வியாழன், 29 ஜனவரி, 2015

செம்மொழித் தேசியக் கருத்தரங்கம் - சங்க இலக்கியம் ஓர் அறிமுகம்


இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோவை - 641 028

     சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பிலமைந்த தேசியக் கருத்தினை 29.01.2015 இன்று தொடங்கியது. மேலும் இக்கருத்தரங்கம் 30.01.2015, 31.01.2015 ஆகிய இரண்டு நாட்களுக்கு  நடைபெறும்.

          இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி முன்னிலை வகித்தார்.

          தொடர்ந்து கோவை, பேரூர் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் முனைவர் தவத்திரு. மருதாசல அழகளார் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றுகையில் ஒவ்வொரு இடங்களில் நடைபெறும் கருத்தரங்கங்கள் இலக்கியங்களில் ஆழமாகச் செல்லும். இப்படி இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதுபோல் அமைந்தால் தான் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். அந்த வகையில்  சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்ற இக்கருத்தரங்கத்தின் தலைப்பை இன்றைய மாணவர்களுக்குப் பொருத்தமானதாக அமைவதோடு மற்ற கல்லூரிகளுக்கும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. மேலும் சங்க இலக்கியங்கள் எவை எவை என்பது பற்றி எடுத்துரைத்து அவை மக்களின் வாழ்வியல் அங்கமாக விளங்கிவருவதையும் எடுத்துரைத்தார்.


          கோவை, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமதி சரசுவதி கண்ணையன் அவர்கள் தனது வாழ்த்துரையில் எனது கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெறும் இத்தேசியக்கருத்தரங்கினை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றென். தமிழ்த்துறையினரின் இப்பணி பாராட்டுதலுக்கு உரியது. இதுபோன்றதொரு கருத்தரங்கினைப் பிற துறையைச் சார்ந்தவர்களும் நடத்தலாம். இதனால் மாணவர்கள் பாடம் சார்ந்த கல்வியொடு பிற செய்திகளை அறிந்து கொள்ளவும் தங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொள்ள ஏதுவாக அமையும் என்றார்.

     கோவை, அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் இணைப்பேராசிரியர்     முனைவர் கி.சுப்பிரமணியம்  அவர்கள் தன் வாழ்த்துரையில் சங்க இலக்கியங்களை நம் கையில் தவழத் தேடிக்கொடுத்தவர் உ.வே.சாமிநாதர். சங்க இலக்கியத்தை அகம், புறம் என்று பிரித்தார்கள். அவை எவ்வாறு மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது என்பதை சங்க இலக்கியப்பாடல்கள் கொண்டு எடுத்துரைத்தார்.

   சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் சிற்பி. பாலசுப்ரமணியம் அவர்கள் சிறப்புரையாற்றுகையில் சங்க இலக்கியத்தை அறிமுகப் படுத்துவதற்கு முன் இலக்கியத்தை மாணவர்களுக்கு முதலில் அறிமுகம் செய்ய வெண்டும். உ.வே.சாமிநாதர் இல்லையெனில் சங்க இலக்கியங்கள் இல்லை. இக்கருத்தரங்கம் இல்லை. இதனால் இவருக்கு மகோபாத்தியாயா என்ற பட்டத்தை அரசு வழங்கியது. திருவாவடுதுறை மடத்தின் மாணவராக உ.வே.சா விளங்கினார். உ.வே.சாமிநாதர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோர் வாழ்ந்த காலம் தான் பொற்காலம். ஒவ்வொரு சங்க இலக்கியங்களும் பொற்றாமரை. காதலுக்கு இலக்கணமாகப் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் வுறப்பட்டுள்ளன. அவை உலகப்புகழ் பெற்ற பாடல்களாக இன்று திகழ்கின்றன. இப்பாடல்களை ஏ.கெ.இராமானுசம்  என்பவர் ஆங்கிலத்தில்  மொழி பெயர்த்துள்ளார்.

          முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவருமான திரு.த.திலிப்குமார் அனைவரையும் வரவேற்றார்.  விழாவின் நிறைவாக தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி த. அன்புச்செல்வி  நன்றி கூறினார்.

                                                                        - முனைவர் அருவி. தேன்மொழி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன