அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று, உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி ஒன்று முதல் இருநூறு வரையிலான பல்கலைக்கழகங்களின் பெயரை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரும் இடம்பெறாதது இந்தியக் கல்வியாளர் ஒவ்வொருவரும் வெட்கப்படத்தக்கது. அருகில் உள்ள மிக மிகச் சிறு நாடான சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்திய நாட்டிலேயே உயர்கல்வியை வழங்கி வருவதாக முரசு கொட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் அப்பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தரவரிசைப் பட்டியல் குறிப்பிட்ட அடிப்படைகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் தகுதி, உலகளவில் புகழ்பெற்றுள்ள இதழ்களில் அவர்கள் எழுதிய கட்டுரைகள், அக்கட்டுரைகள் உலகப் பெரும் அறிஞர்களால் மேற்கோள் காட்டப்பட்டவை, பல்கலைக்கழக வழி கண்டறியப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள், பல்கலைக்கழகத்தில் பயிலும் அயல்நாட்டு மாணாக்கர்கள், ஆசிரியர்கள் இவை போன்ற அடிப்படைகளை வைத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே, உலக அளவில் அறிவியல் கட்டுரை பற்றி வெளிவரும் பட்டியலில் (சைன்ஸ் இன்டக்ஸ்) இந்தியப் பல்கலைக்கழகங்களின் இடம் மிகப் பரிதாபமானதாக இருக்கும். மறுதலையாக, 1948க்கு முன்பு இந்தியாவைப் போன்றே வறுமையிலும் அரசியல் ஸ்திரமின்மையிலும் இருந்த சீனா, உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்துக்குள் இடம்பெற்றிருக்கும்.
முன்பு சுட்டிக்காட்டப்பெற்ற இருநூறு பல்கலைக்கழகப் பட்டியலில் சீனப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தாய்மொழியாகிய சீன மொழியிலேயே பள்ளிக் கல்வி தொடங்கி, பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கல்வி வரை நடத்துகின்ற சீனா, உலகத் தரப் பட்டியலில் முன்னிடம் பெற்றிருக்கிறது. தாய்மொழிக்குப் பயிற்றுமொழித் தகுதி தந்தால் கல்வித்தரம் தாழ்ந்துவிடும் என்று கற்பனைக் குதிரையில் ஏறிப் பறந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்புச் சாதனைகள் எதனையும் நிகழ்த்துவது இல்லை.
பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரின் குறைந்தபட்ச ஊதியம் ஐம்பதினாயிரம் ரூபாய். கூடுதல் ஊதியம் ஒன்றரை லட்சம். மாத ஊதியம் மட்டுமில்லாமல், வெளியூர் கருத்தரங்கிற்குச் சென்று பங்கேற்றல் மூலமாக ஒவ்வோர் ஆசிரியரும் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தியா முழுதும் சுற்றிப்பார்க்க அரசாங்கச் சலுகை; நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடும்பத்தினர் அனைவருக்கும் இலவசப் போக்குவரத்தும் நல்கப்படுகிறது. மருத்துவம் இலவசம். இன்னும் பல வசதிகளைப் பெற்றிருந்தும் நம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் உலகத்தரத்தை எட்டும்படியாக எதனையும் எழுதுவதில்லை. பலர் எழுதுவதே இல்லை.
சில பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் முழு நேரமும் தம் அலுவலக இடத்தில் இருப்பதும் இல்லை. இன்னும் சிலர் தமக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பு நேரங்களில் வகுப்புகளுக்குச் செல்வதும் இல்லை. பணி நேரத்தில் உட்படும்படியாக, எம்.ஃபில்., பிஎச்.டி., ஆய்வேட்டு நெறியாளராக இருக்கும் ஆசிரியர்களுக்கு வசதி செய்து தரப்படுகிறது. ஆனால், ஆய்வேடுகளைப் படித்துப் பார்க்கும் பாமரனும் கூட, ஆய்வேடு நெறியாளர்களால் படிக்கப்படுவதுமில்லை; திருத்தப்படுவதுமில்லை என்ற ஊரறிந்த உண்மையைத் தெரிந்துகொள்வார்கள்.
பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் முதலான பொறுப்புகளில் இருக்கும் ஆசிரியர்கள் எம்.ஃபில்., பிஎச்.டி., நெறியாளராக இருக்கிறார்கள். எம்.ஃபில். என்றால் இத்தனை ஆயிரம் ரூபாய். பிஎச்.டி. என்றால் இத்தனை ஆயிரம் ரூபாய் என்று தம் ஆராய்ச்சி மாணாக்கரிடம் பணம் பெற்றுக் கொள்கிறார்கள் என்பது பல்வேறு இடங்களில் இருந்து வரும் செய்தியாகும். சில இடங்களில் எம்.ஃபில். ஆய்வேடு எழுதித் தர இத்தனை ஆயிரம் ரூபாய், பிஎச்.டி. ஆய்வேடு எழுதித் தர இத்தனை ஆயிரம் ரூபாய் என்று விலை பேசி எழுதித் தர ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்படாத செய்தி.
ஒரு பல்கலைக்கழகம் என்றால் அப்பல்கலைக்கழகத்தில் "ஜர்னல்' எனப்படும் ஆராய்ச்சி இதழ்கள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தனி ஆராய்ச்சி இதழை நடத்துவதே இல்லை. விதிவிலக்காக சில இருக்கலாம். ஆராய்ச்சிக் கட்டுரை எழுத வேண்டிய தேவை இல்லை என்பதால் புதிய கட்டுரை எழுதப் புதிய புத்தகங்களை வாசிக்கவும் தேவை இல்லை; வாங்கவும் தேவை இல்லை. புதிய புத்தகம் எதுவும் எழுதவும் தேவை இல்லை.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் எழுதி வெளிவந்துள்ள நூல்கள் மிகச் சிலவே. இவையும் தமிழ்ப் பேராசிரியர்களால் எழுதப்பட்டவையே பெரும்பான்மை. ஏனைய துறை ஆசிரியர்கள் அப்பக்கம் எட்டிப் பார்ப்பதே இல்லை.
கன்ஃபூசியஸ் எனும் சீன மேதை சீனர்களின் வாழ்வைப் பெரிதும் செறிவுபடுத்தியவர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர், அமைச்சர் பதவி வேண்டாம் என்று துறந்தவர். ஊர் ஊராகச் சென்று மக்களைக் கூட்டி அவர்கள் நடுவே பலவேறு கருத்துகளையும் வாழ்க்கை வழிமுறைகளையும் எடுத்துரைப்பார். மிகச் செல்வாக்குமிக்க அறிஞராகச் சீனர்களிடையே அவர் விளங்கினார். கேட்போர்க்குரிய தகுதி மூன்று வகையினருக்குத்தான். அவர்களில் தான் தெரிவு செய்து கருத்துகளை விதைப்பதாக அவர் சொல்லுகிறார்.
முதல் தர வகையினர் சிப்பியைப் போன்றவர்கள். சிப்பி மழைத்துளி மண்ணில் விழ, தன் வாயில் வாங்கி வயிற்றில் வைத்திருந்து சில காலம் சென்று அம்மழைத் துளியை முத்தாக்கிவிடும். இன்னொரு வகையினர் விதைத்தது விளையும் வகையினர். மூன்றாவது வகையினர் தவளை வகையினர். கேட்டதை அப்படியே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பர். சிற்பி வகையினருக்கு மட்டும்தான் கருத்துகளை எடுத்துச் சொல்லுவேன் என்று கன்ஃபூசியஸ் தன் உரைகளில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைத் தமிழரிடையேயும் கல்வி கற்கும் பழக்கமும் கற்பிக்கும் பழக்கமும் இருந்து வந்தன. அவை ஒரு கல்வி நிறுவனமாக இல்லை. எனினும் இவ்வாறு பாடம் போதிக்கும் ஆசிரியரை நல்லாசிரியர் எனவும் பாடம் கேட்கும் மாணவரை நல்மாணாக்கர் எனவும் வகைப்படுத்தி இருந்தனர். இவர்களைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பிய உரையின் உள்ளும் நன்னூலிலும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் கீழ் ஏறத்தாழ ஐந்நூறு இணைப்புக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றிற்காக அரசு செலவு செய்வதோ கோடிக்கணக்கில். இந்திய அளவில் ராணுவத்திற்கு அடுத்தபடியாக கல்விக்காகத்தான் அதிக பணம் செலவிடப்படுகிறது. இவ்வளவு பணம் செலவிட்டும் உலகப் பார்வையில் நம் நாட்டில் கல்வி கற்றோரை சராசரி தகுதி பெற்றவராகக்கூடக் கருதுவது இல்லை.
ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில், நம் நாட்டில் பட்டம் பெற்றவர்களுக்கு அப்பட்டத்திற்கு உரிய சம்பளம் வழங்குவதில்லை. நம் நாட்டில் முனைவர் பட்டம் பெற்றோரை முனைவர் பட்டம் பெற்றவருக்கு உரிய ஊதியத்தைப் பெறக்கூடியவராக ஏற்றுக்கொள்வதில்லை. ஃபிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் அவர் இணைந்து மீண்டும் முனைவர் பட்டம் பெற்றால்தான் ஏனையோர் பெற்று வரும் ஊதியத்தைப் பெற முடியும்.
தற்போதைய பிஎச்.டி. பட்டம் பெற்றோரின் தகுதியை அவர் வேலை செய்யும் திறனைக் கொண்டு மதிப்பிட்டால் பெரும்பாலோர் பாஸ் பெறுவரா என்பது ஐயம். பொறியியல் கல்லூரிகளில் படிப்போர் கூட அவர் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ற அலுவலில் சேரத் தகுதி உடையோராக இல்லை என்பது வேலை தருவோரின் கணிப்பு. இந்நிலை ஏன் என்பது உரத்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி.
பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளிக்கல்வி, மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரை கல்லூரிக் கல்வி என முழு நேரமும் இக்கல்வியைக் கற்ற பிறகும் கற்ற கல்விக்கு உரிய வேலை செய்யும் திறனை இவர்கள் பெற்றிருப்பது இல்லை. இதற்குப் பின்வருவன காரணங்களாக இருக்கலாம்.
1. மாணாக்கர் தகுதி உடையவராக இருப்பதில்லை. 2. பயிற்றும் ஆசிரியர் தகுதி உடையவராக இருப்பது இல்லை. 3. நம் தேர்வு முறை சரியாக அமைந்திருக்கவில்லை. 4. நம் பாடத் திட்டம் உலகத் தகுதி உடையதாக இருப்பது இல்லை. படித்தவுடன் வேலைக்குத் தகுதி உடையவராக ஆக்குவதில்லை.
பாடம் படிப்போர், பயிற்றுவோர், தேர்வுமுறை ஆகியவற்றில் சரியான மாற்றத்தைக் கொண்டு வந்தால் ஒழிய நம் கல்வித் தரத்தை உலக சராசரிக்குக் கூடக் கொண்டு போக முடியாது. அமெரிக்காவில் வேலை செய்து வரும் சீனர்களைப் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும் செவி வழிச் செய்திகள் வருகின்றன. சீனர்களுக்கு ஆங்கிலம் வராது. ஆனால் வேலை வரும். இந்தியர்களுக்கு வேலை வராது. ஆனால் ஆங்கிலம் வரும்.
நம் பாட திட்டத்தையும் தேர்வு முறையையும் நாம் அடிக்கடி மாற்றி வருகிறோம். ஆனால், தர வீழ்ச்சிக்குப் பெரும் காரணமாக இருக்கின்ற ஆசிரியர் தெரிவு பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை.
கற்பிக்க வரும் ஆசிரியனின் கல்வித் தகுதி, கல்வி பயிற்றும் தகுதி ஆகியவற்றைச் சோதிப்பதைவிட நாம் அவனுடைய புறச்சார்புகளைச் சோதிக்கிறோம். சாதி, மதம், மொழி முதலானவற்றில் காட்டும் அக்கறையை அவன் கல்வித் தகுதியிலும் காட்ட வேண்டும் அல்லவா? ராணுவத்திற்கு ஆளெடுக்கும்போது அவன் கை கால்கள், உடல் நலம், வலு ஆகியவற்றைப் பார்ப்பதுதானே முதன்மை. அவன் எங்கிருந்து வந்தான்? அவனுடைய அப்பா அம்மா யார்? அவர்களுடைய சாதி என்ன? மதம் என்ன? என்று ஆராய்ந்தா ராணுவத்திற்கு ஆள் சேர்க்கிறோம்? அப்படி ஆள் சேர்த்தால் நம் ராணுவம் உருப்படுமா? ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும்போது ராணுவத் தகுதியை முன்னிறுத்துவது போல பல்கலைக்கழகக் கற்பித்தலுக்கு ஆசிரியரைத் தெரிவு செய்யும்போது அவருடைய கல்வித் தகுதியையும் பயிற்றும் தகுதியையுமே பார்க்க வேண்டும்.
- க. ப. அறவாணன்
மேனாள் துணைக்கண்கானகர்
மேனாள் துணைக்கண்கானகர்
நன்றி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன