இலக்கணங்களுக்குத் தரவுகளாகச் செய்யுளும், வழக்கும் அமைகின்றன. இவை வரலாற்றுநிலையைச் சார்ந்தது என்றோ அல்லது சமகால நிலையைச் சார்ந்தது என்றோ ஆய்ந்து பார்ப்போமேயானால் பிழைபடும். ஏனெனில் உலகில் எழுதப்பட்ட அனைத்து இலக்கணங்களின் தரவுகளும் இவ்விரு காலநிலைகளைச் சார்ந்தே இருக்கும். அதனை அறிய ஒவ்வொரு இலக்கணக்கூறினையும் முன்பு அல்லது பின்பு எழுதப்பட்ட இலக்கணங்களோடு ஒப்பிடல் வேண்டும். இங்கு இலக்கணவியல் அறிஞரின் கருத்து குறிப்பிடத்தக்கது.
...ஒவ்வோர் இலக்கணக்கூறையும் முந்திய இலக்கணங்களோடு ஒப்பிட்டு அவற்றுள் முதனூல் எனக் கருதப்படும் இலக்கணத்தின் வழி நிற்கும் சிந்தனை ஓட்டத்தையே வரலாற்றையொட்டிய போக்கு என்று இங்குக் குறிப்பிடுகிறோம். முதனூல் - வழிநூல் என்னும் இவ்வரலாற்று உறவு மரபிலக்கண உருவாக்கத்தின் அடிப்படையாகும் (2010:313).
இக்கருத்தின் அடிப்படையில் நோக்கும்போது தொல்காப்பியமும் பாலவியாகரணமும் வழிநூல் வகையே சாரும். தொல்காப்பியம் அகத்திய மரபையும் ஐந்திர மரபையும் பின்பற்றி எழுதப்பட்டுள்ளதால் வழிநூல் வகையைச் சாரும் என்பார் இலக்கணவியல் அறிஞர் (2010:313). பாலவியாகரணம் முழுக்க முழுக்கப் பாணினிய (சமசுகிருதம்) மரபைத் தாங்கியிருந்தாலும் தெலுங்கின் முதல் இலக்கண நூலான ஆந்திர சப்த சிந்தாமணி, தெலுங்கில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூலான ஆந்திர பாசா பூசணம் (காண்க: பாலவியாகரணம் ஒரு பயனாக்க இலக்கணம்) ஆகிய மரபுகளையும் உள்வாங்கி எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘வரலாற்று நிலை - சமகால நிலை’ என்பதின் இணைவரையறைகளாகச் செய்யுள் - வழக்கு என்பதைக் கருதலாம் (சு. இரா., 2010:309). ஓர் இலக்கணக் கலைஞன் செய்யுளையும், வழக்கையும் தரவுகளாகக் கொண்டு இலக்கணம் எழுத முற்படுகிறான். அவ்வாறு எழுதும்போது வரலாற்றுச் செல்நெறி அவனுள் அமைந்து விடுகிறது என்பதே உண்மை. இவ்வரலாற்றுநிலைச் செயற்பாடுகளில் செய்யுள், முன்னைய இலக்கணங்கள், இலக்கியங்கள் ஆகியன தரவுகளாக அமைகின்றன. இவ்விலக்கிய இலக்கணங்களை மதிப்பீடு செய்தல், பொருத்திப் பார்த்தல் போல்வன ஆய்வுத்தளங்கள் அமைகின்றன (சு. இரா., 2010:310). அதன் பின்னரே இலக்கணம் எனும் நூல் அவ்வவ் மொழிகளில் வாசகர்களுக்குக் கிடைக்கிறது. குறிப்பாக, இந்நூலாக்கத்தில் உயர்ந்தோர் வழக்கே பெரிதும் பயனாகிறது. இஃது அனைத்து மரபிலக்கணக் கலைஞரின் பொதுவியல்பாக அமைந்து கிடக்கிறது.
தொல்காப்பியர் செய்யுளையும் வழக்கையும் தமது நூலின் தரவுகளாகக் கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ‘முந்துநூல் கண்டு முறைப்படி எண்ணி’ எனப் பாயிர அடிகளிலிருந்து தொல்காப்பியர் மேற்கொண்ட வரலாற்றுச் செல்நெறியை அறியலாம். இவ்வரலாற்றுச் செல்நெறி மரபிலக்கணங்களின் பொதுவியல்பு என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்தாகும். அவர் வரலாற்றுச் செல்நெறியைச் சுட்டியிருக்கும் பாங்கும் குறிப்பிடத்தக்கது.
தமிழிலக்கணங்களைக் காலவரிசையில் தொகுத்துப் பார்க்கும்போது இவ்வரலாற்றுச் செல்நெறியின் வளர்ச்சிநிலைகளை ஒவ்வொரு இலக்கணத்திலும் காணமுடியும். எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியர் கூறும் ‘தகுதி வழக்கு’ என்னும் கருத்தாக்கம் வளர்ச்சிப் படிநிலைகளாகப் பிற்கால இலக்கணங்களில் சுட்டப்படும் இயல்பைக் கூறலாம்.
தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை இலவே - தொல்.சொல்.17
வழக்கும் தகுதியுமாய் வந்தொழுகும் சொற்கள்
இழுக்கல்ல முன்னை இயல்பு - நேமி.சொல்.10
இலக்கண முடையது இலக்கணப் போலி
மரூஉ என்றாகும் மூவகை இயல்பும்
இடக்க ரடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனுமுத் தகுதியோடு ஆறாம் வழக்கியல் - நன்.267
இலக்கண முடையது இலக்கணப் போலி
மரூஉ என்றாகும் மூவகை இயல்பும்
இடக் கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனுமுத் தகுதியோடு ஆறாம் வழக்கியல் - இ.வி.168
இயல்பும் தகுதியும் எனவழக்கு இருமைய - மு.வீ.பெ.14
அவற்றுள்
இயல்பு மரூஉ இலக்கண முடையன இலக்
கணப்போலி என்மனார் கற்றுணர்ந் தோரே - மு.வீ.பெ.15
தகுதி குழூஉக்குறி மங்கலம் இடக்க
ரடக்கல் என்மனார் அறிந்திசி னோரே - மு.வீ.பெ.16
தகுதியும் வழக்கையும் தக்கோர் வரையார் -மு.வீ.ஒ.54
முத்துவீரியத்தின் முன்னை இலக்கணங்கள் இலக்கண விளக்கமும் நன்னூலும் நேமிநாதமும் தொல்காப்பியமும்; தொல்காப்பியத்தின் முன்னை இலக்கணங்களான அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசை நுணுக்கமும், அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன எழுத்துச் சொற்பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பனவியலும் சோதிடமும் காந்தருவமும் கூத்தும் பிறவுமாம் (நச்.உரை). நச்சினார்க்கினியரின் இத்தொகுப்புரை, இறையனார் களவியலுரையை அடிப்படையாகக் கொண்டது (சு. இரா., 2010:310 - 311).
பாலவியாகரணத்தின் முந்து நூல்களாக ஆந்திர சப்த சிந்தாமணி (கி.பி.11), ஆந்திர பாசா பூசணம் (கி.பி.13) போல்வன அமைகின்றன. இங்கு நரசிங்க ரெட்டியின் குறிப்புக் கருதத்தக்கது.
பாலவியாகரணத்தில் காணப்படும் இடுகுறிகள் (சஞ்ஞாக்கள்): 1. பாணினீயம், 2. சிந்தாமணி, 3. அதர்வணீயம், 4. பிரகிருதீயம், 5. சின்னயசூரி என ஐந்து வகைகள்.
• பாணினீ: அஷ்டாத்தியாயிலிருந்து சின்னயசூரி எடுத்தாண்ட (தெச்சு குந்ந) இடுகுறிகள். ஆம்ரேடிதம் (அடுக்குத்தொடர்), நாமம் (பெயர்), விபத்தி (வேற்றுமை), சம்பிரதானம், அதிகரணம், பிரதம, மத்தியம, உத்தம, கிருத்து, தத்திதம் என்பவை.
• சிந்தாமணி: ஆந்திர சப்த சிந்தாமணியிலிருந்து சின்னயசூரி எடுத்தாண்ட இடுகுறிகள். வக்ரம், வக்ரதமம், பருச, சரள, இசுத்திரம், ஸவர்ணம், துருதம், துருதப்பிரகிருதிகம், கள, தற்சம, தற்பவ, தேசிக, கிராமியம், சந்தி, சம்சுலேசம், வர்ணகம், மகத்து, ஔப விபத்தி என்பவை.
• அதர்வணீயம்: ‘சப்த பல்லவ’ இடுகுறி அதர்வணீயம்.
• பிரகிருதீயம்: வர்க3லோநி ஸரி வர்ணகத்துக்கு யுக்கலு, யுக்3மமலு என வர்க3லோநி பே4ஸி வர்ணகத்துக்கு அயுக்குலு அயுக்3மலு என, பிராகிருத இலக்கணத்திலே ஒரு வகையாக பயன்படுத்தப்பட்டது தான் சின்னயசூரி வர்க3யுக்குலு என்றே கூறியுள்ளார்.
இவ் இடுகுறி பாணினீயத்தில் ஒரு வகையாக, பிராகிருத இலக்கணத்தில் ஒரு வகையாக சொல்லப்பட்டுள்ளது. சின்னயசூரி பிராகிருத இலக்கண முறைப்படி கூறியுள்ளார்.
• சின்னயசூரி: சின்னயசூரி மேற்கூறப்பட்ட இடுகுறிகள் சமசுகிருத பிராகிருத இலக்கணங்கள், சிந்தாமணி முதல் எழுதப்பட்ட நூல்களிலிருந்து எடுத்தாண்டது போக தானும் சில இடுகுறிகளைக் குறிப்பிட்டுள்ளார். அவை: டு3மந்தம், தீ3ர்க2ம், முங்ங, முத்து முதலானவை (பக்.35 - 36).
இப்பாலவியாகரணத்தை சின்னயசூரி எழுதுவதற்குமுன் ஆந்திர சப்தானு சாசனம், பத்யாந்திரவியாகரணம், சூத்திராந்திர வியாகரணம், சப்த லட்சண சங்கிரகம், அட்சரகுச்சம் ஆகிய இலக்கண நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவையாவும் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி ஆந்திர சப்த சிந்தாமணிக்கு உரையொன்றும் எழுதியுள்ளார். இவ்வுரை எம்மொழியில் (சமசுகிருதமா? தெலுங்கா?) எழுதப்பட்டுள்ளது என அறிய முடியவில்லை (ஆ.ஆ.,1999:38). இதிலிருந்து வரலாற்று நிலையைக் குறித்து நிற்கும் செய்யுள்களைத் தரவுகளாக கொண்டுள்ளார் என்பதும், அவரின் நுண்மான் நுழைபுலமும் புலப்படும்.
சின்னயசூரி, மூலகடிக கேதன (கி.பி.13), அப்பகவி (கி.பி.16) ஆகியோரைத் தொடர்ந்து (ஆ.ஆ.,1999:40) பாலவியாகரணத்தைத் தெலுங்கில் எழுதியுள்ளார். இதிலிருந்து அவர் பிறமொழியில் எழுதுவதைத் தவிர்த்துத் தாய்மொழியிலே கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என எண்ணியுள்ளார். இருப்பினும் அவர் மிகுதியாகச் சமசுகிருதச் சொற்களையே கலைச்சொற்களாகப் பயன்படுத்தியுள்ளார். ஆயின் அவரால் முன்னைய மரபைக் கட்டுடைப்பு செய்து வெளிவர முடியவில்லை என்பதே உண்மை. எவ்வாறிருப்பினும் அவர் மொழித்தூய்மை காத்தலை வலியுறுத்துகிறார் என்பது புலப்படுகிறது. அவர் முன்னைய இலக்கிய, இலக்கணங்களைத் தரவுகளாகக் கொண்டுள்ளார் என்பதற்கு,
ஸம்ஸ்க்ரு1த ப்ராக்ரு1த துல்யம்ப3டு3 பா4ஷ தத்ஸமம்பு3 - பா.வி. சஞ்.19
(சமசுகிருத பிராகிருத ஒப்புமொழி தற்சமம்)
ஸம்ஸ்க்ரு1த ப்ராக்ரு1தப4வம்ப3கு3 பா4ஷ தத்3ப4வம்பு3 - பா.வி. சஞ்.20
(சமசுகிருத பிராகிருத பிறப்புமொழி தற்பவம்)
த்ரிலிங்க3தே3ஸ2 வ்யவஹார ஸித்3த4ம்ப3கு3 பா4ஷ தே3ஸ்யம்பு3 - பா.வி.சஞ்.21
(திரிலிங்கத் தேச வழக்குமொழி தேசிகம்)
லக்ஷண விருத்3த4ம்ப3கு3 பா4ஷ க்3ராம்யம்பு3 - பா.வி.சஞ்.22
(இலக்கணத்துக்கு உட்படாமொழி கிராமியம்)
ஆகிய விதிகளைக் குறிப்பிடலாம். ஏனெனின் இதன் முந்தைய வரலாற்றுச் செல்நெறியை நோக்கினால் பாலவியாகரணமும் முந்து நூல்களின் தரவு என்பது புலப்படும்.
தஜ்ஜா ஸமாச தே3ஸ்2யா க்3ராம்யா சேயம் சதுர்விதா4 ப4வதி ப்ரக்ருதி த்3வயஜா தஜ்ஜா துல்யாது சமாப்ரா வாஹிநீ தே3ஸ்2யா - ஆந்.சிந்.சஞ்.46
தத்ஸமம்பு3 த3க்க தக்கிந நாலுகு3
நச்ச தெநுcகு3 லந்து3 ரகி2லஜநுலு
நந்து3லோந க்3ராம்ய மநcகு3 நெவ்வரு நொப்ப
ரொருலc தெ3க3டு3சோட நொப்பு நதி3யு - ஆந்.பூச.27
சின்னயசூரி சமகாலப் பேச்சு வழக்குகளையும் தரவுகளாகப் பயன்படுத்தியுள்ளார் என்பது புலப்படுகிறது. இவர் தாம் எழுதிய இலக்கணத்திற்குத் தாமே உரையும் எடுத்துக்காட்டுகளையும் தந்துள்ளார். இத்தன்மை இடைக்காலத்தில் திராவிடமொழி இலக்கணக் கலைஞரிடையே காணப்படும் பொதுவியல்பு (த.சத்தியரஜ், 2013:10). அக்காட்டுகளில் வரும் பெரும்பான்மையான சொற்கள் பேச்சு வழக்குச் சொற்கள் எனலாம். இருப்பினும் அவர் கிராமியச் சொல்வகை விளக்கத்தில் கொச்சைச் சொற்களைத் தவிர்க்க வேண்டும் (சஞ்.22) என அறிவுறுத்துகிறார். அவ்வாறு கூறுவதற்கு அச்சொற்கள் இலக்கியத்தில் பயன்படுத்தத் தகாத சொற்கள் என்றும், இலக்கணவரம்பிற்கு உட்பட்டு வராத சொற்கள் என்றும் முன்னோர் மரபில் (ஆந்.சிந். 9, 10, 12, 46) இடம்பெறுவதால் எனலாம்.
வஸ்தாcடு3 : வருவான்
தெஸ்தாcடு3 : கொண்டு வருவான்
வச்செநி : வந்தது
என்பன கொச்சை வழக்குச் சொற்கள் எனக் குறிப்பிடுகிறார். அச்சொல் குறித்த தரவுகள் இல்லாமல் கூறிவிட முடியாது. ஆயின் அவருக்குப் பேச்சு வழக்குச் சொற்களும் தரவாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து அவர் உயர்ந்தோர் பேச்சுவழக்குச் சொற்களுக்கே முக்கியத்துவம் தந்துள்ளமையை அறிய முடிகிறது. அவர் எடுத்துக்காட்டும்/தவிர்க்கும் கொச்சைச் சொற்களை முன்னோர் பயன்படுத்தியிருந்தமையை அறிந்திருக்கிறார். ஆதலின் அவர்,
ஆர்யவ்ய வஹாரம்பு3ல த்3ருஷ்டம்பு3 க்3ராஹ்யம்பு3 (பா.வி.சஞ்.23)
(பெரியோர் வழுமொழி ஏற்கப்படும்)
எனும் விதியை அமைத்து விடுகிறார். இவ்விதியின்படி அவர் கூறுவதாவது: கல்வியில் சிறந்தோர் / உயர்ந்தோர் பயன்படுத்தத் தகாத / இலக்கண வரம்பிற்கு உட்பட்டு வராத சொற்களைப் பயன்படுத்தியிருப்பாராயின் அச்சொற்களை / அவ்வழக்கை ஏற்றுக் கொள்ளலாம் என்பதாகும். இங்கு ஆனைவாரி ஆனந்தனின் மொழிபெயர்ப்பு நூலில் இடம்பெறும் கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை.
…இவ்வாறு கருத்திலும் பொருளிலும் எவ்விதப் புதுமையையும் ஏற்றுக்கொள்ளாத பாராட்ட விரும்பாத பழைமைவாதத்துக்குச் சொந்தக்காரர்தான், சின்னையாசூரி என்றாலும் ஆரம்ப காலத்தில் தன்னைத் தரக்குறைவாக நோக்கிய உயர்சாதிப் புலமையாளர்களையெல்லாம் விட, மரபுத்துவத்திற்கும், பழமைவாதத்திற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதை நிரூபித்துக்காட்டினார் சூரி (ஆ.ஆ.,1999:25).
சூரி, எழுத்துப் பிழைகளைத் தவிர்த்து, ஒரு சில இலக்கியச் சொல்லாட்சிகளையும் சேர்ப்பதில்தான் சூரி முற்றிலுமாகத் தவிர்த்தார்! (ஆ.ஆ.,1999:27)
இக்கருத்துக்கள்வழி அவர் பிற்காலப் படைப்புகளைப் புறந்தள்ளினாலும் விளக்கம் தேவைப்படும் இடத்தில் சான்று காட்டிச் செல்லவும் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு விளக்கப்பெற்ற கருத்துக்களின் வழி ‘வரலாற்று நிலை - சமகால நிலை’ எனும் கருத்தியல் வாய்பாடு தொல்காப்பியத்திலும், பாலவியாகரணத்திலும் பொதுவியல்பாய் அமைந்துள்ளமையை அறிய முடிகிறது.
- இலக்கணவியல் ஒப்பியல் நூலிலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன