ஞாயிறு, 17 நவம்பர், 2013

கேடு


முகப்பு
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
அறம் பாடுவதில் திராவிட மொழிகளின் மும்மூர்த்திகள் திருவள்ளுவர் (தமிழ்), வேமனா (தெலுங்கு), சர்வக்ஞர் (கன்னடம்) ஆவர். இவர்கள் பொதுமானுட வாழ்வைப் பாடுவதில் தலைசிறந்து விளங்கினர். அவர்கள் முறையே கி.மு., கி.பி.17, கி.பி.15 ஆகிய காலங்களில் வாழ்ந்தவர்கள். அம்மூவரும் ஊர் ஊராகச் சுற்றி மக்களிடையை அறக்கருத்தியல்களை வலியுறுத்தியவர்கள் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

அம்மும்மூர்த்திகளுள் கேடுகள் தரக்கூடிய செயல்பாடுகளைப் பிறவற்றுடன் உவமைப்படுத்திக் கூறும் போக்கு திருவள்ளுவரிடமும் வேமனவிடமும் காணப்படுகின்றது. ஆனால், அக்கேடுகள் எவை என நீண்டதொரு பட்டியலைத் தருவதில் சர்வக்ஞர் திகழ்கிறார். அவ்வாறு திகழ்வதற்கும் ஒரு காரணம் உண்டு. கேடுகளாக அறியக்கூடியவற்றை அனைத்தையும் உவமைப்படுத்திக் கூறினால் அது விரியும். ஆகையால் அவர் சுருக்கித் தொகுத்து விளக்கியுள்ளார். இத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

 அகராதிகளில் கேடு
கேடு என்பதற்கு அழிவு, சிதைவு, கெடுதி, துரோகம், தீமை, வறுமை, அந்தக்கேடு, குறைவு, கெடுதல் விகாரம் (தமிழ்ச்சொல்லகராதி, 2012:154) எனத் தமிழ் அகராதியும், நாஸ்2, அளிவு, து3ஷ்டத3ந, வ்யாகரண த3ல்லி அக்ஷர ஸ்கா2லித்ய (2006:168) எனக் கன்னட அகராதியும், ஹேநி, செருபு, பா3த3கமு, அபாயமு, ஸுப்பர, கஷ்டமு (1985:385,533) எனத் தெலுங்கு அகராதியும் பொருண்மைகளாகக் குறித்துள்ளன.
அம்மூன்று மொழியகராதிகளுள் தமிழும் கன்னடமும் கேடு  எனும் வரிவடிவிலும், தெலுங்கு கீடு3 எனும் வரிவடிவிலும் ஆள்கின்றன. அச்சொல் பல்வேறு பொருண்மைகளை உடைத்ததாக காணப்பட்டாலும், அப்பொருண்மைகளுக்குள்ளே நுண்ணிய வேறுபாடு உண்டு. காட்டாக,
1. மழையின்மையால் பயிருக்கு அழிவு
2. களையால் பயிருக்குக் கெடுதி

என்றாயிரு தொடர்களைச் சுட்டலாம். அவ்விரு தொடர்களில் முதலாவதுதொடர், மழையின்மை எனில் பயிருக்கு முழுமையான அழிவும், இரண்டாவதுதொடர், களைகள் பயிருக்கு இடையில் வளர்ந்தால், அப்பயிருக்குக் கிடைக்கக் கூடிய சத்துகளை அக்களைகளே எடுத்துக்கொண்டு, குறைவான சத்துகளைத் தரும் என்பதும் வெலிப்படுத்துகின்றன. இவ்வாறே பிற பொருண்மைகளுக்குள்ளும் வேறுபாடுகள் அமைவதைக் காணலாம்.
இலக்கியங்களில் கேடு
அம்மூன்று (தமிழ், தெலுங்கு, கன்னடம்) மொழிக்குரிய இலக்கியங்களும் கேடு எனும் சொல்லைப் பயன்படுத்தி அறக்கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளன. கேடுகளாக கருதப்படக்கூடிய செயல்பாடுகளைக் குறைத்தாவது, அறவே நீக்கியாவது மனிதன் வாழ வேண்டும் என்பதே அவ்வறவிலக்கியங்களின் நோக்கமகும். அதனை,
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்     - குறள். 319

எனவரும் திருவள்ளுவரின் வாசகமும்,
அடுக்கும் கேடுனக்கு பிறர்க்குக் கேடுசெய்யின்
சுடும் தனலெடுத்து எறியும் வேளையில்
சுடுமே தன்கையும் சர்வக்ஞ     - சர். உரை. 675

எனவரும் சர்வக்ஞரின் வாசகமும்,
கள் குடிப்பவன் குடிகாரன் அல்ல
பொய் பேசுபவன் குடிகாரன் ஆவான்
கள் குடிப்பதைவிடப் பொய் பேசுதல்கேடு
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே!   - வேமனா.47

எனவரும் வேமனாவின் வாசகமும் புலப்படுத்துகின்றன. அம்மூன்று வாசகங்களுள் தமிழ் (திருக்குறள்), கன்னட (சர்வக்ஞர் உரைப்பா) வாசகங்கள் பிறருக்குத் தீங்கு (அழிவு) செய்தால், அத்தீங்கு நம்மையே வந்தடையும் (2001:93) என்கின்றமையும், தெலுங்கு (வேமனா பாடல்கள்) வாசகம் கள் குடிப்பதைவிட பொய்ப்பேசுதல்  கேடு என்கின்றமையும் கவனிக்கத்தக்கன. இங்குக் குறிக்கப்பட்ட கருத்துகள் கேடு என்பதைச் சுட்டிக் காண்பிக்க ஒப்புநோக்கி விளக்கப்பட்டவையாகும்.
சர்வக்ஞர் குறிப்பிடும் கேடுகள்
 கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறார் சர்வக்ஞர். இவர் பொதுமானுடப் பண்புகளைப் பாடியுள்ளார். இவரின் பாடல்கள் கன்னட நாட்டுப்புறவியல் வடிவமான மூன்று அடிகளில் காணப்படுகின்றன. இதனை அம்மொழியில் திரிபதி என்பர். இவ்வடிவத்தில் பாடப்பட்ட ஓர் அறநூல் சர்வக்ஞர் வசனகளு. இந்நூல் இரண்டாயிரத்து நூறு பாடல்கள் கொண்டுள்ளதாகக் கருதப் படுகிறது. இவற்றுள் சில இடைச் செருகல்கள் உள்ளன என்ற ஒரு கருத்தும் உண்டு (2001:அணிந்துரை).
 அந்நூலின் தமிழ் மொழியாக்கத்தில் (சர்வக்ஞர் உரைப்பா) ஆயிரத்து நூற்றி தொண்ணூற்று எட்டுப் பாடல்கள் காணப்படுகின்றன. இப்பாடல்கள் கன்னட மொழியைப்பேசும் மக்களின் வாழ்வியலையும் சமூகச் சூழல்களையும் சுட்டிக் காண்பிக்கின்றன. அப்பாடல்களுள் அறுபத்து நான்கு பாடல்கள் சர்வக்ஞர் கருதிய கேடுகளைப் பட்டியலிடுகின்றன. இவை அடிமை கேடுடைத்து, மன்னன் இன்றேல் கேடு, பொதுமை விரும்பான், கேடுகள், வீரத்தில் கோழை, உயர்ந்தோரை விட்டகல்க, துட்டனைக் கண்டால் தூர விலகு, உணர்ந்தோர் நட்பே சிறப்பாம், இராவணன், தீயறிவு பயக்கும் கேடு, பிராமணர் இலக்கணம், குணமிலான், தன்னலவாதிகள், சமணம் புகழுடைத்ததா, கீழோர் நட்பு வேண்டற்க, கேடாவன கேடுடைத்து, பொய்மனம், போர், காமம், பிறரைக் கடிதல், பேராசை, செய்ந்நன்றி கொன்றார்க்கும் உதவி, உறக்கம், நீர்ப்பானம், சொல்வன்மை, வறுமை, பணிப்பெண், தச்சன், புறங்கூறல், மாந்தர் பல்வகை, பட்டறிவு, நிறை பெண்டிரை ஐயம் கொள்ளற்க, கேடு பயப்பன, உணவின் தன்மை, தூற்றலும் போற்றலும், பரத்தையின் கூற்றுகள், வேசிக்கு இவை கேடு பயப்பன, உணவின் தன்மை ஆகிய பகுப்புகளில் இடம்பெறுபவை. இப்பாகுபாட்டின்படி இங்கு விளக்க முனையவில்லை. மாறாக அக்கேடுகள் அனைத்தையும் தொகுத்துத் தாவரம், மன்னரசு, பொதுப்பெண்டிர், வேசிப்பெண்டிர், பொது ஆடவர், பொதுமனிதர், விலங்கு, நோய், வறியோர், உணவு, இல்லம், யோகி எனவரும் பொருண்மைகள் அடிப்படையில் பகுத்துப் பார்க்கப்படுகிறது. அதற்குமுன் சர்வக்ஞர் கேடுகளைச் சுருக்கித் தொகுத்தல் நோக்கில் எவ்வாறு தருகிறார் என்பதைக் காண்போம்.
கேடு: பொதுக்கருத்தியல்
கேடு, ஒரு அறக்கருத்தை வலியுறுத்துவதற்காக உவமைப்படுத்திக் காட்டப்பட்டிருக்கலாம் என எண்ணத்தோன்றும். ஆனால், அந்த அறுபத்து நான்குப் பாடல்களிலும் உவமைப்படுத்தும் போக்கு நிலவவில்லை. மாறாக, பட்டியிலிடும் தன்மையே நிலவுகின்றன எனலாம். காட்டாக,
வேடருக்குக் குடைகேடு ஆடுநர்க்கு மழைக்கேடு
கேட்டுண்போருக்கு வற்கடம் கேடு – புன்சொல்
கேடாம் அந்தணருக்கு சர்வக்ஞ    - சர்.உரை.550

ஆட்டருகே இருப்பதும்கேடு கிறுக்கனின் நட்பும்கேடு
ஒட்டியுறவாடும் காதலர்க்குச் சினமழுகைக் கேடு
மூடரின் நட்பும்கேடு சர்வக்ஞ    - சர்.உரை.577

எனவரும் பாடல்களைச் சுட்டலாம். இப்பாடல்கள் தீங்கானச் செயல்பாடுகள் இவையிவை எனப் பட்டியலிடுகின்றன. இங்குத் தமிழ், தெலுங்குக் கவிஞர்களைவிட இவர்(சர்வக்ஞர்) அறக்கருத்தியல்களைச் சுருக்கித் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்பதைக் கீழ்வரும் இரு கேடுகள் அடங்கிய அடி புலப்படுத்தும்.
 முற்றியபயிருக்கு புழுக்கள் கேடு, கழனிக்குக் களைகேடு - சர்.உரை.444
என்பது தாவரம் தொடர்பான கேடுக்கான சான்று. இதனுள் இடம்பெறும் முதலாவது கேடு முற்றியபயிருக்கு புழுக்கள். அதாவது, நெல்மணிகளை தரக்கூடிய நேரத்தில், அப்பயிரை புழுக்கள் தக்கினால் அப்பயிரும் அழியும், அதனை நம்பியிருந்த உழவனும் அழிவான், அவனை நம்பியிருந்த நுகர்வோனும் அழிவான் என்பது அதன் உள்ளார்ந்த கருத்து. இக்கருத்துக்கு நெருங்கிய தொடர்புடையதே கழனிக்குக் களை எனும் இரண்டாவது கேடு. இது ஒரு வயல் நல்ல விளைச்சலைத் தரவேண்டுமானால், அது களையில்லாத வயலாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பயிர் முளைத்து; தளிர்த்து; முற்றி நெல்மணியைத் தராது. நெல்மணியைத் தரவிட்டால் அதனை நம்பிய அனைவரும் அழிய நேரிடும் என்பதே இதன் மறைமுகக் கருத்து. இது போன்றே இங்கு வகுத்தளிக்கப்பெற்ற கேடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இனி, அவர் (சர்வக்ஞர்) தரும் கேடுகள் குறித்த பட்டியலைக் காண்போம்.
தாவரம் தொடர்பான கேடுகள்
 தாவரத்தினால் ஏற்படும் கேடுகள் குறித்தும், தாவரத்துக்கு ஏற்படும் கேடுகள் குறித்தும் இப்பட்டியலில் இடம்பெறுபவை: ஒற்றை வெற்றிலை, வெற்றிலை மெல்லுதல், கொட்டைப்பாக்குக் கடிப்பது, பயிருக்கு மழையின்மை, நனைந்த பயிர், முற்றிய பயிருக்குப் புழுக்கள், பழுக்கும் இலை, கடும்புதரின் வயல், மேட்டு வயல், கழனிக்குக் களை,   ஈச்சமரம், மிளகால் வாழை என்பன.
மன்னரசு தொடர்பான கேடுகள்

 மன்னராட்சிக் காலத்தில் அரசர், அரசி, போர்வீரர், மக்கள் போல்வருக்கு ஏற்படும் அல்லது அவர்களால் பிறருக்கு ஏற்படும் கேடுகள் குறித்தும் விளக்குகின்றது இப்பட்டியல். அதனுள் காணலாகும் கேடுகளாக போரில் அச்சம், போரில் தோற்பது, போரில் முன்னேறுதல், வேந்தன் இல்லா நாடு, பார்மன்னர் மடிவது, ஓடுவதறியா வீரன், புனையும் வித்தை, பொய்யுரைக்கும் சேவகர், மன்னர்பால் கோளுரைப்பது, அரசல்பால் பொதுமை, இறுக்கமற்ற வில், வளையா வில், வார்குழல் அரசிக்குத் தீ நடத்தை, நாடுவோர்க்கு ஈயா மன் என்பன அமைகின்றன.
பொதுப்பெண்டிர் தொடர்பான கேடுகள்
 பணிப் பெண்ணுக்குச் சுருள் கூந்தல், சிறுமிக்கு முதியோன், சிறுமியின் கெட்ட செயல், பயனிலா கைம்பெண்டிர், தொங்கிய மார்பு, மார்புகளைப் பிறர் அறியக் காட்டும் பெண், பெண்ணுக்குக் கள்வன், பெண்ணின் ஆசை, கணைக் கண்களுக்கு மைதீட்டும் மருமகள், வண்ண ஒப்பனையின் மனையாள், இல்லாள் சினம், நட்பை முறிக்கும் இல்லாள், பொய்யுரைக்கும் பெண், இருமணப் பெண்டிர் உறவு, கீழோரில் பெண்ணெடுப்பது, பொறாமையின் மகள், பெண்ணை நம்புதல், கட்டுக் குலைந்த முதியோள் உறவு, மனைவியற்றவன் வாழ்வு, கருப்புப் பெண், கூடிக் களிக்க நாணும் பெண், நிறை மகளிரை அடைத்தல் ஆகியன பொதுப்பெண்டிர் தொடர்பான கேடுகளாம்.
வேசிப்பெண்டிர் தொடர்பான கேடுகள்

 இற்றைக் காலத்தில் வேசி என்ற சொல்லைக் கேடுடைய சொல்லாகவே கருதுகிறோம்/கருதிவருகின்றோம். இருப்பினும் அப்பெண்களுக்கும் சில கேடுகள் இருப்பதைச் சுட்டிக் காண்பிக்கிறார் சர்வக்ஞர். அவை: வேசிக்கு விவேகம், பொல்லாவேசி இருப்பது, கண்கவர் வேசியின் எச்சில், வேசியுடன் கூடுதல், கனிகைக்குக் கருத்தரித்தல், வேசிப்பால் பெற்ற துன்பம், பரத்தைக்கு நெடுந்துயில், பரத்தைக்குச் சருமநோய், பரத்தையால் மேன்மை என்பன.
பொது ஆடவருக்கான கேடுகள்
 அறிவிலி மகன், பெற்றவளைத் தூற்றும் மகன், பெற்றவளைப் புறந்தள்ளும் மகன், வீடுதிரும்பா மருமகன், தச்சனின் இடக்கைப் பணி, செருக்குடைய மகன், பிறன்மனை விரும்புதல், கூழும் ஆளும் கூட்டமும் இல்லாதவன், பிற பெண்டிரோடு அகமகிழ்ந்தாடுவது, அல்குலை நாடுவது என்பன பொது ஆடவருக்கான கேடுகளாம்.
பொதுமனிதருக்கான கேடுகள்
 ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தக் கூடிய கேடுகள் இப்படைப்பில் மிகுதி. இப்பட்டியலில் இடம்பெறும் கேடுகள் தொண்ணூறுக்கும் மேல் உள. அவை: அச்சமுடையோர்பால் பழகிச் செல்வது, உலகிலுற்ற அடிமை வாழ்வு, பிள்ளைக்கு மடமை, குறுடுக்குக் கோள் களைதல், அறிவின்மை, அறியா ஊரில் வாழ்வது, கெடுமதி, நல்லோரை விட்டகல்தல், கீழோர்ச் சுற்றம், மூடருக்கு மேன்மை, உறக்கத்துக்குப் பேன், உறக்கத்தில் குறட்டை விடுதல், நுனிப்பலகைத் துயில், கீழோரின் துன்பம், கொலை களவு உள்ள ஊர் நடுவே நல்லோர் தலையெடுத்தல், அந்தணர் இல்லாமை, அந்தணருக்குப் புன்சொல், வேடருக்குக் குடை, வேடனுக்கு ஆற்றியத் தொண்டு, ஆடுநர்க்கு மழை, கேட்டுண்போருக்கு வற்கடம், சமணம் இல்லா உலகு, கிறுக்கனின் நட்பு, மூடரின் நட்பு, ஒட்டி உறவாடும் காதலருக்குச் சினமும் அழுகையும், அறுந்த வலை, அறிவர் முன் விண்மீன்கள் அனைத்தையும் கூட்டுவது, கடுமிருளில் வாசம்; காண்பது (பார்ப்பது); பயணம், மாந்தருக்குச் சிறை, செல்வந்தர் பகை, காலுக்குக் கூர்கற்கள்; உருள் கற்கள்; முள்; முடம், நாவுக்கு இடமறியாது உரைப்பது, செருக்கு, முகமதியர் சுற்றம், வணிகர் நட்பு, வடிகட்டிய மூடன் நட்பு, இடையன் நட்பு, உத்தம வாழ்வுக்குப் பித்தர் நட்பு, பாதகர் நட்பு, முகம் வாட இரந்து உண்ணுவது, பிறரைக் கடிதல், பேராசை, பிறருக்குக் கேடு நினைத்தல், மனித சுற்றத்துக்குள் சண்டை, வீட்டில் நாளும் பயம், உள்ளூர்ப் பகை, கூதலில் பனி, உடலுக்குப் பனி, புளியால் பால், ஆடியும் கூடியும் களைவது, நாடிவரும் பண்பிலார் உறவு, பண்பிலா உறவினர் வருகை, கயவர் உறவு, நிந்திப்போர் உறவு, புன்சொல்லின் உறவு, சூதில் தோற்பது, தாழை மழலையர் கண்பின் இருப்பது, மகவைக் காவாது, வட்டிக்கு வட்டி, ஏறுகரையற்ற நீர்த்தேக்கம், நல்லோருக்குப் புறங்கூறுவோன் மூச்சு, கோணல் மனம், சொன்னதை மறைப்பது, பொய்யுரைப்பது, நாவாய்ப் பகை, மனத்துள் குழப்பம், ஊர்ப்பகை, ஊர்க்காவல் பகை, புழுவரித்த பல், முறிந்த பற்களின் சிரிப்பு, புண்படுத்தும் சொல், நம்பிக்கையைப் பாழாக்குதல், பாட்டையில் வாசிப்பது, மொட்டைச் சூடுவது, ஈகையறியாருக்குப் பொருள், மிகைப் புணர்ச்சி, அறுந்த உடை, புறங்கூறல், நாரியாரை நம்புதல், கல்வி ஒடுக்குதல், சாவும் நோவும், நாகவிடம், நோயாளிக்குப் புணர்ச்சி, நோயாளிக்குக் கத்தரிக்காய் என்பன.
விலங்கு தொடர்பான கேடுகள்
 கரி மிரள்தல், ஆட்டருகே இருப்பது, காட்டுக்குக் கொல் விலங்கு, கூகைக்குத் தொல்லைதரும் பகல், கழுதைக்குக் கொள், உழவுக்குத் தாங்கியே நடக்கும் எருது, இணைபொருந்தா எருது, ஏருழாக் காளையின் நிலை, உன்மத்த நாய் ஆகியன விலங்கு தொடர்பான கேடுகளாம்.
நோய் தொடர்பான கேடுகள்
 நோய்கள் பலவகை உண்டு. அவற்றுள் புண் எனும் நோய் தொடர்பான கேடுகள் மட்டும் பட்டியலில் இடம்பெறுகின்றன. அவை: அழகுக்குப் புண், புண்ணுக்குத் தினவு, புரையோடிய புண், கண்ணின் நோய், மலவாய்க்கு மூலம், புண்ணின் முகம் முதலியன.
வறியோருக்குரிய கேடுகள்
பொருளாதரத்தில் பின் தங்கியவர்களை வறியோர் என அழைக்கிறோம். இவர்களுக்குரிய கேடுகள் தீச்சொல், வீங்கிய முதுகு, சினம், அளப்பரிய சினம், கல்லென அமர்தல், சிதைந்த பானை, சொல்லாடுவது, கள்ளம் உரைப்பது, அரசவை ஆகியனவாம் என்கிறார் சர்வக்ஞர்.
உணவு தொடர்பான கேடுகள்
எச்சில் பண்டம், மாலையுணவு பயத்தல், எண்ணெய்ச்சோறு உண்பது, கொள்ளி ஒளியில் உண்பது, கருகிய உணவு, நொய்யுணவு ஆகியன உணவு தொடர்பான கேடுகளாம்.
இல்லம் தொடர்பான கேடுகள்
 கல்தூண் சரிந்த வீடு, இடிந்த தூண், மனையில் எந்நாளும் சண்டையும் சச்சரவும், சிதைந்த கூரை, நீரொழுகும் வீடு, மூங்கில் வீடு, வீட்டில் தருக்கின் சண்டை முதலியன இல்லம் தொடர்பான கேடுகளாம்.
யோகிக்குரிய கேடுகள்
 யோக நிலையில் இருப்பவனுக்கு எண்ணியே சினத்தல், பொருள், குலம் என்பன கேடுகளாம்.
 முடிப்பாக, மேற்கூறிய கருத்துக்களை நோக்கும்பொழுது காலத்திற்கேற்றார்போல் கேடுகளின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டேதான் வருகின்றதென்பதையும், அவர் சமண சமயத்தைத் தழுவியவர் என்பதையும், பிராமணியர்களைப் போற்றுபவர் என்பதையும், சில சமூகங்களை (முகமதியர், வணிகர், இடையர்) புறந்தள்ளியுள்ளார் என்பதையும், பெண்டிர் தொடர்பான கேடுகள் மிதியாக கூறியுள்ளமையிலிருந்து தந்தைவழிச் சமூகத்தை நிலைநிறுத்த வேண்டும் எனும் தொன்மம் அவரிடத்து நிலவுவதையும்  அறிய முடிகின்றன.
கேடுகள் இல்லாத உலகைக் காண்பது அரிது என்பதை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எழுதப்பட்ட இலக்கியங்கள் சுட்டிக் காண்பித்துக் கொண்டே வருகின்றன. அக்கேடுகளைத் தவிர்த்து இன்பமுடன் வாழவேண்டும் என்பதே இலக்கியக் கலைஞரின் எண்ணம். இருப்பினும் அதை மனிதன் பின்பற்றுவதில்லை என்பதே நடப்பியல்சார் உண்மை. பின்பற்றாமைக்கு அக்கேடுகள் அனைத்தும் ஏதாவதொரு வகையில் பழக்க வழக்கமாகவும், பண்பாடாகவும், விழாவிற்குரியதாகவும் அமைந்துவிடுகின்றன என்பதேயாம். இதற்குச் சான்றாக பட்டாசு வெடித்தலைச் சுட்டிக்காட்டலாம். பாட்டாசு வெடிக்கும்போது இரைச்சல், காற்றுமாசுபாடு, தூய்மைக்கேடு, உடல்நலக்குறைவு ஆகிய தீங்கானச் செயல்களே மிகுதியாக நிகழ்கின்றன. இதனை அனைவரும் அறிவர். இருந்தாலும் மனிதன், பிறந்தால், பூப்பெய்தினால், தலைவர் வருகை புரிந்தால், விளையாட்டிலோ தேர்தலிலோ வெற்றிவாகை சூடினால், திருமணம் நிகழ்த்தினால், திருவிழா கொண்டாடினால், இறப்பு எய்தினால் என அதன் பட்டியலை நீட்டித்து பட்டாசை வெடிக்கச் செய்கிறான். இது நடைமுறை வாழ்க்கையில் இயல்பான ஒன்றாக உருப்பெற்றுவிட்டது. இத்தன்மை போன்றே பிற தன்மைக்குரிய கேடுகளும் அமைவதால்  அவை குறைவதற்கான வாய்ப்பில்லை என்பது வெளிப்படை. இருப்பினும் அவைகளைப் புறந்தள்ள வேண்டும் என்பதே அறநூல்களின் கருத்தாகப் புலப்படுகின்றது.
துணைநின்றவை
நூல்கள்
1. அறவாணன் க. ப., 2007, திருக்குறள் உரை, தமிழ்க்கோட்டம், சென்னை.
2. இறையடியான் (மொ.ஆ.), 2001, சர்வக்ஞர் உரைப்பா, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
3. வேலாயுதம் பிள்ளை சாமி., 1952, திருக்குறள் சொல்லடைவு, மொழியரசிப் பதிப்பகம், சென்னை.

அகராதிகள்
4. சார்லசு பிலிப்பு பிரவுன், 1985, ஆங்கிலம் – தெலுங்கு அகரதி, ஆசியன் கல்வி நிறுவனம், சென்னை.
5. ..................., 2011, தெலுங்கு – ஆங்கில அகராதி, ஆசியன் கல்வி நிறுவனம், சென்னை.
6.  சீனிவாசன் டா. பா. ச., 2006, தமிழ் – கன்னட இருமொழி அகராதி, பிரியதரிசினி பதிப்பகம், பெங்களூர்.
7. பவானந்தம் பிள்ளை ச., 2012, பவானந்தர் தமிழ்ச்சொல்லகராதி, நியூ செஞ்சூரி புத்தக நிலையம், சென்னை.
8. லிப்கோ, 2011, தமிழ் – தமிழ் – ஆங்கில அகராதி, லிப்கோ பதிப்பகம், சென்னை.
9. ............., 2012, ஆங்கிலம் – ஆங்கிலம் – தமிழ் அகராதி, லிப்கோ பதிப்பகம், சென்னை.

இக்கட்டுரை பதிவுகள் இதழில் நவம்பர் 11 அன்று வெளியிடப்பட்டது. இங்கு நமது வாசகர்களுக்காக தரப்பெறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன