செவ்வாய், 15 மார்ச், 2022

155. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

155. பாலை

(இது, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது)

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும் 
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் 
பொருளின் ஆகும் புனையிழை என்றுநம் 
இருளேர் ஐம்பால் நீவி யோரே

நோய்நாம் உழக்குவ மாயினுந் தாந்தம்
செய்வினை முடிக்க தோழி பல்வயின்
பயநிரை சேர்ந்த பாணாட் டாங்கண் 
நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய 
கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி
நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது
பெருங்களிறு மிதித்த அடியகத்து இரும்புலி 
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர்வழி
செயிர்தீர் நாவின் வயிரியர் பின்றை 
மண்ணார் முழவின் கண்ணகத்து அசைத்த

விரலூன்று வடுவில் தோன்றும் 
மரல்வாடு மருங்கின் மலையிறந் தோரே. - பாலைபாடிய பெருங் கடுங்கோ. 

தோழி! எனது காதலர் “அழகிய ஆபரண மணிந்தவளே! என்று என்னை அழைத்தார்; பாவத்தின் வழிச்செல்லாத வாழ்க்கையும் பிறரிடத்துச் சென்று இரவாச் செல்வமும் ஆகிய இரண்டும் பொருளினால் ஆகும் எனக்கூறி ஐந்துவகையாக முடிந்த எனது கூந்தலைத் தடவினார். நாம் இவ்விடத்து இருந்து வருந்தினோ மாயினும் அவர் தமது வினைமுடித்தற்குச் சென்றார். அவர் சென்ற வழியிடத்துள்ள பாணனது நாட்டில் பல விடங்களில் பயன் தரும் பசுநிரைகள் சேர்ந்து நிற்கும். நீண்ட சீழ்க்கை விடும் கோவலர் அவ்விடங்களில் கிணறு தோண்டியிருப்பர்; அவை களில் வளைந்த வாயுடைய இறை கூடையால் இறைப்பர். தண்ணீர் வடிந்துசென்ற சிறுகுழி காய்ந்திருக்கும். தண்ணீர் விடாயுள்ள புலி அவ்விடத்தே தண்ணீர் பெறாது யானை உழக்கிய அடிகளில் கால் வைத்து நடந்து செல்லும். இவ் வகையான சேற்றுவழி குற்றந்தீர்ந்த நாவுடைய கூத்தரின் மார்ச்சனை பூசிய மேளத்தின் கண்ணிடத்தே கைபடுதலாலுண்டான வடுக்கள். போலத் தோன்றும். இவ் வகையினதும் மலர் வாடுகின்றதுமாகிய மலையை அவர் கடந்து சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன