ஞாயிறு, 6 அக்டோபர், 2019

தமிழ் தேடல்

(6.10.19) இன்று செயங்கொண்ட சோழபுரம் மருத்துவர் இரா.அன்பழகன் அவர்களின் கடின முயற்சியில் உருவாகியிருக்கும் தமிழ் தேடல் வலைத்தளம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்குந்தர்புரம் அன்னை தெரசா மகளிர் பள்ளியில் நிகழ்ந்தது. இவ்வலைத்தளம் ஒரு தொடக்கப் புள்ளி.  இதில் 72 நூல்கள் பதிவேற்றம் செய்யப் பெற்றுள்ளது. இவ்வலையேற்றத்தின் சிறப்பு என்னவெனில் படிப்பதற்கு, தேடுவதற்கு, பதிவேற்றுவதற்கு/திருத்துவதற்கு எனக் கட்டமைக்கப்பெற்றுள்ளமை ஆகும்.
இதுபோன்ற அமைப்பைத் தமிழ் இணையக் கல்விக் கழகம், விக்கிப்பீடியா, தமிழ் புராசெக்ட் போன்ற தளங்கள் அமைத்துக் கொண்டாலும், இது சொற்களைத் தொகுத்து அடையாளம் காட்டும் தன்மையிலும், தேவையானதைத் தெரிவு செய்யும் பொழுது அதனை மட்டும் காட்சிப்படுத்தும் தன்மையிலும் வடிவமைக்கப் பெற்றுள்ளது. இது தொடக்கநிலை வாசகர்களுக்கும், தெரிதல்நிலை வாசகர் களுக்கும், ஆய்வுநிலை வாசகர்களுக்கும் பயனுள்ள தளமாக அமையும் என்பதே சிறப்பு. சான்றாக, அறம் என்ற சொல் தொல்காப்பியம் தொடங்கி பதிவேற்றப்பெற்ற 72 நூல்களிலும் எங்கெங்கு இருக்கின்றன என எடுத்துக் காண்பிக்கின்ற தன்மை காலத்திற்கு ஏற்ற வடிவமைப்பு எனில் மிகையாகாது. அத்தகுத் தளத்தை மேம்படுத்த ஆலோசனைகள் தேவைப்படுவதால், படைப்பாளர் ஒர் அறிமுகக் கூட்டமாகவும் ஆலோசனைக் கூட்டமாகவும் ஏற்பாடு செய்துள்ளார். இதில் நானும் ஆலோசகராகக் கலந்து கொண்டேன். அதற்கு வழிசமைத்துத் தந்த பேரா.மு. பாலசுப்பிரமணியன், பேரறிஞர் அடிகளாசிரியர் மகனார் பேரா.அ.சிவபெருமான், பேரா. அண்ணாமலை ஆகியோருக்கு நன்றியுடையேன். எண்பத்தைந்து வயதிலும் சுறுசுறுப்புடன் அனைத்திலும் இன்முகத்துடன் வரவேற்று, வழியனுப்பி வைத்த பேரா.பழனியாண்டி அவர்களுக்கும் நன்றி. பேரா.அ.சிவபெருமான் ஐயா அவர்கள் அடிகளாசிரியர் எழுதிய சில நூல்களையும் தாம் எழுதிய நூலையும் தந்து மகிழ்வுபடுத்தினார். விழா ஏற்பாட்டாளர் வெகுதொலைவில் இருந்து வருகை புரிவோர் என்னைப் போன்றோர் தயங்கக் கூடாது என்பதற்காகப் போக்குவரத்துச் செலவையும் பார்த்துக் கொண்டார்கள். செயங்கொண்ட சோழபுரத்திற்கு வருகை புரிந்தேன் என்ற பெருமிதமும் புதிய உறவுகள் கிடைத்த மகிழ்வும் கலந்துகொண்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன