சனி, 7 மே, 2022

இராஜராஜசோழன் சரித்திர நாடகம் : நூல் அறிமுகம் Introduction to Raja Raja Chozhan HISTORICAL DRAMA (பகுதி 2)

 நூலாசிரியர் குறிப்பு

விக்கிப் பொதுவகம்
அரு. ராமநாதன், சூலை 7, 1924இல் சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துள்ளார். படிக்கும் காலங்களிலேயே ஆளுமையாக உருவானவர் என்பதை அவர் எழுதிய சம்சார சாகரம் எனும் படைப்பே சான்றாக அமைகின்றது. இப்படைப்பு அவர்தம் பதினெட்டாம் வயதில் எழுதப்பட்டதாகும். அதன்பின்பு அவர் தன்னை எழுத்தாளர், தொகுப்பாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், திரைவசன ஆசிரியர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இவர் ரதிப்ரியா, கு.நா.ராமையா ஆகிய பெயர்களிலும் எழுதி வந்துள்ளார். இவர் 1945இல் எழுதிய ’ராஜராஜ சோழன்’ நாடகம் ஆயிரம் முறை மேடையேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகையை ஆளுமையின் சில படைப்புகளாக சிந்தனையாளர் பெஞ்சமின், பிராங்கிளின், அறுபது மூவர் கதைகள், குண்டு மல்லிகை, போதிசத்துவர் கதைகள், மதனகாமராஜன் கதைகள், விநாயகர் புராணம், காலத்தால் அழியாத காதல், அசோகன் காதலி, வீரபாண்டியன் மனைவி, அவ்வையார் பொன்மொழிகள், விக்ரமாதித்தன் கதைகள், கிளியோபாட்ரா, சுந்தரரின் பக்தியும் காதலும், வெற்றிவேல் வீரத்தேவன், வேதாளம் சொன்ன கதைகள், பழையனூர் நீலி, மகாகவி பாரதியார் பொன்மொழிகள் ஆகியன அமைந்துள்ளன (விக்கிப்பீடியா, பார்வை நாள் - 13.4.22, https://ta.wikipedia.org/s/75ua). 

இத்தகு ஆளுமையின் படைப்பான ராஜராஜசோழன் சரித்திர நாடகம் நூலினை

  • இராசராசனின் சிறப்பு

  • இராசேந்திரன்

  • விமலாதித்தன்

  • குந்தவி

  • குந்தவ்வை

  • பாலதேவ பட்டறையர்

  • புலவர்கள்

எனும் வகைகளில் விளங்கிக்கொள்ள முயலலாம்

இராசராசனின் சிறப்பு

இராசராசன் தமிழக மன்னர்களில் மிகச் சிறந்த ஆளுமை மிக்கவனாக இருந்திருக்கிறான் அவன் ஆட்சி புரிந்த 30 ஆண்டுகளில் ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வேறு கொள்கைகள் உருவாயின (விக்கிப்பீடியா, 13.4.2022, பார்வை நாள்).

இவர் கி.பி. 985 முதல் 1014 வரை ஆட்சி செய்திருக்கிறார். இம்மன்னன் கி.பி. 947இல் சுந்தரச் சோழனுக்கும் வானவன் மகாதேவியாருக்கும் மகனாகப் பிறந்துள்ளார். இவர்தம் இயற்பெயர் அருண்மொழிவர்மன் ஆகும். அவனின் சிறப்புகளைக் கீழ்வருமாறு குறிப்பிடலாம்.

  • திட்டமிடலில் தலைசிறந்தவன்.

  • திட்டமிட்டபடி செயல்படுத்தும் திறன் வாய்ந்தவன்.

  • தன் மகன் இராசேந்திரனைப் பெரு  வீரனாக்கியவன்.

  • கடற்படை செலுத்திக் கடாரம் கொண்டவன்.

  • ஓவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளை வளர்த்தவன்.

  • தேவாரத் திருமுறைகள் நாடெங்கும் பரவக் காரணமானவன்.

  • பெரும்படை திரட்டியவன்.

  • அரசியல் அமைப்பைத் திடமாக உருவாக்கியவன்.

  • இராட்டிரகூடர் படையெடுப்பால் துன்புற்ற சோழ நாட்டைக் கிருஷ்ணையாறு வரையும், மேற்கே அரபிக்கடல் வரையும், தெற்கே இலங்கை வரையும் பரப்பியவன்.

  • போர்த்திறன் மிக்கவன்.

  • அரசியலில் பண்பட்ட அறிவுடையவன்.

  • சிறந்த போர்த்தொழில் வல்லவன்.

  • சிறந்த சமயப்பற்றுக் கொண்டவன்.

  • சோழ வரலாற்றை அறிய இடம் தந்தவன் (விக்கிமூலம், பார்வை நாள்-13.4.2022).

இவ்வாறு இணையத் தரவுகளும் நூல் தரவுகளும் இராசராச சோழனின் சிறப்புகளைப் பட்டியலிட்டுச் சென்றாலும், அத்தகைய ஆளுமையுடன் உறவாடிக் உறவாடக் கூடிய சூழலை ’இராஜராஜ சோழன் சரித்திர நாடகம்’ நூல் உருவாக்கித் தந்துள்ளது.

இந்த நூலில் இராசராசனின் அறிவுக் கூர்மையும் இராச தந்திரமும் வயதிற்கு ஏற்ப முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து இருப்பதையும் காணமுடிகின்றன. சான்றாகத் தன்மகன் இராசேந்திரச் சோழனைப் பரிசோதித்தக் காட்சி 39ஆவது காட்சியில் உள்ளது. அந்த உரையாடலைச் சுட்டலாம்.

”இராஜந்திரன்: (சிரிப்புடன்) பெற்ற மகனைப் பரிசோதிக்க வேண்டிய காரணம்…?

இராஜ: என் மாபெரும் சோழப் பேரரசிற்கு வருங்கால மன்னனாய் விளங்கக் கூடியவன் நட்பு, காதல், தங்கை, பாசம் என்ற உணர்ச்சிகளின் முன்னும் தேச நலனைக் கைவிடாதவனாயிருக்க வேண்டும் எனப் பாடம் கற்பித்தேன்” (இராஜ ராஜ சோழன் சரித்திர நாடகம், ப.186).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன