வெள்ளி, 11 மார்ச், 2022

15. கையும் பொய்யும் - சக்திதாசன் சுப்பிரமணியன்

வரக் கூடாத இடம். வரத் தகாத நேரம். வராத விருந்தினன். வந்து விட்டான். வீட்டிலே விருந்து இருக்கிறது; ஆனால் பலருடன் அதைப் பகிர்ந்து உண்ணல் முடியாது. எனினும் ஒரு பகுதியை ருசி பார்க்கின்றான் விருந்தினன். இது போன்றதொரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியைத் தலைவி

தோழிக்குச் சொல்கிறாள். எதற்காக? ருசிக்கிறது. மேலும் 'விருந்து உண்ணல்' வேண்டும் என்பதற்காக. எப்படிச் சொல்கிறாள்? கேட்போம்:

சுடர்த் தொடீஇ! கேளாய்! - தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய 
கோதை பிரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி. 
நோதக்க செய்யும் சிறுபட்டி. மேல் ஓர்நாள்.
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே! 
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
அடற் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என. யானும் 
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 
'அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்' என்றேனா.
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்.
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, 
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் 
கடைக்கணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம் 
செய்தான். அக்கள்வன் மகன்.

'ஒளி பொருந்திய வளையலை அணிந்தவளே! கேள்!

ஒருநாள் -

"நானும் தாயும் வீட்டினுள் இருந்தோம். வாசலில் இரு

ஒரு குரல் கேட்டது:

'அம்மா! தாகத்துக்குத் தண்ணீர்.'
"கேட்டாள் என் தாய். 'வாசலில் யாரோ தண்ணீர் வேண்டு மென்று கேட்கிறார். கொண்டு போய் கொடு' என்றாள்.

"தண்ணீர் எடுத்து வந்தேன். வரும் போதே என் உள்ளம் என் வசமில்லை. என்னவோ செய்தது! உணர்ச்சி தலைக்கு ஏறியது.

"தண்ணீர்ச் செம்பைக் கொண்டு வந்தேன். வாசலில் நின்றான் ஓர் இளைஞன். அவனிடம் கொடுத்தேன். செம்பை வாங்கினான் அவன். அதே சமயத்தில் என் செங்கை பற்றி இழுத்தான்.

'அம்மா' என்று அலறினேன்.

"கரம் பற்றி இழுத்தவன் எவன் என்று பார்த்தேன். அவன் தான்! அந்தச் சுட்டிப் பயல்! நாம் சிறுவயதில் மணலிலே வீடு கட்டி விளையாடியபோது, அவ் வீட்டைத் தன் காலால் சிதைத்து விட்டு ஓடுவானே? அவன்!

கண்ணையும் கருத்தையும் கவரும் காளையாகி வந்து நின்றான். கண்டேன் அவனை; உள்ளம் பறி கொடுத்தேன்.

"அம்மா" என்று அலறிய குரல் கேட்டாள் என் தாய்.

'என்ன?' என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தாள்.

'என்ன சொல்வது? என்று விழித்தேன். கை பிடித்து

இழுத்தான் என்று சொல்வதா?

"சொன்னால் என்னாகும்? அவனை நையப் புடைத்து விரட்டி விடுவார்களே! அப்படிச் செய்யலாமா? கூடாது. எனவே, ஒரு பொய் சொன்னேன்:

மட மட வென்று நீர் குடித்தான். புறையேறிற்று. அதனால் தான் உன்னை அழைத்தேன். எங்கேயாவது இறந்துவிடப் போகிறானே, என்ற பயம் வந்து விட்டது' என்றேன்.

'அப்படியா! என்ன அப்பா அவசரம்? மெதுவாக நீர் குடிப்பதுதானே!' என்று கூறினாள் தாய். கூறிக் கொண்டே அவன் முதுகிலே தடவிக் கொடுத்தாள். "அப்போது அந்தத் திருட்டுப் பயல் என்ன செய்தான் தெரியுமா? என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினான்; புன் முறுவல் பூத்தான்?"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன