இனம் பல்துறைப் பன்னாட்டு ஆய்விதழ், பல்வேறு முயற்சிகளைக் கடந்த காலங்களில் செயல்வடிவங்களுக்குக் கொண்டுவந்தது; இப்பொழுது கொண்டு வருவதிலும் முனைப்புக்காட்டி வருகின்றது என்பதைத் தொடர்ந்து இனத்துடன் பயணிப்பவர்கள் அறிவர். தமிழ் ஆய்வுகள் பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுமுறைகளைக் கடைப்பிடித்து எழுதுவதில் பின்தங்கியே உள்ளன. அதனால் என்னவோ புதிய ஆய்வுச் சிந்தனைகளைக் காண்பது அரிதாகவே உள்ளது. ஆய்வேடுகள் எழுதுவதுபோன்றே ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது என்ற எண்ணம் இன்று அருகியே உள்ளது. ஒரு தலைப்பினை எடுத்துக்கொண்டு அதற்கு முன்பு அந்தத் தலைப்பில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளனவா என்ற புரிதல் இல்லாமல் அத்தலைப்பிற்குரிய விளக்கவுரையாகப் பெரும்பான்மையான ஆய்வுகள் குவிந்துள்ளன என்றால் மிகையில்லை. அவற்றை ஆய்வுகள் என்பதா அல்லது பொதுக்கட்டுரை என்பதா?
ஆகையால், இனம் இதழானது கடந்த பத்தாண்டுகள் கண்ட படிப்பினைகளுள் அதுவும் ஒன்று. எனவே, இனம் பதினோராம் ஆண்டில் தடம் பதிக்கும்பொழுது பன்னாட்டுத்தர நிலையில் அறிவியல்சார் ஆய்வுகள் பின்பற்றிவரும் அமைப்புமுறையைத் தமிழ் ஆய்வாளர்தம் சிந்தையிலும் கொண்டு வந்து, புதுப்பொலிவுடன் இன்னும் சில அளவுகோல்களை வரையறுத்து ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட முனைகின்றது. அதன் முதற்கட்ட முயற்சியாக, அந்த ஆய்வுக்கட்டமைப்பின் அடிப்படையிலான ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்குரிய வழிகாட்டல் குறிப்புகளை இதன்வழி வழங்குகின்றது; பின்பு அதுகுறித்த பயிற்சிகளையும் வழங்குவது எனத் திட்டமிட்டு வருகின்றது. அதனடிப்படையில் உருவானதே இந்த எழுத்தாக்கமாகும். அதாவது அறிவியல்முறையைப் பின்பற்றும் (முதலிரு) முன்னணி ஆய்விதழ்களின் அமைப்புமுறையை இதன்மூலம் இங்குக் கவனப்பபடுத்த முனைகின்றது இனம். இதில் ஆய்வுச்சுருக்கம், திறவுச்சொற்கள், அறிமுகம், ஆய்வுமுறைகள், முடிவுகள், கலந்துரையாடல், முடிவுரை, மேற்கோள், துணைநூற்பட்டியல், கட்டுரைத் தகுதி ஆகியன அமைய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இங்கு இடம்பெறுகின்றன.
ஆய்வுச்சுருக்கம் (Abstract) அமையவேண்டிய முறை
முடிந்தவரை சுருக்கமாக எழுதுதல் வேண்டும்.
ஆய்வுச்சிக்கல், ஆய்வுமுறைகள், ஆய்வுமுடிவுகள் ஆகியன சுருக்கமாக இடம்பெறுதல் வேண்டும்.
தெளிவாக எழுதப்பட்டிருப்பதையும் புரிந்துகொள்வதற்கு எளிதாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
வாசிக்கத் தூண்டும் தன்மையில் இருத்தல் வேண்டும். அதேவேளையில் அது துல்லியமாகவும் குறிப்பிட்டதாகவும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கடைசியாக எழுதக்கூடியது ஆய்வுக்கட்டுரையின் உள்ளடக்கத்தைத் துல்லியமாக வெளிப்படுத்துவதாக அமைதல் வேண்டும்.
இவற்றை உள்வாங்கி எழுதப்பெறும் ஆய்வுக்கட்டுரைகள் பின்வரும் 10 விதிகளைப் பின்பற்றுவனவாக அமைதல் வேண்டும். அவை வருமாறு:-
1-2 வாக்கியங்கள்:- ஆய்வுநோக்கத்தை முன்னிறுத்துவதாக அமைதல் வேண்டும்.
2-3 வாக்கியங்கள்:- ஆய்வுச்சிக்கலுக்குரிய பொருட்கள், முறைகள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டுவதாக அமைதல்.
2-3 வாக்கியங்கள்:- ஆய்வின் முடிவுகளைக் கூறுதல்.
2 வாக்கியங்கள்:- ஆய்வுமுடிபு தொடர்புடைய விளக்கவுரையாக அமைதல் அல்லது ஆய்வின் முடிவுகள்குறித்து எழுதுதல்.
திறவுச்சொற்கள் (Keyword)
கட்டாயமாக ஆறு சொற்கள் இடம்பெறுதல் வேண்டும்.
அவை வாசகர், ஆய்வாளர்கள் தேடும் முதன்மைச் சொற்களாக இடம்பெறுதல் வேண்டும்.
அறிமுகம் (Introduction)
ஆய்வுச்சிக்கலை விளக்குவதாக இருத்தல் வேண்டும்.
அந்த ஆய்வுச்சிக்கலை விளக்குதவற்கு நீங்கள் பின்பற்றும் அணுகுமுறையை விவரிக்க வேண்டும்.
அந்த ஆய்வு தொடர்பாக ஏற்கனவே உள்ள தீர்வுகள், வரம்புகளைக் குறிப்பிட வேண்டும்.
முன்னாய்வுகள் (Literature of Review)
ஆய்வுப் பொருண்மைக்கு ஏற்ற முன்னாய்வுக் குறிப்புகளைத் தருதல் வேண்டும்.
அவற்றிலிருந்து இந்த ஆய்வு வேறுபடும் முறைமையை இறுதியில் தருதல் வேண்டும்.
ஆய்வுமுறைகள் (Research Methods) அமைய வேண்டிய முறை
ஆய்வுச்சிக்கல் எவ்வாறு ஆய்வு செய்யப்பட்டது என்பதை விரிவாக விவரிக்கவும்.
விளக்கம் தேவைப்படும் இடத்தில் விரிவான தகவலைச் சேர்க்கவும்.
முன்னர் வெளியிடப்பட்ட ஆய்வுமுறைகளை விவரிக்க வேண்டாம். ஆனால் தெளிவாக மேற்கோள் காட்டுதல் வேண்டும்.
ஆய்விற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், பொருட்களை அடையாளம் காணுதல் வேண்டும்.
வேதியியல் சூத்திரங்கள், குறியீடுகள் உட்பட சரியான குறியீடுகளைப் பயன்படுத்தவும்.
பயன்படுத்தப்படும் கட்டுப்பாடுகளை முன்வைக்க மறக்காதீர்கள்
இலக்கியம், இலக்கணம் சார்ந்த ஆய்வுகளாக இருக்கும்பொழுது கோட்பாட்டு அடிப்படையில் புதிய முடிவுகளைத் தருதல் வேண்டும்.
முடிவுகள் (Results)
முதன்மைநிலை முக்கியத்துவம் வாய்ந்த தரவை மட்டும் சேர்க்கவும். அதாவது முக்கிய, எதிர்பாராத கண்டுபிடிப்புகள் (இரண்டாம் நிலை முக்கியத்துவம் வாய்ந்த தரவுகளுக்குத் துணைப் பொருளைப் பயன்படுத்தவும்) இடம்பெறுதல்.
ஒரே மாதிரியான முடிவுகளை ஒன்றாக வைத்துக் குழப்பத்தை ஏற்படுத்தும் தன்மையைத் தவிர்க்கத் துணைத்தலைப்புகளைப் பயன்படுத்தவும்.
செயல்திறன், தெளிவுக்காகப் புள்ளிவிவரங்கள், அட்டவணைகளைப் பயன்படுத்தவும்.
புள்ளிவிவரப் பகுப்பாய்வுகளை வழங்கவும்.
கலந்துரையாடல் (Discussions)
ஆய்வில் கிடைத்த முடிவுகளை விளக்கமாகத் தருதல் வேண்டும்.
மிக முக்கியமான பகுதியாக இது அமைகின்றது.
விவாதத்தை முடிவுகளுடன் ஒத்துப்போகச் செய்து அவற்றை நிறைவு செய்தல் வேண்டும்.
வெளியிடப்பட்ட முடிவுகளை உங்கள் ஆய்வுடன் ஒப்பிடுதல் வேண்டும்.
சிலவற்றைத் தவிர்க்கும்பொழுது ஆய்வுத்தரம் இன்னும் மேம்படும். ஆகையால் தவிர்க்க வேண்டியவை வருமாறு:-
முடிவுகள் ஆதரிக்கக் கூடியதைத் தாண்டிய அறிக்கைகளைத் தவிர்த்தல் வேண்டும்.
குறிப்பிடப்படாத வெளிப்பாடுகளைப் புறந்தள்ளுதல் வேண்டும்.
புதிய விதிமுறைகள் ஏற்கனவே வரையறுக்கப்படவில்லை அல்லது உங்கள் தாளில் குறிப்பிடப்படவில்லை என்றால் அவற்றை இங்கு விளக்குதல் கூடாது.
அறிவியல் சார்ந்த உண்மைகளில் வேரூன்றாத சாத்தியமான விளக்கங்கள் பற்றிய ஊகங்களை எடுத்துக் கூறுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
முடிவுரையும் எதிர்காலச் செயல்பாடும் (Conclusion and Future Engagements)
உங்கள் ஆய்வு தற்போதைய அறிவின் நிலையை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை விளக்குங்கள்.
முடிவுகளையோ சுருக்கத்தையோ மீண்டும் இங்கே விளக்க வேண்டாம்.
இந்த ஆய்வின் நீட்சியால் கிடைக்கும் பயன்பாடுகள், நீட்டிப்புகள் அல்லது இந்த ஆய்வின் பயன்பாடுகளைப் பற்றி விவாதிக்கலாம்.
எதிர்கால ஆய்வின் தேவைகளைப் பரிந்துரைக்கலாம்.
உங்கள் ஆய்வினையும் அதன் தாக்கத்தினையும் மதிப்பாய்வு செய்பவர்கள் (Reviewer), பதிப்பாசிரியர்கள் (Editors) ஆகியோர் தீர்மானிக்க உதவும் வகையில் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.
மேற்கோள், துணைநூற்பட்டியல் வழங்குதல் (Citation and Reference Methods)
ஆய்விற்குத் துணைசெய்யும் ஆய்வுகளுக்குப் புள்ளிகள் (Citation) கிடைக்குமாறு மேற்கோள் எடுத்தாளப்பெறுதல் வேண்டும்.
ஆய்விற்குத் துணைசெய்யும் ஆய்வுகள், கூகுள் இசுகாலர் (Google Scholar), கோப்பசு (Scopus) போன்ற தளங்களில் இடம்பெற்று இருந்தால், அவற்றில் மேற்கோள் காண்பிக்கும் முறை காட்டப்பட்டிருக்கும். அவற்றை எடுத்துப் பயன்படுத்துதல் வேண்டும்.
அது அந்த ஆய்வாளருக்குப் புள்ளியை (Citation) வழங்கும்.
ஆய்விதழ் எத்தகைய மேற்கோள் முறையைப் பின்பற்றுகின்றதோ அதனைப் பின்பற்றுதல் வேண்டும்.
சான்றாக, எம்.எல்.ஏ, (MLA), ஏபிஏ (APA), சிகாகோ (Chigaco) போன்றவற்றைக் காட்டலாம். கீழே மேற்கோள் காண்பிக்கும் முறையைப் பார்க்கவும்.
Cite this paper:- Vinoth, A. et al. (2024). Automatic Identification of Meimayakkam in Tamil Words Using Rule Based and Transfer Learning Approaches. In: Chakravarthi, B.R., et al. Speech and Language Technologies for Low-Resource Languages. SPELLL 2023. Communications in Computer and Information Science, vol 2046. Springer, Cham. https://doi.org/10.1007/978-3-031-58495-4_33
இவ்வாறு வடிவமைக்கப்பட்ட ஆய்வுகளே பன்னாட்டு அளவில் கவனம் பெறும் என்பதை மறந்துவிட வேண்டாம். இவ்வாறு எழுதப்படும் ஆய்வுகளையே பதினோராம் ஆண்டிலிருந்து இனம் வெளியீட்டிற்கு எடுத்துக்கொள்ளும் என்பதையும் மறவாதீர்கள்.
தகுதி நீக்கம் (Reject Methods)
இனம் இந்த ஒன்பது ஆண்டுகளில் எந்த ஆய்வுக்கட்டுரைகளையும் ஒதுக்கியதே இல்லை. தரவுக் குறைபாடுடைய சில கட்டுரைகளுக்கு வழிகாட்டல்களை வழங்கியது. பின்பற்றாத கட்டுரைகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. முடிந்தவரை வெளியிடுவதற்குப் பதிப்புக்குழு முனைப்புக் காட்டியது என்பதையும் இங்குச் சுட்டிக்காட்ட வேண்டும். அதனால், கட்டுரையாளர்களுக்கு அதிலிருக்கும் செயல்பாட்டுத் தன்மைகளையும் விளக்கவேண்டிய தேவை உள்ளது. இனம் ஆய்விதழில் பதிப்பாசிரியர்கள் சில முடிவுகளை எடுக்கலாம். அவை,
அமைப்புமுறை இன்மையால் நீக்கம் (Desk Reject) - முதல்நிலை
ஆய்வுச்சிக்கல் இல்லாததால் நீக்கம் (Not problematic article) - இரண்டாம்நிலை
புதிய கருத்து இல்லாததால் நீக்கம் (None other Navality) - மூன்றாம்நிலை
என்பன. இந்த மூன்றின் அடிப்படையில்தான் ஆய்வுக்கட்டுரை தகுதிநீக்கம் பெறும். இது பன்னாட்டு ஆய்விதழ்கள் பின்பற்றும் ஒரு நடைமுறைச் செயல்பாடாகும். அந்த நடைமுறையைத்தான் இனம் ஆய்விதழ் இனிவரும் காலங்களில் பின்பற்றும் என்பதை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இனிவரும் ஒவ்வொரு பதிப்பிலும் தலையங்கமாகப் பன்னாட்டுத் தரநிலை ஆய்விதழ்களின் நெறிமுறைகளைப் பகுதிபகுதியாகப் பிரித்து விளக்கவும் காத்திருக்கின்றது இனம். தற்பொழுது இனம் பின்பற்றி வரும் மதிப்பாய்வு முறையின் தன்மைகளைப் பின்வரும் குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.
Review Type -
Anonymous Reviewer/Anonymous Author
Anonymous Reviewer/Disclosed Author
Open
Accept Submission
Cancel Review Round
Decline Submission
இதுவரை இனம் ஆய்விதழின் தற்போதைய (Progress) தன்மையிலான இணையத்தளத்தில் பதிவேற்றிய ஆய்வுக்கட்டுரைகளின் விவரத்தை அட்டவணை-1இல் காணலாம்.
Table - 1, IIETS Progress details
மகிழ்வுடன்,
மு. முனீஸ்மூர்த்தி
சத்தியராஜ் தங்கச்சாமி
முதன்மைப் பதிப்பாசிரியர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன