தாலாட்டுப் பாடல்
ஆராரோ ஆரிராரோ - என் கண்ணே
ஆரிரரோ ஆராரோ
கண்ணே நவமணியே
கானலிலே பிறந்தாயோ
என்னநான் சொல்வேனோ - கண்ணே நீ
கொட்டிவைத்த முத்தோ! கண்ணே நீ
குவித்துவைத்த ரத்தினமோ!
கட்டிப்பசும் பொன்னே - கண்ணே நீ
கட்டிமுத்தம் கொடுப்பாயே!
சிரியம்மா சிரிச்சிரு - கண்ணே நீ
சித்திரப்பூந் தொட்டிலிலே!
கரும்பு ரசமே - கண்ணே நீ
கசக்காத கற்கண்டே!
மாத்துயர்ந்த பொன்னே - கண்ணே நீ
மண்டலத்து ராசாவோ?
பூத்த புதுப்பூவே - கண்ணே உன்
பொக்கிசத்தைப் பார்த்தாயோ?
மானே மரிக்கொழுந்தே - கண்ணே நீ
மலர்விரிந்த மல்லிகைப் பூ!
காட்டுக் குயிலே - கண்ணே நீ
கண்டெடுத்த பாட்டுக்குயில்!
ஆலம் பூப்போல - கண்ணே நீ
அத்திமரப் பூப்போல
தேம்பி அழுகாதே - கண்ணே நீ
திட்டாதே வையாதே!
வாடாத பூவோ? - கண்ணே நீ
வானகத்துத் தாராவோ?
தேடாத திரவியமோ? - கண்ணே நீ
தெவிட்டாத தெளிதேனோ?
கோட்டை அதிகாரி - கண்ணே உன்
கொடிபறக்கு தாகாசம்
கேட்டதெல்லாம் நான் தருவேன் - கண்ணே
கேவி அழுகாதேடா!
ஆராரோ ஆரிராரோ - என் கண்ணே
ஆரிரரோ ஆராரோ!
தொழிற் பாடல்கள்
மீனவர் பாடல்
விடிவெள்ளி நம் விளக்கு -ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் ஐலசா
அடிக்கும் அலையே நம் தோழன் - ஐலசா
அருமைமேகம் நமது குடை - ஐலசா
பாயும் புயல் நம் ஊஞ்சல் - ஐலசா
பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா
காயும் ரவிச்சுடர்கூரை - ஐலசா
கட்டுமரம் வாழும் வீடு - ஐலசா
மின்னல்வலை அரிச்சுவடி - ஐலசா
பிடிக்கும் மீன்கள் நம் பொருட்கள் - ஐலசா
மின்னல் இடிகாணும் கூத்து - ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலசா
முழுநிலாதான் கண்ணாடி - ஐலசா
மூச்சடக்கி நீந்தல் யோகம் - ஐலசா
தொழும் தலைவன் பெருவானம் - ஐலசா
தொண்டு தொழிலாளர் நாங்கள் - ஐலசா
ஒத்துமை கொண்டாடனும் - ஐலசா
உரிமையை உயர்த்திடனும் - ஐலசா
கல்லுடைப்போர் பாட்டு
கல்லொடச்சிக் களைப்பாச்சி லேலங்கடி லேலோ
கையிரெண்டும் புண்ணாச்சி லேலங்கடி லேலோ
புல்லறுத்துப் பொழைச்சிருந்தா லேலங்கடி லேலோ
புள்ளகுட்டி வாழ்ந்திருக்கும் லேலங்கடி லேலோ
வேகாத வெய்யிலிலே லேலங்கடி லேலோ
வெந்து நாமும் சாகிறோமே லேலங்கடி லேலோ
காலை முதல் கல்லொடைச்சி லேலங்கடி லேலோ
கால்வயிறு ரொம்பலியே லேலங்கடி லேலோ
ஊருவிட்டு ஊரு வந்து லேலங்கடி லேலோ
ஓயாம ஒழைக்கிறோமே லேலங்கடி லேலோ
ஏரு ஓட்டி பொழச்சிருந்தா லேலங்கடி லேலோ
எப்படியும் வாழ்ந்திருப்போம் லேலங்கடி லேலோ
காணொலி
பார்வை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன