- சிவஞானதாசர்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொழுந்துறை எனும் ஊரில் பழனியாண்டி பெருமாத்தாள் ஆகிய இருவருக்கும் 07.11.1916 ஆம் ஆண்டு பிறந்தவரே இராமதாசர். சிறுவயது முதல் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய எனது அண்ணன் இராமதாசர் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொண்டு மலேசியாவிற்கு சென்று தமிழ்ப் பணியாற்றியுள்ளார். மலேசியா மண்ணில் கல்வியறிவின்றி செப்பமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்த தமிழர்களைக் கண்டு மதிப்புமிகுந்த நாகரிக வாழ்க்கைக்கு வழி காட்டியாக விளங்கியுள்ளார். செந்தமிழ்ப் பாடசாலைகளை நிறுவி கல்லாமை என்னும் இருளைப் போக்கியுள்ளார். தான் கற்ற கல்வி வாயிலாக வாழ்நாள் முழுவதும் சேவை மனப்பான்மையுடன் சிறந்துள்ளார். சமயப் பாகுபாடு பாராது மலேசிய மக்களுக்கு கோவில், மசூதி, கிறித்துவ ஆலயங்களையும் கட்டிக்கொடுத்துள்ளார். அவரிடம் பயின்ற மாணவர்கள் சிறந்த கவிஞர்களாகவும், சிறந்த ஆளுமைகளாகவும் விளங்கியுள்ளனர். எனது அண்ணன் இராமதாசர் வாழ்க்கை முழுவதும் தமிழுக்காகவும், தமிழருக்காவும் சேவையாற்றிய 28.4.1991 ஆம் ஆண்டு அதிகாலை 2 மணியளவில் இம்மண்ணைவிட்டுச் சென்றார். பிறந்த ஊரான கொழுந்துறையில் அவரது உடல் அடக்கச் செய்யப்பட்டுள்ளது.
எனது உடன் பிறந்த அண்ணன் தமிழ்க்கடல் டாக்டர் சுவாமி இராமதாசர் ஐந்து வயதிலிருந்து எங்கள் தாத்தா அழகன் எழுதிய நூற்றுக்கணக்கான ஏச்சுச் சுவடிகளைக் கற்று அதன்பின், பதினெட்டு புராணங்கள், சங்க இலக்கியங்கள், பதினெட்டு வகையான இலக்கணங்கள், பதினெட்டு வகையான நிகண்டுகள் எல்லா நூல்களையும் எங்கள் அப்பா ஆ.அ.பழனியாண்டி வாத்தியார் அவர்கள் எங்கெங்கோ அலைந்து வாங்கி வந்து அண்ணனைக் கற்றுக்கொள்ள உதவினார்.
அதன்பின் 48 வகையான கவிகளைக் கற்று, சித்த மருத்துவம், நாடி பார்த்தல், வர்மம், குஸ்தி, சிலம்பு விளையாட்டு, வேதங்கள், சுருதிகள், உபனிசித்துகள், நைடதங்கள், மந்திர சாஸ்த்திரம், எந்திர சாஸ்திரம், தர்க்க சாஸ்த்திரம், ஓசை அளவீட்டு சாஸ்த்திரம், வான சாஸ்த்திரம், பூமி சாஸ்த்திரம், சவ்விய சாஸ்த்திரம், நீரோட்ட ஆகம சாஸ்த்திரம், சிற்ப சாஸ்த்திரம், வாஸ்து சாஸ்த்திரம் போன்ற அனைத்தையும் கற்றுக் கொண்டவற்றை எங்கேயாவது செல்ல வேண்டுமென நினைத்துத் தவித்தக் காலத்தில் சில செய்திகள் வந்தன. என்னவென்றால் நம் தமிழ்நாட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் பாய்மரக் கப்பலில் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றனர். நானும் மலேசியா செல்ல வெண்டுமெனக் கேட்டவுடன், அப்பா அனுமதியுடன் அண்ணன் பாய்மரக் கப்பலில் மலேசியா சென்றுவிட்டார்.
அக்காலத்தில் மலேசியா என்பது பெரிய மலைப்பிரதேசம் ஆகும். ஆயிரக்கணக்கான மலைகளை உடைத்து ஊராக்கி, நாடாக்கி, நகரமாக்கியவர்கள் நம் தமிழர்கள்தான். 19 ஆண்டுகள் ஆகியும் வேலைக்குச் சென்ற தமிழர்களைத் திருப்பிக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் விடவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் ஒற்றையடிப் பாதைகளில் அழுது கொண்டு போவார்கள். எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்டால் வேலைக்கு வந்து 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்களைத் திருப்பிக் கொண்டுபோய் தமிழகத்தில் விட மறுக்கின்றனர் இந்நாட்டவர். மனைவி மக்கள் என்ன ஆனார்களோ எனத் தெரியவில்லை. எனவே படித்தவர்களைத் தேடிச் செல்கிறோம். மனைவி மக்களுக்கு கடிதமாவது எழுதலாம் என்று சொல்லி அழுது கொண்டுச் சென்றனர். இதைப் பார்த்த அண்ணன் பினாங்கில் சரஸ்வதி தமிழ்ப் பாடசாலைக் கட்டினார். அவர் கட்டிய பாடசாலைகளாவன:
செந்தமிழ்க் கலாநிலையம், பினாங்கு
சரஸ்வதி அம்மன் கோவில் , பினாங்கு
இராஜமாரியம்மன் கோவில், பினாங்கு
சரஸ்வதி தமிழ்ப் பாடசாலை, பினாங்கு
பினாங்கு இந்து சபா
இராமகிருஷ்ண ஆசிரமம், பினாங்கு
இது மட்டுமின்றி இந்து மக்களுக்கு குல தெய்வக் கோவில்களையும் கட்டிக்கொடுத்தார். அண்ணனிடம் கல்வி கற்ற நூற்றுக் கணக்கான தமிழ் அறிஞர்கள் உள்ளனர். இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தவர்கள் போன்ற எல்லா மதத்தவர்களும் சாதி, மத பேதங்கள் இன்றி எல்லோரும் அறிஞர்கள் ஆனார்கள். 1972 ஆம் ஆண்டு சென்னையில் உலகத்தமிழ் பண்பாட்டு மாநாட்டில் அண்ணன் மிக அற்புதமாகப் பேசி பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். மலேசியாவில் எல்லா மாநிலமும் பாராட்டும் வண்ணம் சிறப்புச் சொற்பொழிவுகளை எல்லாம் நன்றாகச் செய்து முடித்தார்.
அண்ணன் வாயிலாக கற்றறிந்த அத்தனை வகையான சாஸ்த்திர சம்பிரதாயங்கள், புராணங்கள், வேதங்கள், சுருதிகள், உபனிசத்துக்கள், வான சாஸ்த்திரம், பூமி சாஸ்த்திரம், சிலம்பு விளையாட்டு, பூமிக்குக் கீழ் சவ்விய சாஸ்த்திரம், நீரோட்ட சாஸ்த்திரம், ஜோதிடவியல், கோவில் கும்பாபிஷேகம், குடமுழுக்குப் பிரதிஷ்டைகள், திதி கொடுத்தல் சங்கீதம், பரதம், இசையுடன் பாடுதல், எல்லா விதமான கவிகள் எழுதுதல், நூல் இயற்றுதல் போன்றவற்றை அண்ணன் எனக்கும் கற்றுக் கொடுத்ததும் மட்டுமின்றி என்னையும் இயங்க வைத்தார்.
இலக்கியப் பணிகள்
எம்.ஜி.ஆர் மதுரையில் நடத்திய உலகத் தமிழ்மாநாடு, ஜெயலலிதா தஞ்சையில் நடத்திய உலகத் தமிழ்மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளேன்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் உலக சைவ மாநாட்டில் மனித உடம்பில் 96 தத்துவ நானசாகரத்தைப் பேசியுள்ளேன். மலேசியாவில் அஸ்ட்ரோ டிவி பினாங்கு எப்ஃஎம் ரேடியாவிலும் உரையாட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இவையெல்லாற்றிற்கும் காரணம் என து அண்ணன் இராமதாசரே ஆவார்.
பினாங்கில் தமிழ்நேசன் பத்திரிக்கையில் வி.கே. சுப்பிரமணியன் என்ற கவிஞர் என்னுடைய படிப்பு மற்றவற்றை நன்றாக எழுதி சிறப்பித்துள்ளார். இவர் அண்ணனுடைய முக்கியமான் கவிஞர். மேலும் பால பண்டிதம் பிறவே ஷ பண்டிதம் கற்றதால் பண்டிதமணி என்றும், (இயல், இசை, நாடகம்) என்ற முத்தமிழை நன்கு கற்றதால், முத்தமிழ்க் காவலர் என்றும், மருத்துவம் கற்றதால், எமது அண்ணன் அவர்கள் பண்டிதமணி டாக்டர் முத்தமிழ்க்காவலர் என்ற பட்டத்தை 3.4.1987 ஆம் வழங்கினார்.
எனது உடன் பிறந்த அண்ணன் சுவாமி இராமதாசர் எனது படிப்பிற்காக மாதம் ஒன்றுக்கு 3000 ரூபாய் வரை 20 ஆண்டுகளாக அப்பாவின் முகவரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் எங்கள் அப்பா பழனியாண்டி வாத்தியார் மட்டுமல்ல. காங்கிரஸ் தியாகி ஆவார். 1952 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் சட்டமன்றத் தேர்தலில் ரெட்டை மாட்டுச் சின்னத்த்க் சாயல்குடித் தொகுதியில் நின்றார். 36 வருடங்களாக சமூகநீதிச் சங்கத் தலைவராகவும் இருந்தார். எங்களின் பாரம்பரியம் ஏழு தலைமுறையாகச் சிறப்பித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அண்ணனுக்காகப் பாடிய பாக்கள்
உயிரினும் மேலாய் மத்தித்து வரும் தனது அண்ணன் இராமதாசர் பற்றிய நினைவுகளை தனது பாக்களின் வாயிலாக வெளிக்காட்டியுள்ளார்.
காசிலவன் கொற்றத்துக் கவிராமதாசர் புகழ்
கம்பனவன் கவிமுகடாய் ஏற்றமாகி!
மாசிலா மனதின் மாண்புற்ற தன்மையால்
மாதவம் நிறைந்த தோற்றமாகி!
தேசியம் காத்திடத் தெளிவுடன் எழுந்து
தேசம் ஓங்கிடத் தேற்றமாகி!
கூசிய மணமற்ற கூர்மை நிகர்த்தி
குவலயம் காத்தவர் இராமதாசர்!
வானத்தைப் போலவே வழங்கும் குணத்தில்
வாழ்வும் வளமும் கண்டவர்!
கானத்தை ஒத்த கவினாகப் பேசிடும்
கனிவான முகத்தைக் கொண்டவர்!
தானத்தில் உயர்ந்த தாந்திரீகத் தவத்தால்
தண்டமிழ் அமுதம் உண்டவர்!
ஆனந்த ஆன்மீக அற்புத அண்ணன்
அனைத்தையும் ஆராய்ந்து விண்டவர்!
கன்றுகுரல் கேட்டுக் கறக்கின்ற பசுவெனக்
கனிவுடன் விளங்கிய மன்னவர்!
நன்றென நவிலும் நன்னயம் வகுக்கும்
நாவின் வன்மையில் தென்னவர்!
ஒன்றென யாரையும் ஒருங்கே அமைத்து
ஒருமுகப் படுத்தும் அன்னவர்!
குன்றென உயர்த்த குருமொழி கேட்டு
கூற்றுவனை விரட்டும் விண்ணவர்!!
4.புத்தம் புதிதான புவனம் படைதிடப்
புறப்பட்டு வருகின்ற ஒளியினிலும்!
சித்தம் கனிந்த சிந்தனைச் செல்வராய்ச்
சீரிளமை பயத்த மொழியினிலும்!
வித்தம் தேர்ந்து வினோதய விரிவான
வீரம் செறிந்த விழியினிலும்!
நத்தும் தொண்டர் நலம்பட அண்ணன்
நயத்துடன் இறங்கிடும் தெளிவானவர்!!
5.எண்ணில் அடங்காத ஏற்புடைய தமிழை
ஏதமிழ் புகழ்த்திய நிதத்தினிலும்!
மண்ணில் ஞானியர் மகிழ்ந்து போற்றுதும்
மாண்பின் மகத்தான விதத்தினிலும்!
கண்ணில் கனிந்த கவிஞானம் ஓர்ந்து
காவியம் கண்ட பதத்தினிலும்!
பண்ணில் அண்ணன் பைந்தமிழ் தன்னைப்
பாங்குடன் வளர்த்த இதமானவர்!!
6.தென்தமிழ் முனைந்த தென்னவர் என்றிடத்
தேசங்கள் போற்றுதும் அறத்தினிலும்!
முன்னவர் மூழ்கி முத்தமிழ் கவர்ந்து
மூண்டு எழுந்த வரத்தினிலும்!
பின்னவர் தமிழைப் பேணுதல் இன்றிப்
பின்னோக்கித் தள்ளிய புறத்தினிலும்!
அன்னவர் என்கின்ற அன்பின் அண்ணன்
ஆதவன்போல் உயர்ந்த தரமானவர்!!
7.பரம் சூழ்ந்த பண்பின் பரிநாமத்தால்
பாங்குடன் இலங்கும் ஆட்சியிலும்!
தரமான கல்வியைத் தந்து உதவிடும்
தாயன்பு கொண்ட மாட்ச்சியிலும்!
கரத்தில் அடக்கிய கன்னித் தமிழினைக்
காண்பதற்கு இனிதான காட்சியிலும்!
உரம்தந்து உள்ளத்தை ஊக்கிய அண்ணன்
உலகம் போற்றுதும் சாட்சியானவர்!!
8.நெஞ்சத்தை அள்ளும் செறிபடும் மறபின்
நேயம் நிறைந்த பிறப்பினிலும்!’
தஞ்சை கழனிகளில் தானாக உயர்ந்து
தனியாகத் தெறிகின்ற வரப்பினிலும்!
துஞ்சிடும் தமிழரின் துயர்களை நீக்கித்
தூர்த்தெழும் மனதின் திறப்பினிலும்!
அஞ்சர்க்க மலேசியர் அன்பினில் அண்ணன்
ஆசீர் அளித்த சிறப்பானவர்!!
9. செம்மை முகமும் செந்தமிழ்க் குணமும்
செறுவென்ற ஞானமிகும் தினமானவர்!
வெம்மை வரமும் வேந்தென அறமும்
வேற்றுமைகள் அற்றவாம் மனமானவர்!
இம்மை நோய்க்கு ஈடற்ற மருந்தாகி
ஈர்ப்புடன் விளங்கும் குணமானவர்!
தம்மை நன்றான தமிழாக எண்ணிய
தார்மீக இராமதாசர் தனமானவர்!!
10. செக்கர் வானத்தின் செம்மைக் கதிரவன்
சீர்மல்கும் செங்கதிர் செறிந்ததிலும்!
திக்குகள் எட்டும் தீந்தமிழ் உரைக்கின்ற
தீரத்தால் ஓங்கி விரிந்ததிலும்!
மிக்குறத் தமிழினை மிகைபட உயர்த்தி
மீதுறுத்தும் அடைவினைத் தெரிந்ததிலும்!
எக்குறையும் நிகழாமல் ஏற்றம் அளித்திட்ட
ஏகாந்த இராமதாசர் அறிவார்ந்தவர்!!
11. கத்தும் தரங்கம் கனிந்த அலைபாடக்
காவியம் எழுதிடும் புலமையிலும்!
முத்தான முறுவல் முனைந்திட முற்படும்
மூதறிவு பெற்ற வளமையிலும்!
தத்தும் குழந்தை தவழும் இதமான
தார்மீகச் சிந்தனையின் இளமையிலும்!
நத்தும் தொண்டர் நலம்பட அண்ணன்\
நயத்துடன் இறங்கிடும் களமானவர்!!
மேற்சுட்டிய பாக்களின் வாயிலாக தனக்கும் தன் அண்ணனுக்குமான பாசப் பினைப்பினையும், அவர் மீது கொண்டுள்ள மரியாதை மற்றும் அன்பினையும் அறிய முடிகிறது.
புகைப்படங்கள்
இராமதாசருக்கு மலேசியாவில் வெளியிட்ட தபால் தலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன