திங்கள், 13 ஜனவரி, 2025

தமிழ் விக்கிமூலத்தில் திருக்குறள் இருப்பும் தேவையும்

அறிமுகம்

‘விக்கிமூலம், விக்கிமீடியா அறக்கட்டளையால் இயக்கப்படும் கட்டற்ற மின் உள்ளடக்க நூலகமாகும். இத்திட்டத்தை அக்டோபர் 2022 நிலவரப்படி, 72 மொழிகள் பயன்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து வகையான மூலநூல்களையும் ஒருங்கே திரட்டி, தட்டச்சுத் தரவாக்கமாக மாற்றி, பல்வேறு பதிவிறக்க நுட்பங்களுடன் வழங்குவதே ஆகும். முதலில் இத்திட்டம் நூல்களைச் சேமிப்பதற்கான காப்பகமாகக் கருதப்பட்டது. இது பின்பு ஒரு பொது உள்ளடக்க நூலகமாக விரிவடைந்தது. இந்தத் திட்டம் விக்கிமூலம் என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக 2003ம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது பின்பு  களப்பெயராகவும் (Domain name)  உருப்பெற்றது[1]. இத்தகு சிறப்பைக் கொண்ட தமிழ் விக்கிமூலத் திட்டத்தில் உலகத்தார்கள் ஏற்றுக்கொண்ட கட்டற்ற உரிமத்துடன் வெளியிடப்பெற்ற திருக்குறள் சார்ந்த நூல்களைப் பதிவேற்றுவது தேவையான ஒன்றாகும். 

பல்வேறு காலக்கட்டத்தில் திருக்குறள் ஆராய்ச்சித் தொடர்பான பதிப்புகள், உரை நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், மொழியாக்க நூல்கள், பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகள் முறையாகக் கிடைக்கின்றன. ஆனால் இணைய வளத்தில் முறையாகத் தொகுத்து வழங்கப்பெறவில்லை. எனவே, அவற்றைக் கவனத்தில் கொண்டு இணையத்தில் மின்னூலாகப் பதிவேற்றப்பட வேண்டும்.  அதன் மேம்பாட்டிற்குப் பயன் நல்கும் முறைகளையும் அதனால் ஏற்படும் ஆய்வு முயற்சிகளையும் அறியத் தருவதாய் இக்கட்டுரை முதன்மை நோக்கமாக அமைத்துக் கொள்கின்றது.

அச்சு வடிவங்களில் திருக்குறள்

முதலில் அச்சு வடிவங்களில் திருக்குறள் சார்ந்த நூல்கள் வெளிவந்துள்ள நன்மைகள் குறித்து அறிவோம். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பிக் கற்கக் கூடிய நூல் திருக்குறள்.  இந்த நூல் பன்னெடுங்காலமாய்ப் பன்முகப் பார்வையில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. தமிழிலக்கியங்களில் அதிகம் ஆய்வு செய்யப்பட்ட நூலாக இது திகழ்கின்றது என்பது திண்ணம். அனைவருக்கும் எளிதில் கிடைக்குமளவிற்குப் பல்வேறு உரை வடிவங்களில் திருக்குறள் ஆயிரத்திற்கு மேற்பட்டுக் கிடைக்கின்றது. இருப்பினும் தொழில்நுட்ப மாற்றத்தினால் உலகமே இணையத்தில் இணைந்த வண்ணம் இருக்கின்றபோது, அதற்கேற்ப நூல்களை பதிவேற்றம் செய்யப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

1987ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம், திருக்குறள் ஆய்வு மையம் திருக்குறள் ஆய்வும் மதிப்பீடும் எனும் நூலை வெளியிட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர் கு.மோகனராசு. இவர் திருக்குறள் ஆய்வு மதிப்பீடு, திறனாய்வு நோக்கில் திருக்குறள் எனும் தலைப்பில் 451 பக்கங்களில் திருக்குறளை அடிப்படையாக வைத்துச் செய்யப்பெற்ற ஆய்வுகளை அடையாளப் படுத்தியுள்ளார். 

இன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நூலகம் சென்று குறிப்பெடுத்து மாணவர்களும், ஆய்வாளர்களும் ஆய்வினை மேற்கொண்டனர். ஆனால் இன்றையச் சூழலில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் மின்னூல், மின்னூலகம், மின் இதழ்கள், இணைய வலைத்தளங்கள், வலைப்பூ எனப் பல்வேறு வகைகளில் இணையம் சார்ந்த பாட, உரை நூல்கள் பெருகிவிட்டன. அவற்றை,

  1. திருக்குறள் மூலப்பதிப்பு

  2. மூலபாட ஆய்வியல்

  3. மூலமும் உரையும் அமைந்த பதிப்புகள்

  4. நுண்பொருள் மாலை பதிப்பு

  5. உரை பதிப்புகள்

  6. உரைத் தொகுப்புகள் 

  7. திருக்குறள் மொழிபெயர்ப்புகள்

  8. திருக்குறள் பதிப்புகள்

  9. திருக்குறள் உரைகள்

எனும் வகைகளில் தொகுத்துப் பார்க்கலாம்.

திருக்குறள் மூலப்பதிப்பு

திருக்குறளின் மூலப் பதிப்புகளுள் பழமையான பதிப்பாகத் திகழ்வது 'திருக்குறள் மூலபாடம்' எனும் தலைப்பில் 1812ஆம் ஆண்டு கிடைத்த நூலாகும். இப்பதிப்பு, இலக்கண இலக்கிய ஆராய்ச்சியைப் பிழையற ஆராய்ந்து சுத்தப் பாடமாக்கப்பட்டது என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. இப்பதிப்பானது தஞ்சை ஞானப்பிரகாசம் என்பவரால் அச்சில் பதிப்பிக்கப்பட்டது. மரவெழுத்தால் அச்சடிக்கப்பட்ட இப்பதிப்புதான் திருக்குறள் பதிப்பு வரலாற்றில் முதல் அச்சு நூலாகத் திகழ்கிறது. தமிழகத்தில் 1712ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது. அதிலிருந்து ஒரு நூற்றாண்டுக் காலம் கழித்துத்தான் திருக்குறள் பதிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 1900க்கு முன்பு வெளிவந்த திருக்குறள் பழம் பதிப்புகளை அடைவுப் படுத்தலாம். அவை வருமாறு:-

  • 1812 - திருக்குறள் மூலபாடம்.

  • 1831 - திருவள்ளுவமாலையும் தாண்டவராய திருக்குறள் மூலமும்.

  • 1842 - திருவள்ளுவமாலை திருக்குறள் மூலம்.

  • 1848 - திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையைத் தழுவிச் செய்யப்பட்ட உரையும் [2].

இவை பழமையான பதிப்புகளே. ஆனால் இன்று வரை பல பதிப்புகள் மூலம் மட்டும் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. அவற்றையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

மூலபாட ஆய்வியல்

பல ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு நூலினைப் பதிப்பிக்கும் போது, ஆசிரியரின் உண்மைப் பாடத்தைத் தெரிந்து பதிப்பது சிக்கலானவை. நூல் பதிப்பிக்கும் காலக்கட்டத்தில் அவர் இறந்திருக்கலாம். எனவே நூலாசிரியர் தாம் கூற வந்த கருத்துக்களை அறிந்து கொள்வது சற்றுச் சிக்கலான ஒன்றாகும். இருப்பினும் நூலின் உள்ளே கிடைக்கின்ற சான்றுகள், நடை, சொல்லாடல்கள், வரலாற்றுக் குறிப்புகள் முதலியனவற்றைக் கொண்டு மூலபாட ஆய்வினைத் தொடரலாம். அதுமட்டுமின்றி மூலபாடம் தொடர்புடைய நூல்களையோ, சமகாலப் படைப்புகளைக் கொண்டோ மூலபாட ஆய்வினை எழுதத் துணியலாம். அந்த வகையில் 1842ஆம் ஆண்டு திருக்குறள் மூலபாடம் எனும் நூல் வெளியாகியுள்ளது.

மூலமும் உரையும் அமைந்த பதிப்புகள்

திருக்குறள் மூலமும் உரையும் அமைந்த  நூல்களைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம்.

  1. பழைய உரைகள்

  2. உரைத்தழுவல்கள்

  3. உரைத் தொகுப்புகள்

இவற்றுள் பரிமேலழகர் உரையே முதலில் பதிப்பிற்கு வந்தது. இதனை மு.இரா.இராமாநுசக் கவிராயர் அமெரிக்க மிசியோன் அச்சுக் கூடத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் இராமநுசக் கவிராயரின் வெள்ளுரையும் புத்துரையும் வந்தது.

பரிமேலழகரின் உரையைத் தழுவி சரவணப்பெருமாளையரின் உரை பதிப்பிக்கப்பட்டது.

  • 1847ஆம் ஆண்டு சோமசுந்தர உபாத்தியாயரால் பாரதிய விலாச அச்சுக் கூடத்திலும் 1849ஆம் ஆண்டு களத்தூர் வேதகிரி முதலியாராலும் சரவணப்பெருமாளையர் உரை பதிப்பாக்கப் பெற்றது.

  • 1850 - களத்தூர் வேதகிரி தனியே உரையைப் பதிப்பித்தார்.

  • 1893 - இராகவலுநாயுடு

  • 1861 - கந்தசாமிபிள்ளை

  • 1869 - கருணானந்த சுவாமிகள்

  • 1873 - இட்டா குப்புசாமிநாயுடு

  • 1907 - சோமசுந்தர உபாத்தியார்

  • 1884 - பொன்னுசாமி முதலியார்

  • 1875 - வீராசாமிபிள்ளை[2]

முதலியோரின் பதிப்புகள் வெளிவந்தன. இவை அனைத்தையும் விக்கிமூலத்தில் தரக்கூடிய நூல்கள்.

நுண்பொருள் மாலைப்பதிவு

காரிரத்தின கவிராயர் (1550-1575), 'நுண்பொருள் மாலை' எனும் நூலை வெளியிட்டுள்ளார். தண்டபாணி தேசிகரின் உரைத் தொகுப்பு நூலான திருக்குறள் உரை வளத்திலும், அதற்கு முன்பு செந்தமிழிலும் நுண்பொருள் மாலை வெளிவந்துள்ளது. 1980ஆம் ஆண்டு பரிமேலழகரின் உரை நுண்பொருள் மாலை தனியாக வெளிவந்தது. இவ்வாறு நுண்பொருள் மாலை எனும் பெயரில் சில பதிப்புகள் வெளிவந்துள்ளன.

உரைப் பதிப்புகள்

காலந்தோறும் வள்ளுவரின் குறட்பாக்களுக்கு உரைநூல் ஊற்றுப்போல் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. இதுவரை ஓரிலக்கத்திற்கும் மேலான உரைகள் வெளிவந்துள்ளதாகக் கூறுவர். அதிலும் திருக்குறள் பதிப்புகள், உரைகள், ஆய்வுகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அவற்றையெல்லாம் ஒருங்கே தொகுக்கப்பெற வேண்டும். அவற்றுள் சில உரைப் பதிப்புகள் வருமாறு;-

  • 1924 விளக்கவுரை - குப்புசாமி முதலியார்

  • 1928 தெளிபொருள் உரை - கா.சு.பிள்ளை

  • 1930 திருக்குறள் வசனம்- அருணாச்சலக் கவிராயர்

  • 1935 விருத்தியுரை - தண்டபாணி

  • 1935 விருத்தியுரை - வ.உ.சிதம்பரனார்

  • 1936 உரைநடை உரை - வ.சுப.மாணிக்கனார்

  • 1939 பாலருரை  பி.எஸ்.எஸ்.சாஸ்திரியார்

  • 1944 அரும்பதவுரை - இராமசாமிப்புலவர்

  • 1949 குழந்தையுரை - புலவர் குழந்தை

  • 1949 தெளிவுரை - கந்தையா பிள்ளை

  • 1949 தெளிவுரை - மு.வ

  • 1952 குறிப்புரை - வேங்கடராமையா

  • 1952 வெள்ளுரை - இராமநுசக்கவிராயர்

  • 1953 சிறப்புரை - பால்வண்ணன்

  • 1954 விவேகயுருத்திரை - பார்த்தார்

  • 1956 தெளிபொருள் உரை  இரத்தினநாயர் பதிப்பு

  • 1956 தெளிவுரை  ஈர்க்காடு சபாபதி முதலியார்

  • 1959 எளிய பொழிப்புரை - இலக்குவனார்

  • 1960 எளிய உரை - அரசுமணி

  • 1962 நயவுரை - மு.கோவிந்தசாமி

  • 1967 புதுஉரைச்சுருக்கம் - பட்டுச்சாமி ஓதுவார்

  • 1967 புதுஉரைச்சுருக்கம் - கா.அப்பாத்துரையார்

  • 1969 மரபுரை - பாவாணார்

  • 1969 இனிய எளிய உரை - சிவமுத்து

  • தெள்ளுரை  - சாம்பசிவம்

  • 1970 கருத்துரை - சிவமணி[2]

இவற்றுள் பெரும்பான்மையானோர் உரை தமிழ்நாடு அரசின் நாட்டுடைமை நூல்கள் பட்டியலில் வருவன. இவற்றை விக்கிமூலத்தில் பதிவேற்றுவதில் காப்பு உரிமம் சார்ந்த சிக்கல் எழ வாய்ப்பில்லை.

உரைத் தொகுப்புகள்

  • 1951-1952 திருக்குறள் உரைவளப் பதிப்பு - முதுபெரும் புலவர் ச.தண்டபாணி தேசிகர்

  • 1981 உரைக்களஞ்சியம் பாயிரவியல் - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம்

  • 1957  உரைக்கொத்து - திருப்பனந்தாள் காசி மடம்

  • 1957 திருக்குறள் உரை வேற்றுமைப் பதிப்புகள் - சாரங்கபாணி

  • 1968 திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்புத் தொகுப்பு - கி.வா.ஜகந்நாதன்

  • 2021 திருக்குறள் பன்முக வாசிப்பு - மு.வெ.பிரகாஷ் (இதில் இருபது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அதில் மூன்று கட்டுரைகள் திருக்குறள் மொழிபெயர்ப்புகள், பதிப்புகள், உரைகள் பற்றிச் சான்றுகளுடன் விளக்குவதாக அமைகின்றன.)[2]

ஆகிய திருக்குறள் உரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்

திருக்குறள் மொழிபெயர்ப்பு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்பதை ப.மருதநாயகம் நூல்களின் [3] [4] வழியாக அறியலாம். மலையாள மொழியில் முதன் முதலாக முழு நூலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகக் கருத்து. ஆனால் அதன் மொழிபெயர்ப்பாளர் யாரெனத் தெரியவில்லை. இம்மலையாள மொழிபெயர்ப்பினைத் தொடர்ந்து முப்பது மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. செம்மொழிகளில் லத்தீன் மொழியில் முதல் திருக்குறள் மொழிபெயர்ப்பு நிகழ்ந்துள்ளது.  அதனை 1730ஆம் ஆண்டு மொழிபெயர்த்தவர் வீரமாமுனிவர் ஆவார்.  அதுபோல் 1967ஆம் ஆண்டு செங்சி என்பவர் சீன மொழியிலும் சக்ரபாணி ஐயர் சமசுகிருதத்திலும் மொழிபெயர்த்துள்ளனர்.

அதுமட்டுமன்றி அயல்மொழிகளில் 17 மொழிகளிலும், ஆங்கிலத்தில் மட்டும் 44 மொழிபெயர்ப்புகளும் இந்திய மொழிகளில் 12 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கன[2].

திருக்குறள் பதிப்புகள்

1811ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை திருக்குறளுக்கு  139 பதிப்பு நூல்கள் வந்துள்ளன. அவற்றைத் துணைநூற்பட்டியல் [2]-இல் உள்ள கித்துப் இணைப்பின் வழியாகச் சென்று பார்க்கலாம்.  

திருக்குறள் உரைகள்

திருக்குறளுக்குப் பழைய உரைகள், செய்யுள் வடிவ உரைகள், உரைக்கு உரைகள், சமய உரைகள், புதிய உரைகள் போன்ற உரைகள் காணப்படுகின்றன. 1550-75ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை சுமார் 127 உரை நூல்கள் வெளிவந்துள்ளன[2]. 

இதுவரை விளக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் திருக்குறள் ஆய்வு தொடர்பான அச்சு நூல்களில் சில நூல்கள் மட்டுமே மின்னூலாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பான்மையான திருக்குறள் ஆய்வுகள் கண்டுகொள்ளப்படாமலே முடங்கிக் கிடக்கின்றன. இன்னும் திருக்குறள் தொடர்பான ஆய்வுகளை மின்னூலாக மாற்றினால் தமிழ்மொழியின் சிறப்பையையும் திருக்குறளின் பெருமையையும் கண்டு உலகமே வியப்பிக்கக் கூடும்.

விக்கிமூலத்தில் திருக்குறள்

தமிழ் விக்கிமூலத்தில் திருக்குறள் எனும் பெயரில் பின்வரும் பகுப்புகளே உள்ளன. அவை வருமாறு:- 

"திருக்குறள்" எனும் பகுப்பில் 20 நூல்களும் "திருக்குறள் அட்டவணைகள்" எனும் பகுப்பில் 63 நூல்களும் "திருக்குறள் குறித்த நூல்கள்" எனும் பகுப்பில் 7 நூல்களும் இடம்பெற்று உள்ளன [2].

திருக்குறள் சார்ந்து வெளிவந்த நூல்கள் இவை மட்டும்தானா என்றால் இல்லை என்பது விடையாகக் கிடைக்கும். ஏனெனில் ஓலைச்சுவடிகள் தொடங்கி அதன் தரவுகள் கிடைக்கப்பெறுகின்றன. பல்வேறு பொருண்மைகளில் அதன் ஆய்வு முயற்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதை மேலே விளக்கமாகப் பார்த்தோமல்லவா. இருப்பினும் அவை பெரும்பாலும் அச்சு வடிவங்களில் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை மின்னாக்க வடிவமாகக் கொண்டு வருவது காலத்தின் தேவையாகும்.

திருக்குறள் அட்டவணை மேம்பாடு

திருக்குறள் சார்ந்து எழுதப்பெற்ற ஆவணங்கள் அச்சு நூல்களிலேயே முடங்கிவிடக் கூடாது என்பதற்காகவும், திருக்குறள் பனுவலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், தொடர்ந்து பல ஆய்வுகள் திருக்குறள் பனுவலில் நிகழ்த்தவும், குறிப்பாக இயற்கை மொழி ஆய்வுகள் நிகழ்த்துவதற்கான தரவு மேம்பாட்டிற்காகவும் அக்கருத்துக்கள் வலிமை சேர்க்கும் என்பதால் வலியுறுத்தப்பெற்றன. திருக்குறள் அட்டவணை கொண்டிருக்க வேண்டிய உள்ளடக்கங்களைப் பின்வருமாறு கட்டமைக்கலாம். 

  • ஓலைச்சுவடிகளில் திருக்குறள்

    • மூல நூற்சுவடிகள்

    • உரை நூற்சுவடிகள்

  • அச்சு நூல்களில் திருக்குறள்

    • மூலநூல்

    • உரைநூல்

      • பழைய உரைகள்

      • உரைவளம்

      • தற்கால உரைகள்

    • ஆய்வுநூல்

      • இந்திய மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு

      • அயல்மொழிமொழி ஒப்பீடு - ஒப்பாய்வு

      • திராவிட மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு

      • தமிழ் இலக்கிய, இலக்கணங்களுக்கிடையே ஒப்பீடு-ஒப்பாய்வு

    • மொழியாக்கம்

இவ்வாறான வகைப்பாடு காலத்திற்கு ஏற்றதாகும். இதன்படி சிறு முயற்சியைப் பின்வருமாறு பகுத்துப் பார்க்கலாம்.

  • பகுப்பு:திருக்குறள் உரை நூல்கள் (https://ta.wikisource.org/s/b5kf ) - இந்தப் பகுப்பில் 5 நூல்களை அடைவுப்படுத்திப் பார்க்க முடிகின்றது. அவை வருமாறு:-

    • அட்டவணை:திருக்குறள் உரை.pdf 

    • அட்டவணை:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf

    • அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf

    • அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf

    • அட்டவணை:திருக்குறளார் தெளிவுரை.pdf

  • பகுப்பு:திருக்குறள் ஆய்வு நூல்கள் (https://ta.wikisource.org/s/b5ke) - இந்தப் பகுப்பில் 4 நூல்களை அடைவுப்படுத்திப் பார்க்க முடிகின்றது. அவை வருமாறு:-  

    • அட்டவணை:திருக்குறள் புதைபொருள் 1.pdf 

    • அட்டவணை:திருக்குறள் புதைபொருள் 2.pdf  

    • அட்டவணை:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf  

    • அட்டவணை:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf

இவ்வாறான மேம்பாடு காலத்திற்கு ஏற்றதாகக் கொள்ளப்படுகின்றது. அதிலும் இலக்கிய வரலாற்று அடிபடையிலான வகைப்பாடாகவும் இது அமையும்.

திருக்குறள்  நூல் மேம்பாட்டினால் ஏற்படும் விளைவுகள்

விக்கிமூலம் கல்விசார் வளங்களை மேம்படுத்தி வரும் கட்டற்ற தளமாக இருப்பதனால் தமிழில் இயற்கை மொழி சார்ந்த ஆய்வுகள் [5] [6] [7] [8] நிகழ்வதற்குப் பெருந்துணை நல்கும். அவ்வாய்வு மட்டுமின்றி உலகப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஆய்வுகள் நிகழ்த்த இத்தளம் ஒரு நூலகமாகவும் செயல்படும். மேலும் இதனால் விளையும் பயன்களை,

  • திருக்குறள் ஆய்வுகள் தொடர்ந்து பலமுறைகளில் நிகழ

  • இந்திய மொழிகளின் ஒப்பிலக்கிய ஆய்வுகள் எளிதில் நடைபெற

  • உலக மொழிகளின் ஒப்பிலக்கிய ஆய்வுகள் எளிதில் நடைபெற

  • இயற்கை மொழி ஆய்வுகளுக்கான தரவுகள் கிடைத்திட

  • விக்சனரி திட்டங்களில் திருக்குறள் சொற்களை ஏற்படுத்த

  • விக்கித்தரவில் சேர்க்க

  • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்க

  • திருக்குறள் தகவல் பெறுவி கருவியை உருவாக்க

  • திருக்குறள் குறித்த மென்பொருள் உருவக்க

  • திருக்குறள் கற்றல் கற்பித்தல் கருவிகளை வடிவமைக்க

என அறியலாம்.

நிறைவாக…

இதுவரை விளக்கப்பெற்றதின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆங்காங்கு நடைபெறும் திருக்குறள் ஆய்வுகளை ஓரிடத்தில் குவித்து வைக்கும் ஒரு கருவூல நூலகமாகத் தமிழ் விக்கிமூலம் அமையும் என்பதை உணர முடிகின்றது. இது நடக்கும்பொழுது 72 விக்கிமூலத் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடித் திட்டமாகத் தமிழ் விக்கிமூலத்திட்டம் அமையும் என்பதையும் தமிழ் இலக்கிய வரலாற்று அடிப்படையில் விக்கிமூலம் திட்டம் மேம்படும் என்பதையும் முடிபாகக் கொள்கின்றது.

துணைநின்றவை

  1. Wikipedia contributors. (2023, September 20). Wikisource. In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 03:13, October 1, 2023, from https://en.wikipedia.org/w/index.php?title=Wikisource&oldid=1176299772

  2. https://github.com/neyakkoot/Thirukkural_book_researchs

  3. மருதநாயகம் ப., மேலை நோக்கில் தமிழ்க் கவிதை, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2001.

  4. மருதநாயகம் ப., பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், தமிழ்ப் பேராயம், காஞ்சிபுரம், 2014.

  5. https://github-com.translate.goog/narVidhai/tamil-nlp-catalog?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc 

  6. https://inltk-readthedocs-io.translate.goog/en/latest/?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc 

  7. https://github-com.translate.goog/goru001/nlp-for-tamil?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc 

  8. https://www.kaggle.com/datasets/sudalairajkumar/tamil-nlp  

  9. https://www.kaggle.com/datasets/sudalairajkumar/tamil-nlp?select=tamil_thirukkural_test.csv 

  10. Anita R and Subalalitha C N. 2019. Building Discourse Parser for Thirukkural. In Proceedings of the 16th International Conference on Natural Language Processing, pages 18–25, International Institute of Information Technology, Hyderabad, India. NLP Association of India. https://aclanthology.org/2019.icon-1.3.pdf 

  11. https://dokumen.tips/documents/nlp-through-thirukkural-vrnlp.html?page=4

  12. https://vrnlp.com/nlp-through-thirukkural-2/ 

  13. https://github.com/arunrajes/NLP_in_Tamil#nlp_in_tamil 

  14. ப. மருதநாயகம். (2021, ஆகத்து 11). விக்கிப்பீடியா. Retrieved 02:34, அக்டோபர் 2, 2023 from https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&oldid=3219172

  15. திருக்குறள் அகரமுதலி. (2020, அக்டோபர் 10). விக்சனரி. Retrieved 01:40, அக்டோபர் 2, 2023 from https://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF&oldid=1898912.

  16. திருக்குறள் சொல்லிலக்கண அகரமுதலி. (2022, மார்ச் 20). விக்சனரி. Retrieved 01:42, அக்டோபர் 2, 2023 from https://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF&oldid=1967139

  17. திருக்குறள் பரிமேலழகர் உரை. (2023, ஏப்ரல் 17). விக்கிமூலம். Retrieved 01:42, அக்டோபர் 2, 2023 from https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88&oldid=1503583

  18. திருவள்ளுவமாலை. (2020, மார்ச் 2). விக்கிமூலம். Retrieved 01:43, அக்டோபர் 2, 2023 from https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88&oldid=1067750

  19. திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி. (2020, மார்ச் 7). விக்சனரி. Retrieved 01:44, அக்டோபர் 2, 2023 from https://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF&oldid=1890819

  20. திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி. (2020, மார்ச் 3). விக்சனரி. Retrieved 01:44, அக்டோபர் 2, 2023 from https://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF&oldid=1890687

  21. பிரகாஷ்.மு.வெ, திருக்குறள் பன்முக வாசிப்பு, 2021, பரிசல் முதல் பதிப்பு, பரிசல் புத்தக நிலையம் சென்னை. 

  22. திருக்குறள் ஆய்வு மையம் திருக்குறள் ஆய்வும் மதிப்பீடும், 1987, சென்னைப் பல்கலைக்கழகம்

  23. "விக்கிப்பீடியா." விக்கிப்பீடியா. 8 ஆக 2023, 10:41 UTC. 13 செப் 2023, 12:54 <https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&oldid=3771455>. https://ta.wikipedia.org/s/4e

  24. Wikipedia contributors. "Wikisource." Wikipedia, The Free Encyclopedia. Wikipedia, The Free Encyclopedia, 10 Aug. 2023. Web. 13 Sep. 2023. 

  25. wikisource= Charte internationale des Droits de l’Homme (1948)/Déclaration universelle des Droits de l’Homme, http://www.un.org/french/aboutun/dudh.htm  

  26. Wikipedia contributors. "Vanity press." Wikipedia, The Free Encyclopedia. Wikipedia, The Free Encyclopedia, 9 Sep. 2023. Web. 14 Sep. 2023.  

  27. Wikipedia contributors. "List of ISO 639-1 codes." Wikipedia, The Free Encyclopedia. Wikipedia, The Free Encyclopedia, 1 Sep. 2023. Web. 14 Sep. 2023. 

  28. "பைத்தான்." விக்கிப்பீடியா. 4 நவ 2022, 15:06 UTC. 14 செப் 2023, 14:52 <https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&oldid=3598420>. https://ta.wikipedia.org/s/112

  29. விக்கிமூலம் - பைவிக்கிமூலம் - https://ta.wikipedia.org/s/5ety

  30. https://github.com/tshrinivasan/tools-for-wiki

  31. "எழில் (நிரலாக்க மொழி)." விக்கிப்பீடியா. 9 மார் 2023, 07:51 UTC. 14 செப் 2023, 14:56 <https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF)&oldid=3673089>. https://ta.wikipedia.org/s/27xm

  32. "ஸ்வரம் (நிரலாக்க மொழி)." விக்கிப்பீடியா. 13 பெப் 2023, 07:54 UTC. 14 செப் 2023, 14:57 <https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF)&oldid=3655782>. https://ta.wikipedia.org/s/27v2

  33. "நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல்." விக்கிப்பீடியா. 1 சன 2022, 09:38 UTC. 14 செப் 2023, 14:57 <https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=3357426>. https://ta.wikipedia.org/s/6x3

  34. "கணினியில் தமிழ்." விக்கிப்பீடியா. 11 ஆக 2023, 12:27 UTC. 14 செப் 2023, 14:58 <https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D&oldid=3773025>. https://ta.wikipedia.org/s/5v8

  35. வலைவாசல் - தமிழ்க்கணிமை - https://ta.wikipedia.org/s/3v8

  36. விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள் (https://ta.wikisource.org/s/9z0e)

  37. பகுப்பு:திருக்குறள்-https://ta.wikisource.org/s/1c3 

  38. பகுப்பு:திருக்குறள் அட்டவணைகள் - https://ta.wikisource.org/s/a07k

  39. பகுப்பு:திருக்குறள் குறித்த நூல்கள் - https://ta.wikisource.org/s/b3py

கட்டுரையாளர்கள்

முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி | Sathiyaraj Thangasamy

முனைவர் முனியசாமி சே. | Dr. Muniyasamy S.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன