முன்னுரை
கதைகள் சொல்வதும் கேட்பதும் தமிழர்களின் தொன்மையான வழக்கம். இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள் எனப் பல வடிவங்களில் கதைகள் தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட்டு வந்தன. இந்தக் கதை மரபு, அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின் புதிய பரிமாணத்தைப் பெற்றது. இதன் விளைவாக, ஒரு புதிய இலக்கிய வடிவம் தோன்றியது. அதுவே, சிறுகதை. இந்த இலக்கிய வடிவம் எப்படித் தோன்றி, எப்படி வளர்ந்தது, அதில் யாரெல்லாம் பங்களித்தார்கள் என்பதைக் கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ் இலக்கிய வரலாறு என்ற கண்ணோட்டத்தில் இக்கட்டுரை விவரிக்கிறது.