அணிந்துரை
இந்திய நாட்டில் ஆயிரத்து அறுநூற்றுக்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன என மொழியியல் அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். இவற்றுள் சில இலக்கியம் கண்டவை; பல இலக்கியம் காணாத, திருந்தாத மொழிகள்: ஒருசில, மொழிகள் என கருதப்படத்தக்கவை; பல கிளை மொழிகளாகக் கரந்து வாழ்பவை; ஒருசில மொழிகள் இலக்கியப் பாரம்பரியத்தையும் இலக்கணச் செல்வத்தையும் கொண்டவை; ஆனால் பல மொழிகள் இலக்கியத்தையோ அல்லது இலக்கணத்தையோ காணாதவை; சில வியக்கத்தக்க நாகரிகத்தையும் அரிய கலைகளையும் கொண்ட மக்களால் பேசப்படுபவை; ஆனால் பல மொழிகளோ பழங்குடி மக்கள் என்று கருதப்படுகின்ற, சாதாரண, சமானிய மக்களால் பேசப்படுகின்ற நிலைமையினைக் கொண்டவை.
இன்று இந்திய நாட்டில் மூன்று கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் வாய்வழி முன்னூறுக்கும் அதிகமான மொழிகள் வாழ்கின்றன. நானூறுக்கும் அதிகமான இனங்களாக வாழும் இம்மக்களும் இந்திய நாட்டு மக்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. இந்தியநாட்டு நாகரிகம் அவர்கள் வாழ்விலும் வரலாற்றிலும் பளிச்சிட்டுக் காணப்படுகின்றது என்பதை நாம் நன்கு அறிவோம். அவர்கள் வாழ்வில் காணப்படுகின்ற சடங்குகள் அனைத்திலும் இந்திய நாட்டுப் பண்டைய நாகரிகம் மண்டிக்கிடக்கிறது. அவர்களின் தொழிலிலும் பிற துறையிலும் இந்தியாவின் பழமைமிக்க நாகரிகச் சின்னங்கள் கரந்து உறைவதைக் காணலாம். அவர்களின் பழக்க வழக்கங்களில் பழமையான பண்பாடும், தொன்மையான நாகரிகச் சின்னங்களும் மறைந்து கிடக்கும். வெளி நாகரிகத்தால் அதிகமாகத் தாக்கப்படாத இவர்கள் வாழ்வுச் சடங்குகளில் இந்தியப் பண்பாடு கரந்து கிடக்கும். இந்நிலையில் இவர்களின் வாழ்வுபற்றி அறிவதும் இவர் தம் வரலாறு பற்றித் தெரிவதும் இவர்களின் பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்வதும் இந்தியநாட்டுப் பண்பாடு பற்றி நன்கு அறிந்து கொள்வதற்கு இன்றியமையாத பணிகள் ஆகும். இந்நிலையில் நீலகிரி இருளரைப்பற்றி, அவர்களின் வாழ்வையும் வரலாற்றினையும் பற்றித் தொழில் துறைகளையும் பற்றி, வாழ்வுச் சடங்குகளையும் பழக்க வழக்கங்களையும் பற்றி என்னுடைய மாணவ நண்பர் திரு ஆர்.பெரியாழ்வார் பலவேறு கோணங்களில், பலவேறு நிலைகளில் பகுத்து அறிந்து பலபட ஆராய்வதும் அறிந்தவற்றை இனிய தமிழில் "யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்" என்ற எண்ணத்தின் அடிப்படையில் எழுதியிருப்பதும் மகிழ்ச்சியும் மனத்தெம்பும் தருவன ஆகும்.
மனிதனின் எண்ணத்தைப் பிறருக்கு அறிவுறுத்தும் கருவியே மொழி என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த ஒரு பண்பை மட்டும் கொண்டதே மொழி என்பது தவறுடைய ஒரு கருத்தாகும். எண்ணத்தைப் புலப்படுத்துவதோடு இன்னும் எத்தனையோ செய்திகளை மொழி காட்டி நிற்கிறது. ஒரு மொழியின்கண் பலவேறு செய்திகளைக் காணலாம். அம்மொழி பேசுவோனின் வாழ்வின் தத்துவத்தை அது பிரதிபலித்து நிற்கக் காணலாம். திருமூலரும் திருவள்ளுவரும் வாழ்வு பற்றி என்ன எண்ணினார்கள் என்பதை அவர்களின் நூல்கள் படம் பிடித்துக் கட்டுவதை நாம் அறிவோம். இந்நிலையில்தான் சாக்கிரட்டீஸ் போன்ற தத்துவ ஞானிகள் மொழி பற்றி ஆராய்ந்தனர். இதைப்போலவே மனிதனின் மொழியில் அவன் சமூகத்தில் காணப்படும் உறவுமுறை, உரிமை வாழ்வு இன்னோரன்ன பல மானிடவியல் கூறுகளைக் காண முடியும். சிற்றப்பனின் மகனையும் பெரியப்பனின் மகனையும் அண்ணன் என்றோ தம்பி என்றே அழைக்கும் நிலையில் தமிழனின் உறவு முறை எண்ணமும் உரிமை முறை எண்ணமும் நன்கு பளிச்சிடும். இந்நிலையை வேறு பல மொழிகளில் காணமுடியாது. இதனால்தான் சபீர் போன்ற மானிடவியல் அறிஞர்களும் மனித மொழிகள்பற்றி ஆராய்ந்தனர். ஒரு சமுதாயத்திற்கும் அச்சமுதாயம் பேசும் மொழிக்குமிடையே மிகுந்த தொடர்பு உண்டு. மனிதப் பேச்சு ஏதோ வெட்ட வெளியில் உருவாவதில்லை. ஒருவன் பேசும் பேச்சுக்கும் அவன் பிறரைப்பற்றி எண்ணும் எண்ணத்திற்குமிடையே தொடர்பு உண்டு. இந்த நிலையை அடிப்படையாகக் கொண்டுதான் சமுதாய மொழியியல் பிறந்தது. இப்படிப் பார்ப்பின் மொழி மனிதனோடு தொடர்பு கொண்ட எத்தனையோ துறைகளை ஆராய்வதற்கு இன்றியமையாத கருவியாக. ஒதுக்க முடியாத ஒரு மூலக்கருவியாக இருக்கக் காணலாம். சமுதாயவியல், மருத்துவம், உளவியல் தத்துவம், மானிடவியல், துறைகட்கும் இது ஒரு மூலப்பொருளாக விளங்கக் காணலாம்.
இந்நிலையில் இருளர்களின் மொழி பற்றிய ஆராய்ச்சியும் இன்றியமையாத ஒன்றாகும். இருளர்கள் சங்க கால இலக்கியங்களைப் போன்ற இலக்கியங்களைப் படைத்தவர்கள் அல்லர். சிலப்பதிகாரம் போன்றோ அல்லது சிந்தாமணி போன்றோ காப்பியங்களையும் கவிதைகளையும் கண்டவர்கள் அல்லர். அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மூலப்பொருளாக இருப்பது எல்லாம் அவர்களின் மொழி ஒன்றுதான்; அம்மொழியிலே காணப்படும் வாய்மொழி இலக்கியங்கள்தான். இந்நிலையில் அவர்களின் மொழியினையும் வாய்மொழி இலக்கியங்களையும் நன்கு ஆராய்ந்துள்ளார் நண்பர் பெரியாழ்வார். இத்தகைய முயற்சி தமிழ் நாட்டில் புதியதொரு முயற்சி ஆகும். மேனாட்டு அறிஞர்களின் கையில் முடங்கிக் கிடந்த இவ்வாராய்ச்சி முறையும் முயற்சியும் தமிழ்நாட்டு இளைஞர்களின் கையிலே வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும். எத்தனையோ மாணவ நண்பர்கள் பல்வேறு பழங்குடி மக்கள் பற்றியும் அவர்கள்பேசும் பலப் பல மொழிகள் பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர். தோடர்கள், கோத்தர்கள், கசவர்கள், குறும்பர்கள், பணியர்கள், காட்டுநாயக்கர்கள் போன்ற பலவேறு பழங்குடி மக்கள் பற்றி ஆராய்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். இவை அனைத்தும் தமிழிலும் வருமாயின் தமிழ் உலகம் நன்கு பயன்பெறும். இந்நிலையில் நண்பர் பெரியாழ்வாரின் முயற்சி நல்ல ஒரு முயற்சி. நாடு வரவேற்கும் ஒரு முயற்சி ஆகும். இம்முயற்சியில் ஈடுபட்ட மாணவ நண்பர் பெரியாழ்வாருக்கு எனது வாழ்த்தும் பாராட்டும். இந்நூலைத் தமிழுலகம் வரவேற்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.
ச. அகத்தியலிங்கம்
இயக்குநர்
மொழியியல் உயர் ஆய்வுத்துறை அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
அண்ணாமலைநகர்
12-12-1976
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன