முன்னுரை
உலகில்
உணர்வு ஒன்றுபடும் நிலையில் ஒத்த கருத்துக்கள் ஒருங்கே மலர்ந்து எங்கும் மணம்
பரப்புதல் இயல்பாதல் உண்டு.
மொழி வேற்றுமையும் திசை
வேற்றுமையும் பாராது மக்கள் கலந்து பழகிய பாங்கினாலும், படித்த
மேதைகளுக்கிடையே நிகழ்ந்த அறிவுப் பரிமாற்றத்தாலும், அரசியல்
வாணிபத் தொடர்புகளாலும், சமயச் சார்பாலும்
வேற்றுமைக்கிடையில் ஒற்றுமை காணும் உணர்வு இவ்வுலகில் வளர்ந்து வருவதைக் காணலாம்.
மனிதகுல வாழ்க்கைக்குத்
தேவையான நல்வழி கருத்தியல்களைக் குறித்து சமய தத்துவ ஞானிகள் ஒருபுறமும், இலக்கண
இலக்கிய மேதைகள் மறுபுறமும் விளக்கமாகவும், குறிப்பாகவும்
கூறிச் சென்றுள்ளனர். இங்குத்
திருவள்ளுவரின் பொதுநலச் சிந்தனைகளோடு, கிரேக்க அறிஞர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர்களின் பொது நலச் சிந்தனைகளை ஒப்பிட்டு ஆராய்வதே
இக்கட்டுரையின் நோக்கமாகும்.