழியே புறம்போக்கினன். தான் ஒருவனே போர்க்கோலம் பூண்டு ஒப்பற்ற தன் தறுகண்மையாலே அப் பெரும் படைகளை ஒருங்கே எதிர்த்து நீண்டபொழுது போர்செய்து இறுதியில் கட்டியங்காரனாற் கொல்லப்பட்டனன்.
வெற்றி முரசொலி நங்கை விசயையின் செவியை எட்டியது. சச்சந்தன் முடிந்தமை உணர்ந்தாள்; மயங்கினள்; மயிற் பொறியைச் செலுத்த மறந்தாள் ; திகைத்தாள் ; மெய்ம்மறந்தாள். பாவம்; பிறிதென்செய்வாள் பேதை!
முறுக்குடைந்த மயிற்பொறி மெல்ல மெல்ல வீழ்ந்து அந்நகரத்துப் புறங்காட்டிலிறங்கிக் கால் குவித்திருந்தது. அப்பொழுதே விசயை அவ்விடத்திலேயே கருவுயிர்த்தாள் ; குணகடலில் தோன்றும் இளஞாயிறுபோன்றதோர் ஆண்மகவு அவள் வயிற்றினின்றும் தோன்றியது. ஒருவாறு மயக்கந் தீர்ந்த விசயை, அவ்வருமந்த மகவின் நிலைமையையும், மன்னனுக்குற்ற கேட்டினையும், கருதிப் பெரிதும் வருந்தினள். 'திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை' எனப்பதற்கிணங்க அம் மயானத்துறையும் தெய்வமொன்று விசயையின் தோழி சண்பகமாலை என்பாளின் வடிவங்கொண்டு அவள்முன் வந்து தோன்றித் துணைசெய்வதாயிற்று. ”கோப்பெருந் தேவி ! இப்பொழுது இக்குழவியை எடுத்துப்போய்ப் புரப்பான் ஒருவன் ஈண்டு வருவன். ஆதலால் இதனை இங்குக் கிடத்தி யாம் சிறிது பொழுது மறைந்திருத்தல் வேண்டும்” என்று விசயைக்குணர்த்த இருவரும் அயலிலே சென்று மறைந்திருந்தனர்.
அப்பொழுது அந்நகரத்திலுள்ள கந்துக்கடன் என்னும் வணிகன் ஒருவன் இறந்துபட்ட தன் மகவைப் புதைத்தற்கு அங்கு வந்தனன். விசயை மகவினைக் கண்டு வியந்தான்; தன் மகவைப் புதைத்துவிட்டு இம் மகவினை ஆர்வத்துடன் எடுத்துப் போய்த் தன் மனைவி சுநந்தைக்குக் காட்டி இறந்ததாகக் கருதிய தம்மகவே உயிர்பெற்றதெனக் கூறிக் கொடுத்தான். அவளும் அதனை ஏற்று உவகையுடன் வளர்த்தனன். கந்துக்கடன் மயானத்தே இக்குழவியை எடுத்தபொழுது அது தும்மிற்றாக; ஆண்டு மறைந்திருந்த தெய்வம் 'சீவ' என்று வாழ்த்தியது. அது அவன் காதிற் பட்டபடியால் அக்குழந்தைக்குச் 'சீவகன்' என்று பெயரிட்டனன். சுநந்தை பின்னர் நந்தட்டன் என்னும் ஒரு மகவினை ஈன்றாள்.
இனி, விசயையை முன்கூறப்பட்ட தெய்வம் அழைத்துப் போய்த் தண்டகாரணியத்தே சென்று ஆண்டுமறையும் துறவோருடன் கூட்டிய பின்னர் மறைந்தது. விசயை அவணிருந்து தன் மகவின் நலங்கருதி நோன்பு செய்திருந்தனள்.
கந்துக்கடன் சீவகன் நந்தட்டன் முதலியோரை நல்லாசிரியரிடத்துக் கலைகள் பலவும் பயிற்றுவித்தான். அச்சணந்தி என்னும் அப்பேராசிரியர் சீவகனுடைய நுண்மாணுழைபுலனை உணர்ந்து மகிழ்ந்தனர். சீவகனைத் தனியிடத்தே அழைத்துச் சென்று ஒரு கதை கூறுவார்போன்று அவனது வரலாற்றை உணர்த்தினர். பின்னரும், “ஓராண்டு முடியுமளவும் நீ நின்னை வெளிப்படுத்தாதே இருத்தல் வேண்டும், “ என்றும் வற்புறுத்தி வரங்கொண்டனர்.
அச்சணந்தியாசிரியர் தம் வரலாற்றையும் சீவகனுக்குணர்த்தி அவன்பால் விடைபெற்றுப் போய்த் தவம் செய்து வீடுபெற்றுயர்ந்தனர். இராசமாபுரத்தில் சீவகன், நந்தட்டன் முதலியவரோடு வைகுவானாயினன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன