அறிமுகம்
‘விக்கிமூலம், விக்கிமீடியா அறக்கட்டளையால் இயக்கப்படும் கட்டற்ற மின் உள்ளடக்க நூலகமாகும். இத்திட்டத்தை அக்டோபர் 2022 நிலவரப்படி, 72 மொழிகள் பயன்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து வகையான மூலநூல்களையும் ஒருங்கே திரட்டி, தட்டச்சுத் தரவாக்கமாக மாற்றி, பல்வேறு பதிவிறக்க நுட்பங்களுடன் வழங்குவதே ஆகும். முதலில் இத்திட்டம் நூல்களைச் சேமிப்பதற்கான காப்பகமாகக் கருதப்பட்டது. இது பின்பு ஒரு பொது உள்ளடக்க நூலகமாக விரிவடைந்தது. இந்தத் திட்டம் விக்கிமூலம் என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக 2003ம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது பின்பு களப்பெயராகவும் (Domain name) உருப்பெற்றது[1]. இத்தகு சிறப்பைக் கொண்ட தமிழ் விக்கிமூலத் திட்டத்தில் உலகத்தார்கள் ஏற்றுக்கொண்ட கட்டற்ற உரிமத்துடன் வெளியிடப்பெற்ற திருக்குறள் சார்ந்த நூல்களைப் பதிவேற்றுவது தேவையான ஒன்றாகும்.
பல்வேறு காலக்கட்டத்தில் திருக்குறள் ஆராய்ச்சித் தொடர்பான பதிப்புகள், உரை நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், மொழியாக்க நூல்கள், பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகள் முறையாகக் கிடைக்கின்றன. ஆனால் இணைய வளத்தில் முறையாகத் தொகுத்து வழங்கப்பெறவில்லை. எனவே, அவற்றைக் கவனத்தில் கொண்டு இணையத்தில் மின்னூலாகப் பதிவேற்றப்பட வேண்டும். அதன் மேம்பாட்டிற்குப் பயன் நல்கும் முறைகளையும் அதனால் ஏற்படும் ஆய்வு முயற்சிகளையும் அறியத் தருவதாய் இக்கட்டுரை முதன்மை நோக்கமாக அமைத்துக் கொள்கின்றது.