செவ்வாய், 18 ஜனவரி, 2022

தொல்காப்பியச் செல்வம் - முன்னுரை

முன்னுரை

உலகத்தில், இப்போது உள்ள மொழிகள், மிகப் பலவாகும். இம்மொழிகளுள், சிலமொழிகளே தொன்மை வாய்ந்தன. இத்தகைய தொன்மொழிகளுள், தமிழ்மொழி ஒன்று. தமிழ் மொழியில் இப்போது கிடைத்திருக்கும் நூல்களுள் பழமையானது, தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் ஆகும். இந்நூல், இற்றைக்கு இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இந்நூல், இல்வாழ்க்கை, அரசியல், பண்பாடு முதலியவற்றில் தமிழ் மக்கள், நெடுங்காலமாகச் சிறப்புடன் வாழ்ந்தார்கள் என்னும் உண்மையினை, உள்ளவாறே உணர்தற்கு உரிய பெருநூல் ஆகும். மேலும் இந்நூல், தமிழ் மொழியின் எழுத்து, சொல் முதலியவற்றின் இலக்கண வரையறைகளையும் இனிது எடுத்துரைக்கின்றது. இந்நூலிற்கு உரைகள் பல உள்ளன. இந்நூலும் உரைகளும் ஊன்றிப் படித்தற்கு உரிய அருமையும் பெருமையும் உடையன. இந்நூலினை முறையாகக் கற்றல் வேண்டும் என்னும் ஆர்வம், தமிழ் அன்பர்களுக்குத் தோன்றுதல் வேண்டும் என்பது, என் விருப்பமாகும். ஆதலால், இந்நூலினைப் பற்றி எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளும் முறையில், இந்நூலின் கருத்துச் செல்வங்களையும், இந்நூலின் தொடர்பான பிற செய்திகள் சிலவற்றையும் தொகுத்து, தொல்காப்பியச் செல்வம் என்னும் நூலாக எழுதியுள்ளேன் இந்நூலினை அறிஞர்கள் இனிது வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

சென்னை 24-11-1970
லெ. ப. கரு. இராமநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன