ஒப்பியல் உள்ளும் புறமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒப்பியல் உள்ளும் புறமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஏப்ரல், 2016

ஒப்பியல் உள்ளும் புறமும்

வாசித்தால்… வாசிக்கச் சொல்லும்…

பேரா. த. திலிப்குமார்
துறைத்தலைவர்
மொழித்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 28
IMG_1884உலகில் வாழ்தல் என்பது எளிதானது. சிலருக்கு அவர்கள் வாழ்ந்ததற்கான எச்சம் எதுவுமின்றி மறித்துப் போகிறார்கள். எதிர்ப்பிலே வாழுங்கள் என்கிறார் ஓஷோ. இப்படி வாழும் மனிதன் அனுபவங்களோடு வாழ்ந்து பார்க்கிறான். அவன் கதைப்பதற்குக் கொஞ்சம் சொற்கள் இருக்கும். எதுவுமற்ற மனிதன் சொல்லின்றி மறித்துப் போகின்றான்.
மந்தையாய் வாழ்ந்து மடிந்து போகும் மனித சமூகத்தில் படைப்பாளிகளும் திறனாய்வாளர்களும் எதிர்த் திசையில் பயணம் செய்கிறார்கள். அப்படிச் செய்யும் பயணம் புது அனுபவத்தோடு வாழ்வியலைப் பார்க்க நமக்குக் கற்றுக் கொடுக்கின்றது.
படைப்பாளிகள் தமது படைப்பின்வழிப் பதிவு செய்யும் பனுவலின் தன்மையைச் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் அமைக்கிறார்கள். அப்படி ஒப்பியல் உள்ளம் புறமும் என்ற நூல் பதினொரு ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட பனுவலாகப் பல வகையிலும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது. இந்நூல் தட்டை மனநிலையிலிருந்து பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு வேறு ஒரு வடிவத்தில் சிந்திக்கச் சொல்லிக் கொடுக்கின்றது.
இலக்கிய வாசிப்பில் போகிற போக்கில் நாம் வாசித்ததைக் கொஞ்சம் நின்று நிதானித்து வாசிக்கும் பொழுது சத்தியராசுவின் வார்த்தைகள் நின்று பார்க்கச் சொல்கின்றன. இதை நாம் இப்படிப் பார்க்கவில்லையே என்று யோசிக்க வைக்கின்றன.
இலக்கியம் நம் இதயத்தோடு இணக்கமாக, நம்மோடு பேசுவது; நம்மைப் பேசாமல் செய்வது; நம்மை எப்பொழுதும் இம்சிப்பது. படைத்தவனின் மனநிலையோடு நாம் பயணிக்க இதுபோன்ற ஆய்வுக்கட்டுரைகள் ஆற்றுப்படுத்தும். விலைமகளிர் நெறிகள் என்ற கட்டுரையை வாசித்தபோது பரத்தை – விலைமகள் இவர்களின் நிலைப்பாட்டை அறியமுடிந்தது. ஓஷோவின் காமத்திலிருந்து கடவுள் வரை என்ற நூலில் இடம்பெறும் காம இன்பம் மனதளவில் ஒரு அங்கம் எனும் கருத்து இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
நமது இலக்கியம் காட்டும் வாழ்வியல் முறையும் பிறமொழி இலக்கியம் சொல்லும் வாழ்வியல் முறையும் உலகளவில் மனித சமூகம் அன்பு என்ற ஒரு புள்ளியை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன.
மாற்றுச் சிறந்தனையாளர்கள் மந்தையாய் அலைந்து திரிந்து மடிந்து போவதில்லை. அவர்கள் இந்தச் சமூகத்திற்குத் தமது வாழ்வில் கண்டவற்றை அடுத்த தலைமுறைக்குப் பங்களித்துவிட்டுச் செல்கிறார்கள். அடர்ந்த இருள்படர்ந்த காடு, செல்லவேண்டிய தூரம் பல காததூரம். நீ கடக்க வேண்டியது வெகுதூரம் ராபர்ட் ப்ராஸ்ட் சொன்ன இந்த வாக்கியத்தை மனதில் கொண்டு சத்தியராஜ் பயணித்துக் கொண்டிருக்கிறார். உன் உச்சத்தை உடனே தொட்டு விடாதே. தொட்டு விட்டோம்னு நினைப்பு வந்துட்டா வளர்ச்சி இல்லைனு பாலுமகேந்திரா கூறுகிறார். உச்சத்தை நோக்கிய பயணம் தொடர வேண்டும்.
வாசிப்பு வசப்பட்டால்தான் ஒப்பியலோடு உறவாட முடியும். அந்த வகையில் இலக்கணத்தில் தனித்துவம், இலக்கியத்தில் தொடர்வாசிப்பு தான் கற்றதையும் பெற்றதையும் சக மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பாங்கு, வார்த்தைக்கு வலிக்காமல் உரையாடும் தனித்தன்மை, தனித்தமிழ் மீது கொண்ட காதல் இவரைச் சரியாக அடையாளம் காட்டும். இப்படித்தான் வாழவேண்டும் எப்படியும் அல்ல என்பதற்கும் எளிமையோடு எல்லோரும் உறவாடுவதற்கும் எளிய மனிதர். இவரது முயற்சி தொடர வாழ்த்துக்கள்.


தோழமையுடன்…
த. திலிப்குமார்
நூலை வாசிக்க ... http://sathiyaraj.pressbooks.com/ இத்தளத்திற்குச் செல்க.