வெள்ளி, 24 ஜூன், 2022

செல்வகுமாரி - இலக்கியத்தில் பெண்கள்

 

பெண்மைக்கு மென்மை பூசி
பேரிலக்கியம் படைத்திட்டார்.
பெண்மையை இரணமாக்கி
புராணங்கள் படைத்திட்டார்
பெண்மையைப் பேயென்றும்
இதிகாசங்கள் படைத்திட்டார்.

சங்க இலக்கியங்களிலும் 
தங்கக் காப்பியங்களிலும் 
பெண்கள் பேசப்படும் 
விதமே தனிதான்.

ஐந்திணைகள் பிரித்தனர்
அகப்பொருள் கண்டனர்
முதற்பொருள் கருப்பொருள்
உரிப்பொருள் என்று
அகத்திலே முப்பொருள் கண்டனர்.

முதற்பொருளைக்
குறிஞ்சியென்றும்
முல்லையென்றும்
மருதமென்றும்
நெய்தலென்றும்
நானிலமாய் ஆக்கினார்.

இந்நான்கு நிலத்திற்கும்
அந்நான்கு தெய்வங்களாய்
ஆண்மக்களே உருப்பெற்றனர்
குறிஞ்சிக்கோர் முருகன் 
முல்லைக்கோர் திருமால்
மருதத்திற்கோர் இந்திரன்
நெய்தலுக்கோர் வருணன் என்று
நான்கு நிலத்தை ஆ ண்டனர்.

குறிஞ்சியும், முல்லையும்
திரிந்த “பாலை” ஒன்றுண்டு
நீர் இழந்து
நிறமிழந்து
பசுமையிழந்து, பல இழந்து 
கோடை வெப்பத்தால்
கொதித்துப் போன நிலம்
பாலையாம்.

பாலைக்கோர் தெய்வமாய்
கொற்றவையை ஆக்கினார்.
பிணந்தின்னும் பெண்ணாய் 
உருவகப்படுத்தினர், அந்தோ!

வளமார்ந்த இடத்திற்குச்
சொந்தமானவர்கள்
ஆண் தெய்வங்கள். 
வளமிழந்த இடத்திற்குச்
சொந்தமானவள்
பெண் தெய்வம்
என்ன பாகுபாடு இது?

அது மட்டுமா...
கருப்பொருள் அடுத்த 
உரிப்பொருள் உள்ளே 
பெண்ணின் துயரத்தைப் 
பெருமையாய்க் கட்டினர்.

பிரிந்த காதலனை எண்ணி 
பிரிவாற்றா துயருற்றாள் பெண். 
அது பிரிதல் பிரிதல் நிமித்தமானது.

பொருள் தேடச் சென்றவனுக்காக
பசலை நோயால் மெலிந்தாள்
அது இருத்தல் -இருத்தல் நிமித்தமானது.

கடலில் சென்றவனுக்காக
கண்விழித்துக் காத்து நின்றாள்.
அது இரங்கல் - இரங்கல் நிமித்தமானது.

இப்படி எத்தனை எத்தனை நிமித்தங்களை 
பெண்மகள் சுமந்தாளோ...?

இலக்கியப் பெண்கள் மட்டும் 
உயிர்பெற்று வாழ்ந்திருந்தால் 
காவியமும், காப்பியமும் 
இலக்கியமும், இதிகாசமும் 
கதை மாறிப் போயிருக்கும்.

ஆம்... 
கண்ணகி விழித்திருந்தால் 
கோவலனைச் சுட்டிருப்பாள். 
மாதவி மயங்காதிருந்தால் 
மணிமேகலையை மாய்த்திருப்பாள். 
குந்தியவள் நினைத்திருந்தால் 
கர்ணனையே கலைத்திருப்பாள்.

சீதையவள் கொதித்தெழுந்தால் 
இராமனையே எரித்திருப்பாள். 
சந்திரமதி வெகுண்டிருந்தால் 
அரிச்சந்திரனைப் புதைத்திருப்பாள், 
ஆண் வார்த்த இலக்கியங்கள் 
ஆணாதிக்க வெளிப்பாடுகளே. 
ஆண் வார்த்த காப்பியங்கள் 
பெண்ணுக்கிழைத்த கொடுமைகளே.

காணொலி
பார்வை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன