வெள்ளி, 29 ஏப்ரல், 2022

இராஜராஜசோழன் சரித்திர நாடகம் : நூல் அறிமுகம் Introduction to Raja Raja Chozhan HISTORICAL DRAMA (பகுதி 1)

சுருக்கம்

அரு.ராமநாதனால் எழுதப்பெற்ற நூல் இராஜராஜசோழன் சரித்திர நாடகம் ஆகும். இன்னும் இருபத்து இரண்டு பதிப்புகளைக் கடந்துள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு செப்டம்பர் 1955 ஆகும். இந்நூல் சோழ மரபினருள் உதித்த பல்வேறு சிறப்புகளை உடைய இராஜராஜ சோழனின் அறிவையும், ஆட்சிச் சிறப்பையும், கூர்த்த மதியினையும், எளிமையையும், முற்போக்குத் திறனையும், சமஉரிமை பேணும் தன்மையையும், பெண்ணுரிமை, கருத்துரிமை என இன்னும் அளவிட முடியாத பல சிறப்புகளையும் வெளிக்காட்டி நிற்கின்றது. இக்கட்டுரை அவற்றையெல்லாம் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Abstract

The book written by Aru Ramanathan is a historical drama by Rajaraja Chola. Twenty-two more editions have passed. The first edition of the book was published in September 1955. The book exemplifies Rajaraja Chola's knowledge, rule, sharpness, simplicity, progressiveness, egalitarianism, femininity and ideology, as well as many other immeasurable features of the Chola dynasty. This article aims to introduce them all.

திறவுச் சொற்கள் (Keywords)

இராஜராஜசோழன், சரித்திர நாடகம், நூல் அறிமுகம், Introduction to RajaRaja Chozhan, HISTORICAL DRAMA.

************

அறிமுகம்

“தமிழர் வீரம், தமிழ்க் காதல், தமிழ்ப்பண்பு, தமிழர் சமயம் நெறியாவும் இந்த நாடகத்திலே நடமிடுகின்றன” என ரா.பி.சேதுப்பிள்ளையும், ”என்னுள்ளத்தில் பொங்கியெழும் உணர்ச்சியை வார்த்தைகளால் சொல்ல இயலா… ’இராஜராஜ சோழன்’ தமிழ் நாடக மேடையை வானளாவ உயர்ந்துவிட்டது” என தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும் மதிப்பிட்டுக் கூறியிருப்பது ’இராஜராஜ சோழன் சரித்திர நாடகம்’ எனும் நூலின் சிறப்பை இன்னும் வெளிக்காட்டுகின்றது. இவ்வரலாற்று நாடக நூல் மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்நூலை அறிமுகப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

நூலமைப்பு

இந்நூல் முகப்பு பக்கம், நூற்குறிப்புப் பக்கம், பத்திரிகைகளின் மதிப்புரைகள், முகவுரை, முன்னுரை, நாடகப் பாத்திரங்கள், 39 காட்சிகள், பாடல்கள் எனும் கட்டமைப்பு உடையதாக அமைந்துள்ளது. இந்நூல் இயல், இசை, நாடகம் எனக் கூறப்பெறும் முக்கட்டமைப்பையும் கொண்டுள்ளதாய் விளங்குகின்றது. இந்த இருபத்தி இரண்டாம் பதிப்பில் 1 இலிருந்து 39 வரை உள்ள காட்சிகளைத் தனிப்படுத்திக் காட்ட அதன்மேல் கட்டம் கட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் நிகழும் சூழல், இடம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாகக் காட்சி நிகழும் இடம் பிற எழுத்துருவைக் காட்டிலும் கொஞ்சம் எழுத்துரு அளவைக் கூட்டித் தடித்த தன்மையில் காட்டப்பட்டுள்ளது.

இந்த நாடகத்தை இயக்கும்பொழுது எந்த எந்தப் பாட்டு எவ்வெவ் இடங்களில் வரவேண்டுமென்று பாடல்கள் எனும் தலைப்பில் பின்னிணைப்பாகத் தரப்பெற்றுள்ளது. இந்தப் பாடல்களைப் புத்தனேரி ரா.சுப்பிரமணியன் எழுதியுள்ளார். அதில் தொடக்கப்பட்டு காட்சி - 1 தமிழ்த்தாய் வணக்கம், காட்சி - 2 நம்பியாண்டார் நம்பிகள் (திருத்தொண்டர் திரு அந்தாதி), காட்சி - 3 விமலாதித்தன் - குந்தவி, காட்சி - 12 பின்னணிப் பாடல், கருவூர்த்தேவர் திருவிசைப்பா, காட்சி - 16 குந்தவி - நடனப்பாடல் (திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம்), காட்சி - 29 முத்துப்பல் கவிராயர், காட்சி - 30 குந்தவ்வையார், திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் - திருக்குறுந்தொகை, காட்சி - 33 திருமண வாழ்த்தொலி, காட்சி - 39 அரசவை வாழ்த்துப்பாடல் என அமைந்துள்ளது.

அதை விடுத்து காட்சி - 1, 2, 10, 30, 31 ஆகிய காட்சிகளிலும் சில பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு காட்சி முடிகின்ற பக்கத்தில் வெற்றிடம் இருக்கும்பொழுது அதனை வெறுமையாகக் காட்டாமல் தேவையான காட்சியோடு தொடர்புடைய படங்களும் தரப்பெற்றுள்ளன.

அதேபோல் முகப்புப் பக்கத்தில் இராஜராஜசோழன் தலைப்பில் அவனின் அடையாளமாக விளங்கக்கூடிய தஞ்சை பெரிய கோவிலின் படம் அத்தலைப்பின் பின்புற ஓவியமாக அமைந்துள்ளது.

நாடக மாந்தர்கள்

இந்த நாடக நூலில் இடம்பெறும் கதை மாந்தர்கள் பின்வருமாறு,

இராஜராஜன் : சோழ மன்னன்

இராஜேந்திரன் : இராஜராஜன் மகன்

விமலாதித்தன் : வேங்கி நாட்டு வேந்தன்

சக்திவர்மர் : விமலாதித்தனுக்குத் தமையன், இராஜராஜனிடமிருந்து வேங்கி முடி பெற்றவன்.

சத்தியாசிரயன் : இரட்டபாடி மன்னன்; சோழர் பேரரசை விழுங்க விரும்புபவன்.

மதுராந்தக மூவேந்த வேளார் : இராஜராஜன் உடன் கூட்டத்து அதிகாரிகளில் முக்கியமானவர், அமைச்சர்களில் ஒருவர்.

பாலதேவர் : இராஜராஜனின் நம்பிக்கையைப் பெற்றவர். நடமாடும் ராஜதந்திரி.

நம்பியாண்டார் நம்பி : திருமுறை வகுத்த சிவனடியார்

நூலாசிரியர் : இராஜராஜேஸ்வர நாடகம் எழுதிய ஆசிரியர்.

முத்துப்பல் கவிராயர் : நகைச்சுவை நாவலர்கள்.

மேதினிராயர் : நகைச்சுவை (விகடகவிகள்).

குந்தவ்வையார் : இராஜராஜனின் தமக்கையார்.

குந்தவி : இராஜராஜனின் மகள்.

வீரமாதேவி : அமைச்சர் மதுராந்தக மூவேந்தக வேளாரின் தங்கை.

பூங்கோதை : பணிப்பெண்.

மற்றும் திருமந்திர ஓலைகள், உடன் கூட்டத்து அதிகாரிகள், நாயகம், வீரர் முதலானோர்.

நாடகங்கள் நிகழுமிடங்கள் : பெரும்பகுதி தஞ்சையிலும் சிறுபகுதி வேங்கியிலும்

கதை துவங்கும் காலம் : கி.பி.999

(இப்பட்டியல் நாடக நூலின் பக்கம் 19இல் உள்ளது. அதில் இருந்து எடுத்து இங்கு தரப்படுகின்றது.)

ஆசானும் நாடகக் கலைஞரும்: நூற்குறிப்பு

இந்நாடக நூலின் ஆசிரியராகிய அரு.ராமநாதன், தனது முன்னுரையில் நூல் உருவாகிய வரலாற்றையும், அந்நாடக நூல் நாடகமாக அரங்கேற்றிய வரலாற்றையும் கூறியுள்ளார். அக்குறிப்புகள் ஒரு நூலாசிரியரின் கடும்பணியை வெளிக்காட்டி நிற்கின்றன. அதில் ஒரு குறிப்புக் கவனிக்கத்தக்கது. அக்குறிப்பு வருமாறு: 

இதற்கிடையில் இராஜராஜனின் சரித்திரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பேனா மன்னரான ”கல்கி” அவர்கள் பொன்னியின் செல்வனைத் தொடர்கதையாக எழுதப் போவதாக அறிந்தபோது என்னுடைய நாடக இராஜராஜனின் பழைய வடிவத்தை மறந்து விட நேரிடுமோ என்று நினைத்தேன். ஆனால் இராஜராஜன் பொன்னியின் செல்வனாக முடிசூடுவதற்கு முன் இளமைப் பிராயத்தில் முடியைப் புறக்கணித்துத் தியாகத்தின் சிகரமாக விளங்கியதோடு பொன்னியின் செல்வன் கதை முடிந்து விடுவதை அறிந்தேன். என் நாடகக் கதையோ இராஜராஜன் மும்முடிச் சோழன் ஆனபிறகு விருத்தாப்பிய தசையில் பிறந்து அவன் காதற்போர் நடத்திய கதையையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் “கல்கி” அவர்களால் என் பொறுப்பு அதிகரித்து விட்டது. தமிழ் நாட்டுச் சரித்திரக் கதைகளைத் தமிழுலகம் நன்கு வரவேற்கும்படியான சூழ்நிலையை வளப்படுத்திய பெருமை “கல்கி” அவர்களையே சேரும். அந்த மேதை அரிய ஆராய்ச்சியின் பயனாகச் சரித்திரத்திலிருந்து உருவாக்கிய இளமைப் பாத்திரங்கள் என்னுடைய நாடகத்தில் முதுமைப் பிராயமடைந்தாலும், குணச் சிறப்புகளில் குன்றிவிடக் கூடாதே என்கின்ற பொறுப்பும் கவலையும் எனக்கு ஏற்பட்டுவிட்டன. இதற்கிடையில் வானொலி திரு. மீ.பா.சோமசுந்தரம் (கல்கி ஆசிரியர்) அவர்களின் அன்புக் கட்டளையை உத்தேசித்து என் இராஜராஜனை ஒருமணி நேர ஒலிவடிவாக்கி "கல்கி" எங்கெங்கிருந்தோ ரசிகர்களின் வாழ்த்தையும் வளர்ச்சிக் குறிப்புகளையும் பெற்றேன். இராஜராஜனின் அந்த ஒலி வடிவம் வானொலியோடு நில்லாமல் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் தியாகராய நகர் சாரதா வித்தியாலம் மாணவிகளால் பள்ளி மேடையில் காட்சியளித்து அவர்களின் வாழ்த்தையும் பெற்றபோது எனக்கு மகத்தான உற்சாகம் பிறந்து விட்டது. பொற்காலத்திற்கு அடிகோலிய மாபெரும் மன்னனை மாபெரும் ராஜதந்திரியாக்கித் தமிழ்நாட்டின் நாடகக்கலை மன்னர்களான டி.கே.எஸ். சகோதரர்களைக் கொண்டு எப்படியும் மேடையேற்றி விட வேண்டும் என்று எனக்கு மகத்தான உறுதியும் ஏற்பட்டு விட்டது. வெகு காலத்திற்கு முன் என் இதயத்திலும் கலைஞர் திரு. டி.கே. சண்முகம் அவர்களின் இதயத்திலும் தோன்றிய மகத்தான “கனவு” மேடையில் நனவாகும் காலமும் வந்து விட்டது.


இதுதான் இராஜராஜ சோழன் என் பேனா முனையில் பிறந்து வளர்ந்து மேடையேறிய சரித்திரமாகும்" (பக்.11-12).

“இந்த இராஜராஜசோழன் நாடகத்தை எழுத எனக்கு ஒருவார காலந்தான் பிடித்தது என்றால், அதற்குத் தேவையான சரித்திர இலக்கியக் குறிப்புகள் சேகரிக்க ஆறுமாத காலம் பிடித்தது. ஆனால் இந்நாடகத்தில் நான் கையாண்டிருக்கும் சரித்திர முடிவுகள் அனைத்தும் சரியானவை என்று நான் வலியுறுத்த முடியாது. சரித்திரப் புதையல்களில் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. சரித்திர அறிஞர்கள் இந்நாடகத்தில் சரித்திரத்தையொட்டிச் சில குறைகள் காணலாம்; சில சரித்திர நிகழ்ச்சிகள் முன்பின்னாக மாறி இருப்பதாகவும் கருதலாம். ஆனால் அவை யாவும், மூன்று மணி நேர மேடை நாடகத்திற்குள் இராஜராஜனின் சரித்திரச் சிறப்புகள் அனைத்தையும் சுவையானதொரு காதல் கதையோடு பிணைத்துவிடவேண்டுமென்கிற வேட்கையின் விளைவேயாகும். அறிஞர்கள் பொறுப்பார்களாக!

இந்நாடகத்தில் அறிந்தோ அறியாமலோ சில கொள்கைகளும் மதச்சார்புகளும் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், அவையெல்லாம் என் சொந்தக் கொள்கைகளோ சொந்த மத உணர்ச்சியோ அல்ல; கூடியவரை சரித்திரத்திற்குத் துரோகம் செய்யாமல் இராஜராஜசோழனை என் சொந்தப் பிரதிபிம்பமாக்காமல், எந்தவிதக் கட்சிச் சார்புமில்லாமல் எழுத முயன்றேன். அத்தகைய வரலாற்று ஓவியம் தமிழகத்தின் வளத்திற்குப் பயன்பட வேண்டுமெனவும் விரும்பினேன். அவ்வளவுதான்!

நவீன அரசியல் சமுதாயக் கருத்துகள் பல இந்த நாடகத்தில் புகுத்தப்பட்டிருப்பதாகச் சிலர் சொல்லலாம். ஆனால் அவை இடைச் செருகல்கள் அல்ல. இப்போது நம் தலைவர்கள் பல துறைகளிலும் ஆராய முயலும் எதிர்காலத் திட்டங்கள்கூட இராஜராஜ சோழன் காலத்தில் வெகு சாதாரணமாகப் பரிசோதிக்கப் பட்டிருந்தன. உதாரணமாக நம் காந்தியடிகள் கனவுகண்ட “கிராம சுயஆட்சி” இராஜராஜசோழன் காலத்து கிராமங்களில் அந்தக் காலத்திற்கேற்ப நடைமுறையில் கையாளப்பட்டு வந்திருக்கிறது. அது போன்ற கருத்துக்களைப் பளிச்சென்று எல்லோருக்கும் புரிந்து கொள்ளும்படியாக “நவீன சொற்பிரயோகங்களில்" எடுத்துக் காட்டியிருக்கிறேன். அவ்வளவுதான்“ (பக்.15-16).

இந்த இரண்டு குறிப்புகளும் நூலாசிரியரின் உழைப்பையும் அணுகுமுறையையும் கற்றலையும் கற்பித்தலையும் கொடுக்கின்றன.

டி.கே.சி எனும் நாடகக் கலைஞரின் குறிப்புகள் முகவுரை எனும் தலைப்பில் அமைந்துள்ளன. இங்கு பல குறிப்புகளைப் பார்க்கலாம். இந்த நாடக நூலோடும் நூலாசிரியர் திறனோடும் நெருங்கி வரக்கூடிய குறிப்பை மட்டும் இங்கு நோக்கிச் செல்வோம்.

“இந்த நாடகத்தை அரங்கேற்றுவதில் எங்களுக்கு எவ்வளவு அச்சமும் பொறுப்புணர்ச்சியும் இருந்ததோ அதே உணர்ச்சியை ஆசிரியரிடமும் கண்டோம். நாடகத்தின் சிறப்புக்காக நாங்கள் அவ்வப்போது எங்கள் கருத்துக்களை வெளியிட்டபோதெல்லாம் சிறிதும் அயர்வுறாது நாடகத்தை உருவாக்கித் தந்தது அவரது பெருமைக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக விளங்கியது. ஆசிரியரைத் திருநெல்வேலி யில் சபையில் அறிமுகப்படுத்தியபோது இவர் "ஓர் அகஸ்தியர்" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டோம். அது அவருடைய உருவத்தை மட்டும் குறிப்பிட்டதல்ல. அறிவின் திறத்தையும் தமிழ்ப் புலமையையும் இணைத்துக் கூறியதாகும். திரு. இராமநாதன் அவர்கள் தமிழ்ப் பண்டிதரல்லர். ஆனால் சிறந்த தமிழறிஞர். ஆராய்ச்சித் திறன் படைத்தவர். நாடகத்திலே வரும் நிகழ்ச்சிகளுக்குரிய வரலாற்றுக் குறிப்புகளைப் பற்றி நாங்கள் அவ்வப்போது விவாதிப்பதுண்டு. அப்போதெல்லாம் தமது புத்தகக் குவியல்களிலிருந்து பல புத்தகங்களைப் புரட்டி எடுத்து அவற்றிற்குரிய குறிப்புக்களை எடுத்துக் காட்டி உடனுக்குடன் விளக்கியதைக் கண்டபோது, எங்கோ பல்கலைக் கழகத்திலே சரித்திர ஆராய்ச்சிப் பேராசிரியராக வீற்றிருக்க வேண்டிய இந்தச் சிறிய உருவம் இப்படிப் பத்திரிகையுலகிலே உழல்கிறது என்று உண்மையிலேயே நாங்கள் பெருவியப்படைந்தோம்“ (ப.7). (தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன