கரிசல் காட்டுக் கழனியில் சில
கால்கள் உழுத உழவு - சில
கைகள் கனிந்த கனிவு - குடிசை
இலைகள் இரண்டு வரவு - அதில்
பருத்தி என்றொரு செடி வளர்ந்தது
பருவப் பெண்ணைப் போலே - அந்தக்
கரிசல் கழனி மேலே - அது
சிரித்த அழகில் காய் வெடித்தது
சின்னக் குழந்தை போலே - அந்த
வண்ணச் செடியின் மேலே!
பருத்தி யெடுத்துக் கொட்டை பிரித்ததும்
பஞ்சுக் குவிய லாச்சு - 'மில்'லைப்
பார்க்கப் பயணம் போச்சு - அதைத்
திருத்தி யெடுத்துப் பார்க்கும் போது
சின்ன இழைக ளாச்சு – நூல்
என்னும் பெயர்உண் டாச்சு!
அழகு வண்ணம் கலந்து நெய்ததில்
ஆடை வந்தது மெல்ல - பலர்
மானம் காத்துக் கொள்ள - இடை
குழையும் மாதர் உடலி லேறிக்
கோலக் கவிதை சொல்ல - உடல்
மூடி அணைத்துக் கொள்ள!
அந்தத் துணியில் ஒன்று கிழிந்து
அடுப்பங் கரைக்கு வந்து - தான்
படிக்கு திந்தச் சிந்து – தன் –
சொந்தக்காரர் பலரை எண்ணித்
துடிக்குது மனம் வெந்து – கதை
சொல்லுது தன்னை நொந்து!
வாழும் நாளில் வாழ்ந்த என்னை
வைத்த இரும்புப் பெட்டி - இன்று
உதைக்கும் என்னை எட்டி - நிலை
தாழ்ந்தபோது மனிதர் கூட
உடைந்த பானை சட்டி - யார்
உறவு கொள்வார் ஒட்டி?
என்னை ஒருத்தி இடையி லேற்றி
இருந்த காலம் உண்டு - அவள்
மணந்த கணவன் கண்டு - அவள்
கன்னத்தோடு என்னைச் சேர்த்து
கலந்த காலம் உண்டு - அது
இறந்த காலம் இன்று!
சலவை செய்து வாசம் போட்டுத்
தங்கம் போல எடுத்து - பின்
அங்கம் பொலிய உடுத்து - தன்
நிலைமை மாறிக் கிழிந்த பின்பு
நிலத்தில் என்னை விடுத்து – சென்றார்
நீண்ட கதை முடித்து!
சுட்ட சோற்றுப் பானை சட்டி
தூக்கி இறக்க வந்தேன் – என்
தூய உடலைத் தந்தேன் – நிலை
கெட்டுப் போன செல்வர் போலக்
கேள்வி யின்றி நின்றேன் - இன்று
கேலி வாழ்க்கை கண்டேன்!
பந்தல் போட்டு மணம் முடித்த
பருவ உடலில் துள்ளி - வாழ்ந்த
பழைய கதையைச் சொல்லி - ஏங்கும்
கந்தல் கதையைக் கேட்ட பின்பும்
காலம் அறிந்து கொள்வீர்! - வாழ்வைக்
காவல் காத்துக் கொள்வீர்!
மேனி யழகும் காசு பணமும்
இருக்கும் வரைக்கும் லாபம் - அதை
இழந்து விட்டால் பாபம்! பின் –
ஞானி போலப் பாட வேண்டும்
நாய்க ளுக்கும் கோபம் - அதுதான்
நான் படிக்கும் சோகம்!
கந்த லுக்கும் வாழ்வு வரும்
காலம் ஒன்று உண்டு - ஒரு
கையளவு துண்டு - மேனிப்
பந்தல் தன்னை மூடிக் கொள்ள
வேண்டும் வேண்டும் என்று ஏழை –
வேண்டி நிற்பான் அன்று!
கோவ ணமாய் ஆன போதும்
கொள்கை எனக் குண்டு மானக்
கோட்டை காப்ப தென்று - இன்று
கேவலமாய் ஆன போதும்
கேள்விக்குறி ஒன்று! - பதில்
கேட்கிறது நின்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன