9.11.2024 அன்று இரவு 9.30-ற்குக் கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சென்னைக்குச் செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் ஏறி தூங்கினேன். அடுத்த நாள் (10.11.2024) காலை 7.30-ற்குச் சென்னை கிளாம்பாக்கம் வந்திறங்கினேன். பேருந்தும் பேருந்து நிலையமும் நல்ல தரத்துடன் இருந்தமை கண்டு மகிழ்ச்சியாய் இருந்தது. மற்றொருபுறம் இவை தொடர்ந்து பராமரிக்கப்படாவிட்டால் இந்தக் கட்டுமானமும் சீக்கிரம் சிதலமடையுமே என்ற எண்ணத்துடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வந்தேன். காலை, மாலை என இரண்டு அமர்வுகளில் ஆய்வாளர்களுக்குத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளின் முதல் இலக்கண நூல்களின் குறிப்புகளையும் ஆய்ந்து பார்க்க வேண்டிய களங்களையும் அறிமுகம் செய்தேன்.
அடுத்து, நண்பர் தங்கச்சாமியைத் தொடர்புகொண்டேன். அவர் இல்லம் சென்று பணி சார்ந்து உரையாடிவிட்டு அன்று இரவு மீண்டும் சென்னையிலிருந்து தஞ்சாவூர் பேருந்து ஏறினேன். அடுத்த நாள் (11.11.2024) காலை 5.30 - ற்குத் தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்திறங்கினேன். மீண்டும் வல்லம் பேருந்தைப் பிடித்துத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வந்தடைந்தேன். என் நெறியாளர் முனைவர் சி.சாவித்ரி அவர்களைச் சந்தித்துவிட்டு, கல்லூரிப் பேராசிரியர்களுக்குரிய புத்தொளிப் பயிற்சியில் காலை, மாலை என இரண்டு பயிற்றுரைகளைத் தொல்காப்பியம் - செய்யறிவு சார்ந்து வழங்கிவிட்டு மீண்டும் கோவையை அடுத்த நாள் (12.11. 2024) 1.30-ற்கு வந்து சேர்ந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன