திங்கள், 18 நவம்பர், 2024

தமிழ் ஆய்வாளர்கள் பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதில் தயக்கம் ஏன்?

 இனம் பல்துறைப் பன்னாட்டு ஆய்விதழ், பல்வேறு முயற்சிகளைக் கடந்த காலங்களில் செயல்வடிவங்களுக்குக் கொண்டுவந்தது; இப்பொழுது கொண்டு வருவதிலும் முனைப்புக்காட்டி வருகின்றது என்பதைத் தொடர்ந்து இனத்துடன் பயணிப்பவர்கள் அறிவர். தமிழ் ஆய்வுகள் பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுமுறைகளைக் கடைப்பிடித்து எழுதுவதில் பின்தங்கியே உள்ளன. அதனால் என்னவோ புதிய ஆய்வுச் சிந்தனைகளைக் காண்பது அரிதாகவே உள்ளது. ஆய்வேடுகள் எழுதுவதுபோன்றே ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது என்ற எண்ணம் இன்று அருகியே உள்ளது. ஒரு தலைப்பினை எடுத்துக்கொண்டு அதற்கு முன்பு அந்தத் தலைப்பில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளனவா என்ற புரிதல் இல்லாமல் அத்தலைப்பிற்குரிய விளக்கவுரையாகப் பெரும்பான்மையான ஆய்வுகள் குவிந்துள்ளன என்றால் மிகையில்லை. அவற்றை ஆய்வுகள் என்பதா அல்லது பொதுக்கட்டுரை என்பதா? 

செவ்வாய், 12 நவம்பர், 2024

கோவை - சென்னை - தஞ்சாவூர் - கோவை

9.11.2024 அன்று இரவு 9.30-ற்குக் கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சென்னைக்குச் செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் ஏறி தூங்கினேன். அடுத்த நாள் (10.11.2024) காலை 7.30-ற்குச் சென்னை கிளாம்பாக்கம் வந்திறங்கினேன். பேருந்தும் பேருந்து நிலையமும் நல்ல தரத்துடன் இருந்தமை கண்டு மகிழ்ச்சியாய் இருந்தது. மற்றொருபுறம் இவை தொடர்ந்து பராமரிக்கப்படாவிட்டால் இந்தக் கட்டுமானமும் சீக்கிரம் சிதலமடையுமே என்ற எண்ணத்துடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வந்தேன். காலை, மாலை என இரண்டு அமர்வுகளில் ஆய்வாளர்களுக்குத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளின் முதல் இலக்கண நூல்களின் குறிப்புகளையும் ஆய்ந்து பார்க்க வேண்டிய களங்களையும் அறிமுகம் செய்தேன். 

வியாழன், 7 நவம்பர், 2024

வரலாற்றுநிலை - சமகாநிலை

இலக்கணங்களுக்குத் தரவுகளாகச் செய்யுளும், வழக்கும் அமைகின்றன.  இவை வரலாற்றுநிலையைச் சார்ந்தது என்றோ அல்லது சமகால நிலையைச் சார்ந்தது என்றோ ஆய்ந்து பார்ப்போமேயானால் பிழைபடும்.  ஏனெனில் உலகில் எழுதப்பட்ட அனைத்து இலக்கணங்களின் தரவுகளும் இவ்விரு காலநிலைகளைச் சார்ந்தே இருக்கும்.  அதனை அறிய ஒவ்வொரு இலக்கணக்கூறினையும் முன்பு அல்லது பின்பு எழுதப்பட்ட இலக்கணங்களோடு ஒப்பிடல் வேண்டும்.  இங்கு இலக்கணவியல் அறிஞரின் கருத்து குறிப்பிடத்தக்கது.