காலத்தை வென்றுநிற்கும் மல்லப் பாடி
கற்பாறை குகையொளிரும் சித்தி ரங்கள்
ஞாலத்தின் மூத்தகுடி தமிழர் என்னும்
ஞாயத்தைப் பேசுகின்ற ஆவ ணங்கள்
கோலத்தைக் கண்டின்றும் வியந்து போகக்
கொலுவிருக்கும் பல்லவர்தம் மாமண் டூரும்
சித்திரமும் தமிழ்க்கலையின் பெருமை பேசும் !
பனைமலையின் கோவில்தம் சுவரில் காணும்
பசும்வண்ணக் கந்தர்வர் சித்தி ரங்கள்
வனைந்திருக்கும் காஞ்சிக்கை லாச நாதர்
வாழ்கோயில் சோமாசின் சித்தி ரங்கள்
நினைவிருந்தே அகலாமல் கண்ணுக் குள்ளே
நிற்குதஞ்சை பெருங்கோயில் சித்தி ரங்கள்
புனைந்திருக்கும் மதுரைமீ னாட்சி கோயில்
புகழோவி யங்கள்நம் கலையைப் பேசும் !
சித்தன்ன வாசல்தம் சித்தி ரங்கள்
சித்தத்தை மயக்குகின்ற அற்பு தங்கள்
வித்தையினைக் குளமாக்கி எருமை யானை
விளையாட அன்னங்கள் பறந்து செல்லச்
சத்தத்தைக் கேளாமல் துறவி மூவர்
சாய்ந்துமலர் பறிக்கின்ற காட்சி யெல்லாம்
இத்தரையில் தமிழர்தம் கலைமேன் மையை
இயம்புகின்ற பலவண்ண சொற்க ளன்றோ !
(மல்லப்பாடி - தொன்மையான பாறை ஓவியங்கள் உள்ள இடம்.
விழுப்புரத்தின் அருகில் உள்ள ஊர் பனைமலை)
பாவலர் கருமலைத்தமிழாழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன