புதன், 29 ஜனவரி, 2025

மாவலி மாமன்னன் (மாபலிச் சக்கரவர்த்தி)

பல புராணங்களில் மாபலிச் சக்கரவர்த்தியைப் பற்றிய கதை ஒன்று கூறப்பட்டுள்ளது. மாபலி என்பவன் திருமாலின்  அருளைப் பெற்ற பிரகலாதனின் பேரன். அவன் மிகுந்த வலிமையும் ஆற்றலும் உடையவனாக விளங்கினான். தேவருலகத்தையும் மண்ணுலகத்தையும் வென்றான். தான் அடைந்த வெற்றிகளால், அவன் மிகுந்த ஆணவமுடையவனாக இருந்தான். அவன் ஆணவத்தை அடக்கி, தேவருலகத்தை அவனிடமிருந்து மீட்பதற்காகத் திருமால் வாமனனாக அவதரித்தார். வாமனன் இரண்டடி உயரம் மட்டுமே உள்ள ஒரு குள்ளன்.

ஒருநாள், மாபலி நர்மதைக் கரையில் அசுவமேதயாகம் செய்துகொண்டிருந்தான். அப்பொழுது, வாமனன் அங்கே தோன்றி, தனக்கு மூன்றடி நிலத்தைத் தானமாகத் தரவேண்டுமென்று மாபலியிடம் கேட்டான். மாபலி  மூன்றடி நிலம் தருவதற்கு ஒப்புக்கொண்டான். நிலத்தைத் தானமாக அளிப்பதற்காக மாபலி தாரை நீரை வாமனன் கையிலிட்டான்.  தாரை நீர் கையில் பட்டவுடனேயே, வாமனன் மிகுந்த உயரமுடையவனாக மாறினான்.

வாமனன் முதலடியால் மேல் உலகத்தையும், இரண்டாமடியால் நிலவுலகத்தையும் அளந்தான். மூன்றாம் அடியை எங்கே வைப்பது என்று மாபலியை வினவினான். வாமனனாக வந்தவனின் உயர்ந்த தோற்றத்தைக் கண்டு மாபலி செயலற்றுத் திகைத்தான். ஆகவே, மூன்றாமடியைத் தன் தலைமீது பொருத்தி அளக்க மாபலி வேண்டினான்.

வாமனன் மாபலியின் தலைமீது தன் திருவடியை வைத்து,

அவனைக் கீழுலகத்தில் ஒன்றான அதலத்தில் அழுத்தி, அங்கு நிலைத்திருந்து, பேரசானாக அரசாளும்படி ஆணையிட்டான். மாபலி, “ஆவணி மாதம் திருவோண நாளன்று, ஆண்டுக்கொருமுறை, நான் ஆண்ட நிலவுலகத்திற்கு வந்து, என் மக்களை வாழ்த்த வரந்தர வேண்டும்.” என்று திருமாலை  வேண்டினான். திருமாலும் மாபலி கேட்ட வரத்தை அளித்தார்.  அதற்கேற்ப, ஆண்டுதோறும், கேரள மாநிலத்தில், ஆவணி மாதம், திருவோண விண்மீன் கூடிய நாளில்  மாபலியின் மண்ணுலக வருகையின் நினைவாக, ஓணத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன