ஆக்கியோன் : நேயக்கோ (முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி)
கதைமாந்தர்கள்
இராசராசன் - சோழ மன்னன்
இராசேந்திரன் - இராசராசன் மகன்
விமலாதித்தன் - வேங்கி மன்னன்
குந்தவி - இராசராசன் மகள்
வீரமாதேவி - மதுராந்தகர் தங்கை
முத்துப்பல் கவிராயர் - நகைச்சுவைப் புலவர்
மேதினிராயர் - நகைச்சுவைப் புலவர்
பாலதேவர் - நடமாடும் இராசதந்திரி
பூங்கோதை - பணிப்பெண்
நாடக ஆசான் - நாடக எழுதியோன்
மதுராந்தகர் - அமைச்சர்
காட்சி : 1
இராசராசன் : வாங்க.. வாங்க… நாடக ஆசானே… நாடகம் தயாரா?
நாடக ஆசான் : ஆம்… மன்னாதி மன்னா!
இராசராசன் : வாழ்த்துக்கள்…. எப்போ அரங்கேற்றம்…
நாடக ஆசான் : இதோ இப்போது மன்னா…
இராசராசன் : சிறப்பு… தொடங்குங்கள்… ஆமாம் நாடகத்தின் பெயரென்ன?
நாடக ஆசான் : அகமே புறம்… மன்னாதி மன்னா…
இராசராசன் : அப்படியா…. ஊகூம்… நானும் கண்டு இரசிக்கிறேன்…
நாடக ஆசான் : நன்றி மன்னா… இது என் பெரும்பாக்கியம்…
காட்சி : 2
மதுராந்தகர் : மன்னர் மன்னா… வணக்கம். இத்தனை ஆண்டுகளா உள்நாட்டு ஆட்சிமுறையைச் சீர் செய்தீர்கள். தங்களின் எதிர்காலத்திட்டம் அறிய ஆவல் மன்னர் மன்னா…
இராசராசன் : (சிரிப்புடன்) கடல் கடந்து… இலங்கை, கடாரம், பர்மா என நம் அரசாட்சியை விரிவுபடுத்துவதுதாக எண்ணம்.
மதுராந்தகர் : இளவரசர் இராசேந்திரன் இருக்கும்போது அந்த எண்ணம் வெகு விரைவிலே வரும் மன்னாதி மன்னா..
இராசராசன் : ஊகூம்… (பார்வை கொலுசு ஒலி கேட்கும் திசை நோக்கி)
குந்தவி : அப்பா! அப்பா!
இராசராசன் : இளவரசி குந்தவியே வருக… வருக….
குந்தவி : அப்ப்பா….
இராசராசன் : இல்லை… இல்லை… என் அருமை மகளே வருக…
குந்தவி : அப்பா… ஏன் அப்படி என்னைப் பார்க்கிறீர்கள்?
இராசராசன் : இல்லை…. போர்க்களத்தில் நிற்க வேண்டியவள்…. அந்தப்புரத்தில் இருக்கிறாயே அதையும் நினைத்துத்தான்….
குந்தவி : அதையும்னா…. அப்பா….
இராசராசன் : உன் அண்ணன் வரவினை எதிர்பார்ப்பதையும்தான்…
குந்தவி : ஏனப்பா…. சொக்கி வைத்துப் பேசுகிறீர்கள்.
இராசராசன் : இல்லை… அண்ணன் இராசேந்திரனுடன் வரும் விமலாதித்தனுக்காகத்தானே வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறாய்…
குந்தவி : விமலாதித்தனா? அவன் யார்? (வெட்கத்துடன்)
காட்சி : 3
இராசராசன் : வருக… வருக… என் வீரத்திருமகனே வருக… வீராதி வீரனே வருக…. வெற்றி வீரனே வருக…
இராசேந்திரன் : நம் சோழ நாட்டின் படைச்செருக்கைப் பார்த்தும் வேங்கி இளைய பரம்பரை பறந்தோடியது…. தந்தையே…
குந்தவி : அண்ணா… தங்கைக்கு வெற்றியின் அடையாளமாக என்ன பரிசுகொண்டு வந்தாயண்ணா…
இராசேந்திரசேந்திரன் : உன்னைவிட மேலான பரிசுதான்.
குந்தவி : என்ன… எனக்குப் புது நீட்டிய ஆசிரியரா?
இராசேந்திரன் : உனக்கு வரும் ஆசிரியர்கள் உன் வாயாடித் தனத்தைப் பார்த்துப் பயந்து ஓடிவிடுகின்றார்களே!
வீரமாதேவி : இந்த நல்ல நாளில் சக்கரவர்த்திகளிடம் ஆசி பெற்றுவிட்டுப் போகவும், வெற்றி பெற்று வரும் இளவரசருக்கு இந்த வாளைப் பாதக்காணிக்கையாக்கவும் வந்தேன்…
குந்தவி : திருடி! என் அண்ணன் உள்ளத்தைத் திருட வந்தவள்…
வீரமாதேவி : உச்…. சக்கரவர்த்திகள் காதில் விழப்போகின்றது…
இராசேந்திரன் : (புன்முறுவல் பூக்கிறான்)
காட்சி : 4
(குந்தவியும் விமலாதித்தனும் கண்ணோடு கண் பேச)
மேதினிராயர் : கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
முத்துப்பல் கவிராயர்: கண்ணோடு காண்பதெல்லாம்ம்ம்… தலைவா…. வேங்கிநாட்டு வேங்கையே வணக்கம்.
விமலாதித்தன் : வணக்கம் புலவர்களே
இராசராசன் : என்ன மகளே… வேங்கியின் வேங்கை விமலாதித்தனை… என் அருமை நண்பரின் மகனைப் பார்த்ததும் மறைந்துகொள்கின்றாய்…
மேதினிராயர் : நாணத்தோடு நோக்கிப் புதைத்துக் கொள்வது நங்கைக்கு அழகு!
இராசராசன் : வெறித்துப் பார்ப்பது வேங்கைக்கு அழகு!
காட்சி : 5
முத்துப்பல்லர் : ஆ… ஆ… வெற்றி! வெற்றி! வெற்றி!
மேதினிராயர் : என்னய்யா முத்துப்பல்லரே… மகிழ்ச்சியாக உள்ளீர்.
முத்துப்பல்லர் : விமலாதித்தன் - குந்தவி திருமணத்தன்று ஒரு வாழ்த்துப்பா… பாடப்போகின்றேன்… அதுதான்…
மேதினிராயர் : ஆனால் திருமணப் பேச்சையே காணோமே பல்லரே
முத்துப்பல்லர் : ஆமாம்… ஆமாம்…
மேதினிராயர் : உனக்குக் காதலிக்கவே தெரியாது… அப்புறம் எப்படிக் காதல் வாழ்த்துப்பா பாடமுடியும்?
முத்துப்பல்லர் : ஆம்… அகம் அறியாதவனுக்குப் புறம் எப்படி வரும்…..?
மேதினிராயர் : என்ன முடிவு செய்யப் போகின்றீர் முத்தரே!
முத்துப்பல்லர் : காதலிப்பது என்று முடிவு…
மேதினிராயர் : நல்ல முடிவு… நாம் இருவரும் சேர்ந்தே காதலிப்போம்…
முத்துப்பல்லர் : நாமிருவருமா..?.
மேதினிராயர் : அப்படியில்லைய்யா… நாமிருவரும் ஒரு நங்கையைக் காதலிப்போம் என்றேன்.
முத்துப்பல்லர் : ஒருத்தியையா…
மேதினிராயர் : என்னய்யா எதற்கு எடுத்தாலும் குதர்க்கமாவே பேசுகின்றீர்… நீ ஒருத்தியை… நான் ஒருத்தியை…
முத்துப்பல்லர் : சரி வா… ஒருத் தீயைக் காதலிப்போம்…
காட்சி : 6
(இராசராசனின் சிறப்பைக் கூறலாம்… சான்றாக.. ஒரு பெண்மணி தன் பாலைக் கறந்து கோயில் வழிப்பாட்டிற்கு வழங்கியமையால், கல்வெட்டில் இடம்பெற வைத்துள்ளார். இதனை உரையாடலாக அமைக்வும்.)
இராசராசன் :
பெண்மணி :
மேதினிராயர் :
காட்சி : 7
மேதினிராயர் : என்னய்யா ஒனக்குக் காதலி கிடைத்தாளா?
முத்துப்பல்லர் : ஆகா! காத்திருந்தாலும் இப்படியொரு மங்கையல்லவா
காதலிக்க வேண்டும் (பூங்கோதை வருகையைப் பார்த்து)
மேதினிராயர் : என்னய்யா பகற் கனவா?
முத்துப்பல்லர் : வானுலகத்திலிருந்து வந்து குதித்த மாமயிலோ?
மேதினிராயர் : தோகை இல்லை அய்யா…
முத்துப்பல்லர் : மோகினிப் பேயோ?
மேதினிராயர் : கால்கள் உள்ளதே அய்யா…
முத்துப்பல்லர் : என் கோட்டான் புராணத்துத் தலைவி கோகிலமோ?
மேதினிராயர் : நீர் இப்படியே சொல்லிலே காதலிக்க வேண்டியதுதான்.
முத்துப்பல்லர் : பெண்ணே! நில்லம்மா…
பூங்கோதை : என்னய்யா மிரட்டுறீங்க?
முத்துப்பல்லர் : இல்லை பெண்ணே! நான் உன்னைக் காதலிக்கிறேன்…
பூங்கோதை : என்னதுதுது…
முத்துப்பல்லர் : வான் வழி வந்த வடிவே! என் செல்லமே! என் பூங்குயிலே!
பூங்கோதை : என்னய்யா உளறுகிறீர்…
முத்துப்பல்லர் : நான் மோனைப் புலவர் முத்துப்பல் கவிராயர்.
பூங்கோதை : என்னய்யா உளறுகிறீர்… இனி இப்படிக் கூப்பிட்டு வம்பிழுத்தீர்… முத்துப்பல் சொத்தைப்பல்லாகிவிடும். பார்த்து நடந்துக்க… ஆமாம்ம்…
மேதினிராயர் : என்னய்யா காதலித்தீரா?
முத்துப்பல்லர் : எங்கய்யா காதலிக்க விட்டாள்…
மேதினிராயர் : நீர் காதலிக்காமல் கவிதை சொன்னா எப்படி அய்யா… காதலிப்பாள்… நான் காதலிக்கிறேன் பாருமய்யா…
முத்துப்பல்லர் : என்னது நீயும் அப்பெண்ணைக் காதலிக்கிறீரா?
மேதினிராயர் : நீ இப்படியே கவிதை பாடிக் காதலியும்… நான் அவள் கண்ணோடு பேசி.. கருத்தோடு உறவாடி… பின்பு காதலிக்கிறேன்…
முத்துப்பல்லர் : அதுபோகட்டும் பௌர்ணமியன்று வேறு ஒருவன் இவள் பின்னால் திரிகிறான். அவன் யாரென்று பார்த்து முடிப்போமய்யா…
காட்சி : 8
விடை அதிகாரி : பாவலர்களும் நாவலர்களும் மன்னன் புகழைப் பாடி பரிசில் பெற வரலாம்.
விமலாதித்தன் :
தன்னிகரில்லாத் தமிழ் வேந்தே
தலைவணங்கும் சோழ மரபே
தரணியில் தனியோர் தடம்பதித்தோனே
பெண்ணுரிமை பேணும் நற்சான்றோனே
கருத்துரிமை போற்றும் கருத்தாளனே
வரலாற்றை உணர்ந்த வல்லோனே
தஞ்சைக்குப் பெருங்கோயில் ஈந்தோனே
தமிழுக்குப் பெருமை சாற்றியோனே
தகைசால் தமிழ் வேந்தே
தன்னாளில் தண்ணளி நல்குவோனே
நீவீர் நீடுழி வாழ்கவே….
எனக் கவிதையைப் பாடிமுடிக்க… (பரிசிற்காகக் காத்திருக்க)
இராசராசன் : வேங்கி மன்னரா? இப்படிப் பாடி பரிசில் பெற வந்தது?
விமலாதித்தன் : ஆம். வேந்தே! பாராளும் வேந்தர்களைப் பாடி வாழவைப்பது கவிஞன்தானே!
இராசராசன் : என்ன பரிசில் வேண்டும். கேள்…
விமலாதித்தன் : தங்களது மகள் எனக்குப் பரிசாக வேண்டும்.
இராசராசன் : என்னது… இது விநோதமாக இருக்கிறதே!
விமலாதித்தன் : எது விநோதம் வேந்தே! சோழ வம்சத்தில் வந்த கரிகாலன், பாரி, செங்கணான், அதிகன், அண்டிரையன், ஆதன், காரி, குமணன்… எனத் தமிழ் மன்னர்கள் அளித்த பரிசைக் காட்டிலும் விநோதப் பரிசை நான் கேட்க வில்லையே மன்னா…
இராசராசன் : ஊகூம்… சரி… சரி…
மேதினிராயர் : மன்னர் பெருமானே, சதி! மாபெரும் சதி!
முத்துப்பல்லர் : பயங்கரமான சதி ஓலைகள் இவனிடம் உள்ளன மன்னா?
மதுராந்தகர் : இந்தப் பாவியைக் கண்டுபிடிக்காவிட்டால் அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருப்போம் மன்னா…
இராசேந்திரன் : வீரத்திற்காகப் போராடுபவர்கள்கூட இப்படிப்பட்ட நயவஞ்சகர்களால் நசுங்கிப் போவதும் உண்டு சக்கரவர்த்திகளே!
இராசராசன் : (சிரிப்புடன்) தெரியும்! அனைத்தையும் அறிவேன்!
இவர் இரட்டப்பாடியில் பிறந்தவர். நம் பகைவரான சத்தியாசிரயனுக்கு ஒற்றர்.
என்ன பாலதேவரே என்ன செய்வது?
சிலகாலம் உமது திருவிளையாடலைக் காண ஆசைப்பட்டேன்.
அதற்குள் அகப்பட்டுக் கொண்டீரே!
அனைவரும் : (திடுக்கிட்டு) ஆ......
இராசேந்திரன் : நம்பிக்கைத் துரோகி…. (வாளை உருவுகிறான்)
இராசராசன் : அவர் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தாரே தவிர இராசேந்திரா… இரட்டப்பாடிக்குத் துரோகம் செய்யவில்லையே….
அவரை மன்னித்துவிடுவோம்…
இந்த நல்ல நாளில் அவருக்கு அந்தச் சதி ஓலைகளையும் நம் பகைவன் கொடுத்தனுப்பிய குத்துவாளையும் பரிசாக அளிப்போம்…
-முடிவுற்றது -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன