சனி, 31 ஜனவரி, 2015

செம்மொழிக் கருத்தரங்க வரலாற்றில் முதல் முறையாக


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் தேசியக் கருத்தரங்கங்களைப் பல்வேறு நிறுவனங்களின் வழி நடத்தி வருகின்றது. அக்கருத்தரங்களில் ஆய்வுக்கே முதன்மைத் தரப்படும். ஆனால், இந்த ஆண்டு, தமிழைப் பகுதிப் பாடமாகப் பாயிலும் இளங்கலை ஆங்கிலம், தொழில் நுட்பவியல், நுண்ணியல், வணிகவியல் போல்வன துறை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்குச் சங்க இலக்கியங்களை  அறிமுகப்படுத்துவதற்கு நிதியுதவி அளித்துள்ளது. இதனைப் பெற்று வெற்றி வாகை சூடிய நாயகர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் தலைவர் திரு.த.திலிப்குமார் அவர்களேயாம். அதன் இறுதி நிகழ்வு முறைமைகள் வருமாறு:
கோவை - ஜனவரி - 31. சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பிலமைந்த தேசியக் கருத்தரங்கம் 29.01.2015, 30.01.2015, 31.01.2015 ஆகிய மூன்று நாட்கள் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கோவை, ஓம் சக்தி மாத இதழ் ஆசிரியர் கவிஞர் பெ. சிதம்பரநாதன் அவர்கள் தலைமையேற்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் முதல்வர்  முனைவர் மு.இளமுருகன் அவர்கள் கருத்தரங்கம் குறித்த தனது கருத்துரையை வழங்கினார்.

வியாழன், 29 ஜனவரி, 2015

செம்மொழித் தேசியக் கருத்தரங்கம் - சங்க இலக்கியம் ஓர் அறிமுகம்


இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோவை - 641 028

     சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பிலமைந்த தேசியக் கருத்தினை 29.01.2015 இன்று தொடங்கியது. மேலும் இக்கருத்தரங்கம் 30.01.2015, 31.01.2015 ஆகிய இரண்டு நாட்களுக்கு  நடைபெறும்.

          இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி முன்னிலை வகித்தார்.

          தொடர்ந்து கோவை, பேரூர் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் முனைவர் தவத்திரு. மருதாசல அழகளார் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றுகையில் ஒவ்வொரு இடங்களில் நடைபெறும் கருத்தரங்கங்கள் இலக்கியங்களில் ஆழமாகச் செல்லும். இப்படி இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதுபோல் அமைந்தால் தான் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். அந்த வகையில்  சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்ற இக்கருத்தரங்கத்தின் தலைப்பை இன்றைய மாணவர்களுக்குப் பொருத்தமானதாக அமைவதோடு மற்ற கல்லூரிகளுக்கும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. மேலும் சங்க இலக்கியங்கள் எவை எவை என்பது பற்றி எடுத்துரைத்து அவை மக்களின் வாழ்வியல் அங்கமாக விளங்கிவருவதையும் எடுத்துரைத்தார்.

புதன், 14 ஜனவரி, 2015

நூல் வெளியீடு

வணக்கம் நண்பர்களே/ கவிஞர்களே
கவிஞர் செ. பா. சிவராசன் - ஆறாம் படைப்பான " ஒருத்தி ஒருவனுக்கு " என்னும் நாவல் மற்றும்  முனைவர் சத்தியராஜ் அவர்களின் "பீச்சி " , கவிஞர் முனியசாமியின் "இலக்கணம் அறியா கவிதை " ஆகிய கீதம் பதிப்பகத்தின்  நூல்கள் 38 வது சென்னைப் புத்தககக் கண்காட்சியில் 20 -01-02015 மதியம் 1.30 மணிக்கு வெளியிட உள்ளோம் . தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் எழில் இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இவ் விழாவில் தாங்கள் நண்பர்களோடும் , குடும்பத்தோடும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம் . நன்றி
கவியன்புடன் அழைக்கும் ,
 செ.பா. சிவராசன்
 முனைவர் சத்தியராஜ்
 கவிஞர் முனியசாமி  

வெள்ளி, 9 ஜனவரி, 2015

அகராதி – வரலாறும் மொழியியலும்


வ. நதியா
முனைவர் பட்ட ஆய்வாளர்
அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர் - 10



முன்னுரை
மனித சமுதாயத்தின் வாழ்க்கைமுறை, செயல்பாடு, பண்பாடு போன்றவற்றைப் பதிவுசெய்யும் கருவியாக விளங்குவது இலக்கியமாகும். இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்பல்என்னும் பாடல் வரி இலக்கியத்திலிருந்து இலக்கணம் முகிழ்த்தது என்பதை உணர்த்துகின்றது. இலக்கியம் அகராதித் தொகுப்பிற்குரியச் சொற்களை வழங்கும் கருவூலமாகத் திகழ்கின்றது. அகராதிகள் இலக்கணத்தின் பின்னிணைப்பாக கருதப்பெறுகின்றன.
மொழி அமைப்பைக் கற்றல் என்ற நிலையில் கூடுதலாகச் சொற்பொருளையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மரபு இலக்கணங்களிடையே நிலவி வந்துள்ளது. மொழியைக் கற்பதிலும், கற்பித்தலிலும் இலக்கணம், இலக்கியம், அகராதி என்பன கருவி நூல்களாக விளங்குகின்றன.
இலக்கணங்களிலும், நிகண்டுகளிலும் கற்றல் மற்றும் கற்பித்தலின் கூறுகள் ஒழுங்குபடுத்தபட்டவையாக அமையவில்லை. அவற்றை எளிமைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பெற்றவை அகராதிகளாகும். அகராதிகள் மொழியில் பயன்படுத்தப்பெறும் சொற்களைப் பாதுகாத்து வைப்பதில் காப்பகமாகவும், மொழியைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் ஐயங்களை நீக்குவதில் தீh;ப்பகமாகவும் இலக்கணம், பொருள் மற்றும் பயன்பாடு தொடர;பான சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றன.

சனி, 3 ஜனவரி, 2015

எழுத்துக்கடன் கொண்டு மொழி தழைக்குமா? வீழுமா?

                                                                                                                                    முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
                                                                                                                                                   தமிழ் – உதவிப் பேராசிரியர்
                                                                                                                                     இந்துசுதான் கலை & அறிவியல் கல்லூரி
                                                                                                                                            கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.

கடன் இருவகைத்து. ஒன்று: சொற்கடன். இது திருப்பித்தரும் இயல்பினல்லது. மற்றொன்று: பொருட்கடன். இது ஒரு சாரருக்கு நன்மையும், ஒரு சாரருக்குத் தீமையும் விளைவிக்கும் (ஞா.தேவநேயப்பாவாணர், 2009:91). இதனுடன் எழுத்துக் கடனையும் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு மொழியை முழுமையாக கொடைமொழி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழிமுறையேயாம். இந்த எழுத்துக்கடன் ஒரு மொழி தழைத்து வளர அடிகோலுமா? அல்லது அடிச்சுவடே இல்லாது வீழ வழிவகுக்குமா? என்பது ஆராயற்பாலது. ஏனெனின் கொடை மொழிக்குரிய எழுத்துகளைக் கொள்மொழி ஏற்கும்போது, எழுத்துக்கள் மட்டும் அம்மொழியில் சென்று சேர்வது இல்லை. மாறாகச் சொற்களும் பொருட்களும் சென்று சேருகின்றன. இவ்வாறு செல்லும்போது அம்மொழிக்குரிய நிலைப்பாடு என்னவாக இருக்கும். அங்கு ஒரு நிலைப்பாடும் இராது என்பதே வெளிப்படை. அதனை இலக்கணக் கலைஞர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அவ்விலக்கணக் கலைஞர்கள் விதி வகுத்திடவும் தவறவில்லை.
 தொல்பழங்காலத்தில் இந்தியாவின் பெருநிலை மொழிகளாகத் தமிழ், சமசுகிருதம், பிராகிருதம், பாலி ஆகியன இருந்துள்ளன. இவற்றுள் சமசுகிருதம் அனைத்து மொழிகளிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தியும் வருகின்றது. இத்தாக்குறவிற்குத் தமிழ் தவிர பிற திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வன தொடக்கத்திலேயே இடம் தந்தன. ஆனால் தமிழ்மொழி மட்டும் இடம் தரவில்லை. இதனை,
 வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
 எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே – தொல்.சொல்.397
எனும் விதி துலக்கும். இவ்விதி பேச்சு வடிவத்தை ஏற்கலாம் என்பதையும், எழுத்து வடிவத்தை ஏற்கலாகாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. ஆக, தொல்பழங்காலத்தில் இருந்த இந்நிலைப்பாடு பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்பும் மாறின. சமசுகிருதத்தின் ஆதிக்கம் தமிழ்மொழியின்பால் காலூன்றியது எனலாம் (க.ப.அறவாணன், 2006:121 – 126). ஆகவே, தமிழ்மொழிக்குரிய முதன்மை எழுத்துக்கள் முப்பது என்றமை, இன்று ஆய்தத்துடன் சேர்த்து முப்பத்தேழு (ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ) எனக் கூறுமாறும் ஆகிவிட்டது. குறிப்பாக இன்று மழலையரின் தமிழ் அரிச்சுவடியிலும் இடம்பெற்றுவிட்டமை நோக்கற்பாலது. இவ்வாறு உட்புகுந்த சமசுகிருத மொழியின் ஆதிக்கம் மெல்ல மெல்ல விரிந்து நின்றது. ஆகவே இன்று மாந்தர் பெயர்கள் அனைத்தும் சமசுகிருதமாகவே அமையக் காணலாம்.