திங்கள், 11 ஏப்ரல், 2022

வலை வாசல் வருக : நூலறிமுகம் Introduction to Valai Vasal Varuka

சுருக்கம்

வலை வாசல் வருக எனும் நூல் 2019இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு 2020இல் வந்துள்ளது. இதன் ஆசிரியர்கள் முனைவர் பா.சிதம்பரராஜன், க.சண்முகம் ஆவர். இந்நூல் எஸ்.ஆர்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வெளியீடாக வந்துள்ளது. கணினி சார்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெருக்கிக்கொள்ள இந்நூல் படகு போன்றது. தொல்காப்பியக் கடலை எப்படிக் கடப்பதற்கு நேமிநாதம் படகு போன்றதாக அமைந்ததோ அது போன்றது இந்நூல். அத்தகு இந்நூலினை அறிமுகம் செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Abstract

The first edition of the book 'Valai Vasal Varuka' had been released in 2019. The second edition has been released by Dr. P. Chidambararajan and K. Shanmugam team in 2020. This book has been published by SRM Valliyamai College of Engineering. It is a nursery to kindle the thoughts of the learners who love their Mother Tongue. The person who knows the Tholkappiyam may seems  this is like a Neminatham, which sails as a boat.

திறவுச் சொற்கள் (Keywords)

வலை வாசல் வருக, இயற்கை மொழி ஆய்வு, செயற்கை மொழிச் செயலாக்கம், பெருந்தரவு, இளஞ்சித்தரவு.

************

அறிமுகம்

முனைவர் பா.சிதம்பரராஜன், பேரா.க.சண்முகம் ஆகிய இரு ஆசிரியர்களும் எழுதி இருக்கும் வலைவாசல் வருக எனும் கணித்தமிழ் நூல் வரவேற்கப்பட வேண்டிய தொழில்நுட்பத்தை அறிவதற்கான அடிப்படை நூல். இத்தகு நூலை அவர்கள் கணித்தமிழ் ஆர்வலர்களுக்குப் படைத்தளித்திருப்பது பாராட்டுக்குரியது. இந்நூல் இருபத்தோரு உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அதில் முன்னுரை, குறிப்புகள், புத்தகத்தின் முதல்பதிப்பின் வாசகர் பார்வை, பொருளடக்க அட்டவணை ஆகியன தவிர்த்துத் தரவுப் பகுப்பாய்வு (Data Analytics), தரவுச் செயலாக்கம் (Data Mining), இளஞ்சி(த்)தரவு (அ) பெரிய அளவிலான தரவு (Big data), பொருட்களின் இணையம் (Internet of things), மேகக்கணிமை (Cloud Computing), வலையிணைப்புக் கணிமை (Grid Computing), இயந்திரக்கற்றல் (Machine learning), இயற்கை மொழியாய்வு (Natural language processing), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), மின்னணு வணிகம் (E-Commerce), செல்பேசி வணிகம் (Mobile Commerce), தொடரேடு (Block Chain), படிமச் செயலாக்கம் (Image Processing), மெய்நிகர்த் தோற்றம் (Virtual Reality) மற்றும் புனைமெய்யாக்கம் (Augumented realily), மின்வெளிப் பாதுகாப்பு (Cyber Security),  தன்னியக்க இயந்திரம் (Autonomous machine), இணையாமல் இணையும் இணையவழிக்கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் கணினிப் பொறியியல் வல்லுநர்களும் கணினி அறிவியியலாளர்களும் அதிகம் ஆய்வுசெய்து வரும் பகுதிகளை எளிமையான முறையில் அறிமுகப்படுத்தப்பெற்றுள்ளது. இது காய் கனி ஆவதற்கான சூழலைத் திறந்து விடுகின்றமை போல் உள்ளது. இதுபோன்ற அறிமுகம் இன்மைதான் பூதம் போன்ற பிரமிப்பைத் தமிழ் அறிந்தோரிடத்து நிலவியது. அது இனி மெல்ல மறையும்.

எந்தவொரு படைப்பாக இருந்தாலும் ஆய்வாக இருந்தாலும் தரவுகள்தாம் அடிப்படை. அத்தரவுகளைக் கணினியில் சேகரிப்பது; பகிர்வது; அது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுப்பது குறித்துப் புரியும் வகையிலான எடுத்துக்காட்டுக்களைக் கூறிச் செல்லும் முறை கூடுதல் சிறப்பு. இம்முறை எல்லா அறிமுகக் குறிப்புகளிலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. சான்றாகத் தரவுப் பகுப்பாய்வு குறித்து விளக்கமளிக்கும்பொழுது,

"தரவு என்பது தகவல்களை(ச்) சேகரிப்பது, தகவல்களை(ப்) பகிர்வது என்பது பொருள். அதாவது, என் பெயர் கண்ணன், என் ஊர் சென்னை என்று நான் உங்களிடம் கூறினால், நீங்கள் உடனடியாக இந்தத் தகவலைத் தங்களது மூளையில் சேமித்து வைத்துக்கொள்கிறீர்கள் அல்லது என்னைப் பற்றிய இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். இதை(த்)தான் நம்முடைய தொழில்நுட்பம், நம்முடைய சாதனங்கள் மற்றும் நம்முடைய இயந்திரங்கள் செய்கின்றன" (ப. 17)

என நூலாசிரியர்கள் விளக்கிச் செல்கின்றனர். இதுபோன்று எளிமைப்படுத்திக் கூறும் முறையால் கணினிப் பொறியியல் அறிவை எளிதில் புரிந்துகொள்ள முடிகின்றது. குறிப்பாகத் தேவையான இடங்களில் ஆங்கிலத்திலும் அதற்குரிய சொற்களை அடைப்புக்குறிக்குள் தந்தும் செல்கின்றமை ஆங்கிலச் சொற்களையே கையாண்டவர்களுக்குத் தமிழ்ச் சொற்களையும் அறியும் வண்ணம் அமைந்துள்ளது. நூலின் இறுதிப் பகுதியிலும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்க் கலைச் சொற்களையும் தொகுத்துத் தந்துள்ளனர் இந்நூலாசிரியர்கள்.

ஒவ்வொரு தலைப்புகளுக்கும் தேவையான படங்களைத் தந்துள்ளமையும் அந்தப் படங்கள் வழியாக அந்தந்தத் தலைப்புகளை உள்வாங்கும் முறைகளை எடுத்து விளக்கி இருப்பதும் பாராட்டுக்குரியன. 

இந்நூலாசிரியர்கள் கலைச்சொல் உருவாக்கத்திலும் மெனக்கெட்டுள்ளனர் என்பதையும் அறியலாம். சான்றாக பிக் டேட்டா (Big Data) எனும் கலைச்சொல் உருவாக்கத்தைக் கூறலாம். இச்சொல்லிற்கு இளஞ்சித் தரவு (அ) பெரிய அளவிலான தரவு எனத் தருகின்றனர். இந்தக் கலைச்சொல் உருவாக்கத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பின் நன்றாக இருந்திருக்கும். அதை இனிவரும் பதிப்பில் கவனிப்பார்கள் எனக் கருதுகின்றேன். புதிதாக ஒரு கலைச்சொல் தரும்பொழுது (புழக்கத்தில் அதிகம் இல்லாத) கூடுதல் விளக்கம் அளித்து இருக்கலாம். குறிப்பாக இளஞ்சித்தரவு எனும் பொழுது இளஞ்சி எனும் சொல்லைப் பெருந்தரவிற்கு ஏன் பயன்படுத்தப்படுகின்றது எனும் விளக்கத்தைக் கூறும்பொழுதுதான் அந்தச் சொல்லுக்குள் மயங்கும் நிலையைத் தாண்டி நூலின் கருத்திற்குள் செல்வதற்கான சூழல் இன்னும் கூடுதலாக உருவாகும். அதேமாதிரி பெரிய அளவிலான தரவு என்பதற்குப் பதிலாகப் பெருந்தரவு எனத் தந்திருக்கலாம்.

இளஞ்சி என்ற சொல்லிற்கு அகராதி கொண்டு விளங்கிக் கொள்ளலாம் என்றால் ஈனாக்கத்திரி என இணையக் குறிப்புகள் பொருள் தருகின்றன. எனக் ஈனாக்கத்திரியைத் தேடிப் போனால் அது சித்த மருத்துவத்திற்குப் பயன்படும் ஒரு பயிர் என்பதை அறியமுடிகின்றது. எனவே, நேரடியாகத் தொழில்நுட்பக் கலைச்சொல்லைப் புரிந்துகொள்வதில் சிக்கல் உள்ளது. அதனால் கலைச்சொல் உருவாக்கத்தின்பொழுது குறிப்பாகப் புதிய கலைச்சொல்லாக்கங்களைத் தரும்பொழுது கூடுதல் கவனம் செலுத்தலாம்.

நிறைவாக அனைத்துத் தகவல்களும் கணித்தமிழ் ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணமே உள்ளன. இந்த நூல் அறிமுகக் குறிப்புகள் தொடக்கநிலை வாசகர் எனும் நிலையைத் தாண்டி ஆய்வுநிலை வாசகர்களுக்கும் விருந்தளிக்கிறது என்றே கூறவேண்டும். கணிப் பொறியியல் வல்லுநர்களும் கணினி அறிவியல் வல்லுநர்களும் தமிழ் ஆய்வாளர்களும் இணைந்து பயணிக்கும் பொழுது இது சார்ந்து வெளிவரும் கருத்துக்கள் இன்னும் தெளிவுடனும் சிறப்பாக அமையும் என்பது திண்ணம்.

துணைநின்றவை (Reference)

  • சண்முகம் க. (2018). வலைவாசல் வருக. சென்னை: எஸ்.ஆர்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லூரி.

முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி

தமிழ் உதவிப்பேராசிரியர்

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோயமுத்தூர் - 641 042, sathiyarajt@skacas.ac.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன