- த. சத்தியராஜ்
கி.பி.19ஆம் நூற்றாண்டில்
சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) எழுதப்பெற்றன. இவ்விரு
நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர்.
சாமிகவிராயர் தமிழ் இலக்கணக் கூறுகளை விளக்கியுள்ளார். சின்னயசூரி, தெலுங்கு
இலக்கணக் கூறுகளுடன் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிக்குரிய இலக்கணக் கூறுகளையும்
விளக்கியுள்ளார். இதனைச் சஞ்ஞா பரிச்சேதம் முதற்கொண்டே காணலாம்.
பெரும்பான்மையான இடங்களில், தெலுங்கு
சமசுகிருத இலக்கணக் கூறுகளை ஒப்பிட்டு விளக்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தெலுங்கு இலக்கணக் கூறுகளை விளக்குவதுதான் சின்னயசூரியின் நோக்கமாக உள்ளது. இத்தன்மைமிகு இவ்விரு நூல்களை புறக்கட்டமைப்புச் சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இருப்பினும் தெலுங்கு இலக்கணக் கூறுகளை விளக்குவதுதான் சின்னயசூரியின் நோக்கமாக உள்ளது. இத்தன்மைமிகு இவ்விரு நூல்களை புறக்கட்டமைப்புச் சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சுவாமிநாதம் அதிகாரம், மரபு என்னும் புறக்கட்டமைப்பில்
உள்ளது. பாலவியாகரணம் பரிச்சேதம் எனும் புறக்கட்டமைப்பில் உள்ளது. சுவாமிநாதம்
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என அதிகாரப் பகுப்புடைத்து. இதன்கண் உள்ள
ஒவ்வொரு அதிகாரமும் மும்மூன்று இயல்களாகக் கொண்டமைந்துள்ளது. பாலவியாகரணம் அதிகாரப்பகுப்பு
முறையைப் பின்பற்றவில்லை. ஆனால் பத்து பரிச்சேதங்களைக் கொண்டமைந்துள்ளது.
சுவாமிநாதத்தில்,
.... .... ... ...
செப்பெ ழுத்துச் சொற்பொருள்யாப்பு
அலங்காரம் எனுமைந்
தமிழ்தின் இலக் கணவிரிவை ஒவ்வொருமூன்று இயலாய்
அடக்கிமொழி குவன்; சுவாமி நாதம் இந்நூற் பெயரே – சுவாமி.1
என்னும் மூன்றடிகளில் புறக்கட்டமைப்புச் சிந்தனையையும் நூலின் பெயரையும்
கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளத் தன்மை புதுமையாக்கத்தில் (இப்புதுமையாக்கம் சாமிகவிராயர் காலத்தில் தோன்றியதன்று.
இதனை வீரசோழியர் காலந்தொட்டே காணலாம். இருப்பினும் வீரசோழியத்தின் (கி.பி.11,
நூ.3) பின்பு தோன்றின மரபிலக்கணங்களில் இலக்கணக்கொத்தும் (கி.பி.17, நூ.6)
சுவாமிநாதமும் (கி.பி.19) பின்பற்றியுள்ளமைக்
குறிப்பிடத் தக்கனவாகும்) ஒன்றாக அமைந்துள்ளதெனலாம். மேலும், நூலின் பெயர், ஆசிரியரின் பெயர், மரபு,
ஊர், நூல் தோன்றியதின் காரணம் ஆகியனவும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அதனைப்
பின்வரும் நூற்பாச் சுட்டிநிற்கும்.
பூமிசைக்கீழ்க்
கடல்குமரி குடகம்வேங் கடத்துட்
புகுந்ததமிழி
ழியலைந்தும் அகவல்வி ருத்தமதால்
ஆ(ம்)முன்னூல்
வழியாய்மெய் யநித்தநூல்விரி வென்று
அஞ்சும்
அவர் உணர்ந்துபய நூலுணரே துவினான்
ஏம்மெனுஞ்
சுவாமிநாதம் பகர்ந்தான்பொ திகைநிகண்டு
உரைத்தோன்சில்
சுப்பிரமணி யனெனும் என்னை
மாமகனென்
றருளும் எந்தை நதிகுலன்கல் லிடையூர்
வாழ்சுவாமி
கவிராசன் எனநூல்வல் லோனே
– சுவாமி.1
இத்தன்மைகளைப் பாலவியாகரணத்தில் காண இயலவில்லை.
இரு நூலாரும் எழுத்துகளின்
அறிமுகம், சொல்வகை, புணர்ச்சி (சந்தி), வேற்றுமை (விபத்தி), பெயர் (நாமம்), வினை (கிரியா),
எச்சம் ஆகியனவற்றை முன்வைத்துள்ளனர். சாமிகவிராயர் நூல்வழி அறிதலையும் (பாயிரம்),
சின்னயசூரி மொழித்தூய்மைநிலை, முதல், இரண்டாம் நிலைத் திரிசொற்கள் ஆகியனவற்றையும்
கூடுதலாக எண்ணியுள்ளனர்.
பொருள், யாப்பு, அணி
இலக்கணக் கூறுகள் சுவாமிநாதத்தில் விளக்கப்பட்டுள்ளன; இவைகளுள் யாப்பியல் (சந்தசு)
கூறுமட்டும் பாலவியாகரணத்தில் (பிர. 23 - 25) சிந்திக்கப்பட்டுள்ளது. அச்சிந்தனை
நன்னயாவைப் பின்பற்றி எழுந்ததென்பது குறிப்பிடத்தக்கது. அச்சிந்தனையாவது யாதெனில்
வளி/யதி (எதுகை), பிராசம் (மோனை) என்பனவாகும். இவ்விரு நூல்களின் புறக்கட்டமைப்பு
நிலை ஒப்பீட்டு அட்டவணை வருமாறு:
சுவாமிநாதம் பாலவியாகரணம்
நூல்வழி சஞ்ஞா பரிச்சேதம்
எழுத்ததிகாரம் சந்தி பரிச்சேதம்
சொல்லதிகாரம் தத்சம
பரிச்சேதம்
பொருளதிகாரம் ஆச்சிக
பரிச்சேதம்
யாப்பதிகாரம் காரக பரிச்சேதம்
அணியதிகாரம் சமாச
பரிச்சேதம்
தத்தித பரிச்சேதம்
கிரியா பரிச்சேதம்
கிருதந்த
பரிச்சேதம்
பிரகீர்ணக
பரிச்சேதம்
எழுத்துக்களின் அறிமுகத்திற்கும்
சொற்களின் அறிமுகத்திற்கும் தனித்தனி அதிகாரப் பகுப்புமுறையைச் சாமிகவிராயர்
பின்பற்றியுள்ளார். சின்னயசூரி, ஒரே இயலில்(சஞ்ஞா பரிச்சேதம்) எழுத்தையும்
சொல்லின் வகைப்பாடுகளையும் அறிமுகம் செய்துவிட்டுப் பின்பு சொற்களைத் தூய தெலுங்கு
மொழிச்சொற்கள், பிறமொழிச் சொற்கள் எனத் தனித்தனியாக அடையாளம் காணுமாறு
படைத்துள்ளார். இது வேறுபாடும் புதுமையாக்கமுமாக உள்ளதெனலாம். ஏனெனில், சுவாமிநாதத்தில்
வடசொற்கள் கையாளப்பட்டுள்ளன; ஆனால் அவற்றுக்கான இலக்கணம் உரைக்கவில்லை.
சுவாமிநாதம்
பொது, சிறப்புப் பாயிரங்களை விளக்கிப் பின்பு 15, 16, 17 ஆகிய மூன்று
நூற்பாக்களில் தமிழ் எழுத்துகளின் அறிமுகத்தையும் அவற்றின் பிறப்புக்குறித்தக்
கருத்தியலையும் விளக்கியுள்ளது. பாலவியாகரணம் இம்முறையைப் பின்பற்றவில்லை.
நேரிடையாக எழுத்துகளின் அறிமுகத்துடன் தொடங்கியுள்ளது. அம்மாறுபாடு யாதெனில், தெலுங்கு
மொழிக்கு எழுதப்பட்ட இலக்கணம் அம்மொழிக்குரிய எழுத்துகளை அறிமுகம் செய்யாமல்
சமசுகிருத, பிராகிருத மொழிகளின் எழுத்துகளை முதலில் அறிமுகம் செய்தமையாகும்.
அதனைப் பின்வரும் விதிகள் புலப்படுத்டும்.
ஸம்ஸ்க்ரு1தநகு
வர்ணமு லேப3தி3 – பா.வி.சஞ்.1
ப்ராக்ரு1தநகு
வர்ணமுலு நலுவதி3 –
பா.வி.சஞ். 2
தெலுகு3நகு
வர்ணமுலு முப்பதி3யாறு –
பா.வி.சஞ். 3
சொல் குறித்த கருத்தியலைச் சுவாமிநாதம் பெயர், வினை, எச்சம்
என்பனவாக முன்வைத்துள்ளது. தமிழிலக்கணச் சொல்வகைப்பாட்டுள் வரும் இடையும் உரியும்
எச்ச மரபிற்குள் வைத்து விளக்கப்பட்டுள்ளன. பாலவியாகரணத்தில் தத்சமம், ஆச்சிகம்,
வினை ஆகியன மட்டும் தனித்தனி இயலாக விளக்கப்பட, தத்பவம், தேசியம், கிராமியம் ஆகியன
ஆங்காங்கு விளக்கப்பட்டுள்ளன. அவை தவித்த பிறவும் இடையிடையே கோடிட்டுக்
காண்பித்துச் செல்லப்பட்டுள்ளன.
பெயர்ச்சொல் குறித்த சிந்தனையைச் சுவாமிநாதம் பெயர்மரபு
எனும் இயலில் விளக்கியுள்ளது. அவ்விளக்கம், சொல்லின் பொது இலக்கணம்,
சொல்வகைப்பாடு, வழக்குச் சொற்கள், செய்யுளீட்டற்குரியச் சொற்கள், வேற்றுமை
என்பனவாக உள்ளன. இக்கருத்தியலைப் பாலவியாகரணம் ஆறு இயல்களில்( சந்தி, தத்சம்ம்,
ஆச்சிகம், காரகம், தத்திதம், சமாசம்) முன்வைத்துள்ளது.
வினைச்சொல் குறித்த சிந்தனையை இரு நூலாரும் பேசியுள்ளனர்.
சாமிகவிராயர் வினைச்சொற்களை ஏழு நூற்பாக்களில் விளக்கியுள்ளனர். அவ்விளக்கம்,
பொது, தனி, தொடர், முற்று, விகுதி, பிறவினை, தொழிற்பெயர், இருதிணை, எச்சம் (பெயர்,
வினை) என்பனவாக அமைந்துள்ளன. சின்னயசூரி, வினையியல் (கிரியா), வினையொடு இயல் (கிருதந்தம்)
ஆயிரு இயல்களில் (146 விதிகள்) விரிவாக விளக்கியுள்ளார். இத்தன்மை மொழியியல்
நோக்கில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எஞ்சிய சிந்தனைகளை விளக்குமுறையில் இரு நூலாரின்
கருத்துகளும் வேறுபட்டே காணப்படுகின்றது. இதனைச் சாமிகவிராயர் இடைச்சொல்(பொது,
சிறப்பு, ஏ, உம், மற்று), உரிச்சொல், வழு, பொதுமை நீங்கு நெறி(திணை, பால், இடம்),
தொகை, தொகாநிலைத் தொடர், எச்சம், பொருள்கோள் என விளக்கிச் செல்ல, சின்னயசூரி
எழுத்தியல் (பிறப்பு, புணர்ப்பு), சொல்லியல் (திட்டுதல், ஒருசொல்லடுக்கு),
யாப்பியல் (சந்தசு) என விளக்கிச் சென்றமையிலிருந்து அறியலாம்.
மேற்குறித்த சிந்தனைகள் அனைத்தையும் விளக்குவதற்குச்
சாமிகவிராயர் தமிழ், சமசுகிருதச் சொற்களையும் சின்னயசூரி தெலுங்கு, சமசுகிருதம்,
பிராகிருதச் சொற்களையும் கலைச்சொற்களாக எடுத்தாண்டுள்ளனர்.
இதுவரை விளக்கப்பட்ட கருத்தியல்களின்வழி அறிய வருவன: 1.
இருநூல்களும் ஒரே காலக்கட்டத்தில் எழுதப்பட்டுள்ளவை, 2. இருவரும் தத்தம்
மொழிக்குரிய இலக்கணக் கூறுகளை விளக்குவதையே கருத்தில் கொண்டமை, 3. அவ்விருவரும்
சமசுகிருதச் சொற்களைக் கலைச்சொற்களாக எடுத்தாண்டமை. இத்தன்மைகளின் வாயில்
அவ்விருவிருக்கும் வடமொழிப் புலமை மிகுந்தே காணப்பட்டுள்ளமை அறியப்
பெறுகின்றதெனலாம்.
துணைநூற்பட்டியல்
தமிழ்
1.
அகத்தியலிங்கம் ச., திராவிட மொழிகள் -1, ம்ணிவாசகர்
பதிப்பகம், சிதம்பரம்.
2.
அறவேந்தன் இரா., 2006, “வீரசோழியம் ஆந்திர சப்த சிந்தமணி
புறக்கட்டமைப்பு நிலையில் ஒபாய்வு”, ஒப்பு நோக்கில் இலக்கிய இலக்கணங்கள், நியூவிசன் வெளியீட்டகம்,
தஞ்சாவூர்.
3.
சண்முகம் செ.வை.(உரை.), 1975, சுவமிநாதம் மூலமும் உரையும்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர்.
4.
சாவித்ரி சி.(மொ.ஆ.), ஆந்திர சப்த சிந்தாமணி, அச்சில்.
5.
தமிழண்ணல், 2008, தொல்காப்பிய மூலமும் குறிப்புரையும்,
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
ஆங்கிலம்
6.
Subrahmanyam P.S., 2002, Ba:lavya:karaNamu of Paravastu
Cinnayasu:ri, Dravidian Linguistics Association, Thiruvananthapuram.
தெலுங்கு
7.
பரவத்து சின்னயசூரி, 1994, பாலவியாகரணம், பாலசரசுவதி
புத்தகாலயம், சென்னை.
(இக்கட்டுரை
திசம்பர் 2012 அன்று கற்பகம் பல்கலைக் கழகமும்(கோயம்பத்தூர்) ஆர்
அனைத்திந்திய கழகத்தாராலும் நிகழ்த்தப் பெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற
கட்டுரையாகும். இது தமிழ் ஆறு எனும் தொகுப்பு நூலில் 222 - 225 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன