புதன், 20 நவம்பர், 2013

எதற்கு?

                                                                                                                                  - த. சத்தியராஜ்
கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் புரட்சி மிகுந்த சிந்தனைகளைத் தெலுங்கு மக்களிடையே பரப்பி வந்தார் வேமனா. இவரின் சிந்தனைகளை அறியாத தெலுங்கரே இல்லை எனலாம் என்பர். அந்த அளவிற்கு அவருடைய கருத்துகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. அவர் சிறந்த ஞானியாகவும் திகழ்ந்துள்ளார்.

            இவரின் சிந்தனைகளைத் தமிழில் சுத்தானந்த பாரதியார், நாராயணதாசர் போல்வர் பாடியுள்ளதாகவும், அவரைக் குறித்துத் திராவிடநாடு எனும் இதழில் அறிஞர் அண்ணா அவர்கள் பத்துப் பக்கங்களில் கட்டுரை ஒன்று வரைந்துள்ளாதாகவும் (1992:முன்னுரை) குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. இதன்வழி அவரின் புகழை ஊகித்தறியலாம்.
            அவரின் சிந்தனைகளுள் எதற்கு? என வினா எழுப்பிக் கொண்டு கருத்துக்களைக் கூறும் பாங்கு காணப்படுகிறது. அப்பாங்குகளாவன:
            இல் வாழ்வானுக்கு வேறுலகெதற்கு?
எளியோரை ஆதரிக்காத செழிப்பெதற்கு?
பயன்படாத உறவினரின் செல்வமெதற்கு?
குனமில்லாதவனின் குணத்தை எண்ணுவதெதற்கு?
நி(ட்)டையில்லாதவனின் பூசை எதற்கு?
மனத்தை அடக்காதவனின் ஒரு மனம் இல்லாதவனின் மந்திரம் எதற்கு?
மனத்தூய்மை இல்லாத ஆகார மெதற்கு?
மலைக் கற்கள் கொண்டுவந்து
ஆசையுடன் கட்டிய கோவில்களை இடிப்பதெற்கு?
இல்லாத நேரத்தில் தெய்வத்தைப் பழிப்பான்
இருக்கும் நேரத்தில் தெய்வமெதற்கு?
திருடனுக் கெதற்கு நல்லொழுக்கம்?
விபசாரிக்கெதற்கு செபமும் தவமும்?
குடிகாரனுக் கெதற்கு தத்துவச் சிந்தனை?
கொடியவனுக்கு எதற்கு ஊஞ்சல்?
பன்றிக் கெதற்கு கிளிக்கூண்டு?
மூக்கில்லா மங்கைக் கெதற்கு முத்துமூக்குத்தி?
அடங்கப் பிடாரியுடன் வாழ்வதெதற்கு?
தன் சொல் கேட்காத மகன் எதற்கு?
உதவாக் கரையான! உறவினன் எதற்கு?
இத்தன்மையில் அமையக்கூடிய கருத்துகள் யாவும் ஒரு மனிதனிடம் புடமிட்டிருக்கின்ற மாயைகள் எனலாம். இம்மாயைகளை விடுத்து வாழ்கிறவனே இப்பிறவியில் மனிதனாய்ப் பிறந்ததற்குத் தகுதியுடையவன் எனக் கருதிகிறார் வேமனா.
துணைநின்றவை
1.    சி. ஆர். சர்மா, 1992, வேமன்னாவின் மணிமொழிகள், தெலுங்குப் பல்கலைக் கழகம் , ஐதராபாத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன