- த. சத்தியராஜ்
இவ்வுலகில் வாழும் மனிதர் அனைவரும் மனநோய் உடையவர்களே. அந்நோயின் வெளிப்பாடு அவரவர் விருப்பத்திற்கேற்ப அமையும். அவ்விருப்பம் மட்டுமே மனநோயாகாது. தற்சிந்தனையின்மையும் அதன்பாற்படும் என்பது தெலுங்குக் கவிஞர் வேமனாவின் எண்ணம். அவர்,
- மனையாள் பேச்சைக் கேட்பவன்
- மனைவி, மக்களைப் பெறக்கூடாது என நினைப்பவன்
- மனமான முத்தியை விட்டு, அதனைப் பிறவிடத்துத் தேடி அலைபவன்
எனவரும் மூன்று தன்மைகள உடையோரே மனநோயுடையவர் என்கிறார். அவரின் பாடல்கள் புலப்படுத்தும் கருத்துக்களைக் காண்போம்.
மனைவி பேச்சைக் கேட்டு உடன் பிறப்புகளைப்
பிரிந்து போனவன் பைத்தியக் காரன்
நாயின் வாளைப் பிடித்துக் கோதாவரியை நீந்த முடியுமா?
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! (பாடல் - 86)
என்பது முதல் தன்மையைக் குறிக்கும் பாடல். இப்பாடல்வழி அவர், கூட்டுக் குடும்பம் எனும் கட்டமைப்பு உடைந்து தனிக் குடும்பம் எனும் கட்டமைப்பு உருவாவதற்கு மனைவி என்பவளே முதற்காரணம் என்பதை வெளிபடுத்துகிறார். தனிக்குடும்பக் கட்டமைப்பு எனபது நாயின் வாளைப் பிடித்துக் கோதாவரியை நீந்துவதற்கு ஒப்பானது என்கிறார். எனவே, மனைவியின் பேச்சைக் கேட்காதே என்கிறார்.
மனைவி மக்களைப் பெறக்கூடாது
துயரத்தில் மூழ்குபவன் பைத்தியக் காரன்
தரையில் உள்ள கல்லினைத் தலையில் வைத்துக் கொண்டதுபோல்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! (பாடல் - 87)
என்பது இரண்டாம் தன்மையைக் குறிக்கும் பாடல். இபாடல்வழி, மனைவியிம் மக்களும் இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத உறவுகள். மனைவி என்பவள் இல்லற வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் துணைநிற்பவள், குழந்தை, இல்லறவாழ்வில் நிலவும் ஊடல்களைத் தீர்க்கக் காரணமாக இருபவர்கள். அவ்விரு உறவுகள் இல்லை எனில் தரையில் உள்ள கல்லினைத் தலையில் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவதற்கு ஒப்பானது என்கிறார் வேமனா.
மனத்திலுள்ள முக்திக்காக மற்ற இடத்தில்
தேடப் போனவன் பைத்தியக் காரன்
ஆடு கையிலிருக்க அதனைத் தேடும் இடையனைப் போல
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! (பாடல் - 87)
என்பது மூன்றாம் தன்மையைக் குறிக்கும் பாடல். இப்பாடல்வழி, அவர் முக்தி என்பது எங்கிருக்கிறது? அது கடவுளிடத்தில் இருக்கிறது என்பது ஆத்திகன் சொல். இல்லை, அது நம்மிடமே இருக்கிறது அல்லது முக்தி என்பது மூடத்தனம் எனக் கூறுவது நாத்திகன் சொல். இது இவ்வாறிருக்க ஆடு கையிலிருக்க அதனைத் தேடும் இடையனைப் போல மனமான முக்தியை விட்டு அதனைதேடி அலைபவரின் தன்மை என்கிறார்.
ஆக, மாந்தன் மனைவி, மக்களைக் கண்டிப்பாகப் பெறுதல், மனையாளின் பேச்சைக் கேட்காதிருத்தல், மனமான கோயிலை வழிபடுதல் ஆகியனவற்றைக் கடைபிடித்தாலே இல்லறம் நல்லறமாக இருக்கும் என்கிறார் போலும் எனலாம்.
பார்வை: சர்மா சி.ஆர்., 1992, வேமன்னாவின் மணிமொழிகள், தெலுங்குப் பல்கலைக் கழகம், ஐதராபாத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன