வியாழன், 10 மார்ச், 2022

53.நகையும் பகையும் - சக்திதாசன் சுப்பிரமணியன்

"விரோதிகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறாயே!" என்று கேட்டுக்கொண்டே வந்தாள் தோழி.

“என்ன?” என்றான் அவன்.

“ஒன்றுமில்லை. உலகத்திலே சிலர் உளர். நண்பனைப் போல நடிப்பர். எதுவரை? பையிலே பைசா இருக்கிற வரையில். செல்வாக்கு இருக்கிற வரையில். காசு கரைந்துபோனால் செல்வாக்குப் போய்விட்டால் - தூற்றுவதற்குத் தொடங்கி விடுவர். யார்? இதே பேர்வழிகள்தான். வேறு எவருமில்லை."

"வேறு சிலர் உளர். எதிரிலே புகழ்வர். 'ஆகா!' என்பர். 'இவரைப் போன்ற அறிஞர் இல்லை' என்பர். 'மூன்று உலகும் தேடிக் கண்டுபிடித்து விட்டமாக்கும்' என்பர். எப்போது? ஆள் இருக்கும்வரை. அப்பால் என்ன? ஆசாமி தலை மறைய வேண்டியது தான். 'ஆ!' அவன் கிடக்கிறான்' என்பர். இந்த மாதிரி 'கண்டால் காமாச்சி நாயகன்' பேர்வழிகள் உலகத்திலே அதிகம்.'

"இன்னும் சிலர் உளர். நெருங்கிப் பழகுவர். இரகசியங்களை எல்லாம் அறிந்து கொள்வார்கள். பிறகு அதை ஊர் முழுதும் பறை சாற்றுவார்கள்.

"இவையெல்லாம் என்ன? உயர்ந்த பண்புகளா? இல்லை இல்லை. ஒரு நாளுமில்லை. இம்மாதிரி இழி பண்பு கொண்டார் நட்பு உதாவது; உதவாது; ஒரு நாளும் உதவாது.

"என்ன செய்வது? நீ அந்த இழி பண்பு மிக்காருடன் சிநேகம் செய்து விட்டாய்! என்றாள் அவள்.

திடுக்கிட்டான் அவன்.

"யாருடன் சிநேகம் செய்தேன்?” என்று கேட்டான்.

"கண்கள் செய்துவிட்ட பாவம்"

என்றாள். "உனது காதலியின் கண்கள்தான் என்றாள்.

"என்ன செய்கின்றன?"

'ஒரு காலத்திலே உன்னைக் கவர்ந்தன; அழைத்தன; உன்னுடன் உறவாடின; கவினுற விளங்கின."

''உம்;பிறகு?"

"பிறகு என்ன? உன்னைக் காட்டிக் கொடுக்கத் தொடங்கி விட்டன. நீ பிரியப் போகிறாய் என்பதை ஊராருக்குப் பறை சாற்றத் தொடங்கிவிட்டன.'

அவன் சிரித்தான்.

"சிரிக்காதே! உனக்கு விரோதிகள் பலர் உள்ளனர்” என்றாள்.

"இன்னும் யார்?" என்றான்.

"உன் காதலியின் நெற்றி" என்றாள்.

"அது என்ன செய்கிறது?" என்று கேட்டான். "ந் கூடியிருந்தபோது - அவளுடன் சுகித்திருந்தபோது - மகிழ்ந்திருந்தபோது சந்திரன்போல் இருந்தது. இப்போது களையிழந்து விட்டது. பசலை படர்ந்து விட்டது. நீ 'பிரிகிறாய்: பிரிகிறாய்' என்று - பளபள என்று ஒளி வீசியது. பூரண ஊராரிடம் தம்பட்டம் அடிக்கிறது. தம்பட்டம் அடிக்கிறது.

"இவ்வளவுதானா? இன்னும் யாராவது உண்டா?" என்று கேட்டான்.

அந்த வளைகள்! அவளது கையிலே கிடந்து ஒளி வீசிய வளைகள். நீ போகிறாய் என்று அறிந்த உடனே. கழன்று
ஓடுகின்றன; விரைவாக ஓடுகின்றன, ஊர் முழுதும் பறைசாற்ற இத்தகைய நண்பர்களுடன்தான் நீ சிநேகம் செய்தாய்! என்றாள்.

'இடி இடி' என்று சிரித்தான் அவன்.

"சிரிக்கிறாய். பகைவர்களின் கொடுமை எப்பேர்பட்டது என்பது உனக்குத் தெரியவில்லை. "அந்தத் துரியோதனன் என்ன செய்தான். அரக்கு மாளிகை

கட்டினான். ஐவர் பாண்டவரையும் அதிலே அழைத்து வைத்தான்;

நெருப்பும் வைத்தான். தீப்பற்றி எரிந்தது.

"அப்போது வீமசேனன் என்ன செய்தான்? ஐவரையும் தூக்கிக் கொண்டு புது வழியே ஓடிச் சென்றான்.

"மூங்கில் காட்டிலே தீப்பிடித்து எரியும். அதன் இடையிலே அகப்பட்டுக் கொள்ளும் யானைக் கூட்டம். அப்போது பெரிய யானை என்ன செய்யும்? மூங்கில் காட்டை உடைத்துப் புதுவழி உண்டு பண்ணும். அவ் வழியே மற்ற யானைகளை அழைத்துச் செல்லும்.

"நீ செல்லும் காட்டு வழியிலே இத்தகைய காட்சிகளைக் காண்பாய். அப்போதுதான் பகைவர் செய்யும் அழிவு எத்தகையது என்பதை நீ அறிவாய்.

இவ்விதம் தோழி கூறினாள்.

"அதாவது என்ன? பெரியதோர் அழிவு ஏற்படப் போகிறு என்பதை அறிவுறுத்தினாள் தோழி."

அழிவு ஏன்? பிரிவினால்.

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால், 'ஐவர்' என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா, கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு. களி திகழ் கடா அத்த கடுங் களிறு அகத்தவா, முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல், ஒள் உருஅரக்கு இல்லை வளிமகன் உடை உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல,
எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம், அழுவம் சூழ், புகை அழல் அதர்பட மிதித்துத் தம் குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ்சுரம் இறத்திரால், ஐய! மற்று இவள் நிலைமை கேட்டீமின்:

மணக்குங்கால் மலர் அன்ன தகையவாய், சிறுது நீர் தணக்குங்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ - சிறப்புச் செய்து உழையராப் புகழ்பு ஏத்தி, மற்று அவர் புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்?

ஈங்கு நீர் அளிக்குங்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர் நீங்குங்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ - செல்வத்துள் சேர்த்தவர் வளன் உண்டு. மற்று அவர் ஒல்கத்து நல்கிலா உணர்விலார் தொடர்பு போல்?

ஒரு நாள் நீர் அளிக்குங்கால் ஒளி சிறந்து. ஒரு நாள் நீர் பாராட்டாக்கால், பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ - பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து. அம் மறை பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல்?

என ஆங்கு.

யாம் நிற் கூறுவது எவன் உண்டு? எம்மினும் நீ நற்கு அறிந்தனை; நெடுந் தகை! - வானம் துளி மாறு பொழுதின், இவ் உலகம் போலும் நின் அளி மாறு பொழுதின், இவ் ஆயிழை கவினே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன