நேற்று (04.01.2025) மதுரை தியாகராசர் கல்லூரியில் ஒரு மறக்க முடியாத நாள். மாணவர்களுக்கான ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் "இணையலாம் இணையத்தமிழ்" என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் காந்திதுரை அவர்களின் அன்பான வரவேற்பும், நெகிழ்வான அறிமுகமும் என்னை நெகிழ வைத்தது. அதுமட்டுமின்றி அவர்களுடன் நீண்ட நேர உரையாடல் நிகழ்ந்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அவரின் பார்வை, ஆய்வு, கற்பித்தல் அனுபவங்கள், மாணவர்களிடம் கொண்டுள்ள அக்கறை - இவையனைத்தும் என்னை வியக்க வைத்தன. அவர் அன்பளிப்பாக வழங்கிய "சாமி சிறுகதைகள்" நூல் என் அறிவுக் களஞ்சியத்திற்கு ஒரு பெரும் சேர்க்கையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்த நிகழ்விற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த ஒருங்கிணைப்பாளர் பேரா. சங்கீத் ராதா அவர்களின் வரவேற்பும் நன்றி நவிலலும் சிறப்பாக இருந்தன.
உரைக்குப் பின் முனைவர் மா.பரமசிவன் அவர்களுடன் மதிய உணவுக்காக நடிகர் சூரி அவர்களின் அம்மன் உணவகத்திற்குச் சென்றோம். பாரம்பரிய சுவையுடன் கூடிய உணவு மட்டுமல்ல, பேரா.பரமசிவன் அவர்களின் அனுபவப் பகிர்வுகளும் சுவையாக இருந்தன.
உணவு உண்டு முடித்ததும் திருமங்கலத்தில் முனைவர் முத்துச் செல்வம் அவர்களைச் சந்தித்து அன்று காலை 6 மணியளவில் பிறந்த அவரின் மகளையும் பார்த்தது மகிழ்ச்சியை அளித்தது.
முற்பகல், பிற்பகல் என இருவேளைகளிலும் அன்புடன் வரவேற்றும் வழியனுப்பியும் இளவல் முனைவர் சே. முனியசாமி அவர்கள் செய்தார்கள். அவர் மாணவர்களின் படைப்புகளை நூலாக்கும் படியையும் முதுகளத்தூர், பரமக்குடி, கடலாடி போன்ற பகுதிகளில் வாழ்ந்த, வாழ்ந்து வரும் படைப்பாளர்களை அடையாளப்படுத்தும் அச்சாக்கம் பெறாத நூல் படியையும், அவரும் அவரின் மனைவியும் இணைந்து மொழி பெயர்த்து வரும் வரலாற்று நூல் படியையும் காட்டினார்.
இன்றைய நாள் வெறும் பயிற்சி அமர்வாக மட்டுமல்லாமல், பல அறிஞர்களின் அனுபவங்களையும், நட்பையும் பெற்ற நாளாக அமைந்தது. மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை அளித்த இந்த அரிய வாய்ப்பிற்கு என் நன்றிகள் என்றென்றும் உரித்தானது.
இப்படிக்கு,
முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன