வெள்ளி, 9 ஜனவரி, 2015

அகராதி – வரலாறும் மொழியியலும்


வ. நதியா
முனைவர் பட்ட ஆய்வாளர்
அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர் - 10



முன்னுரை
மனித சமுதாயத்தின் வாழ்க்கைமுறை, செயல்பாடு, பண்பாடு போன்றவற்றைப் பதிவுசெய்யும் கருவியாக விளங்குவது இலக்கியமாகும். இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்பல்என்னும் பாடல் வரி இலக்கியத்திலிருந்து இலக்கணம் முகிழ்த்தது என்பதை உணர்த்துகின்றது. இலக்கியம் அகராதித் தொகுப்பிற்குரியச் சொற்களை வழங்கும் கருவூலமாகத் திகழ்கின்றது. அகராதிகள் இலக்கணத்தின் பின்னிணைப்பாக கருதப்பெறுகின்றன.
மொழி அமைப்பைக் கற்றல் என்ற நிலையில் கூடுதலாகச் சொற்பொருளையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மரபு இலக்கணங்களிடையே நிலவி வந்துள்ளது. மொழியைக் கற்பதிலும், கற்பித்தலிலும் இலக்கணம், இலக்கியம், அகராதி என்பன கருவி நூல்களாக விளங்குகின்றன.
இலக்கணங்களிலும், நிகண்டுகளிலும் கற்றல் மற்றும் கற்பித்தலின் கூறுகள் ஒழுங்குபடுத்தபட்டவையாக அமையவில்லை. அவற்றை எளிமைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பெற்றவை அகராதிகளாகும். அகராதிகள் மொழியில் பயன்படுத்தப்பெறும் சொற்களைப் பாதுகாத்து வைப்பதில் காப்பகமாகவும், மொழியைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் ஐயங்களை நீக்குவதில் தீh;ப்பகமாகவும் இலக்கணம், பொருள் மற்றும் பயன்பாடு தொடர;பான சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றன.

செய்திப் பரிமாற்றம்
செய்திப் பரிமாற்றம் தடையின்றி நடைப்பெறச் சொல் மற்றும் பொருள் அறிவு இன்றியமையாததாகும். மொழிவரலாற்றில் ஆரம்பகாலம் முதல் சொல்பொருள் தொடர்பான நோக்கீட்டு நூல்கள் பல தொகுத்தளிக்கப் பெற்றுள்ளன. நோக்கீட்டு நூல்களாகக் கலைக்களஞ்சியம், அகராதி, சொல்லடைவு, சொற்பட்டியல், தொடர; அடைவு, பொருள் அடைவு, சொற்களஞ்சியம் என்பன திகழ்கின்றன. தமிழில் முதல் நோக்கீட்டு நூலாகத் திகழ்வது தொல்காப்பியமாகும். நோக்கீட்டு நூல்களுள் அகராதிகள் தலையாய பயன்பாட்டைக் கொண்டவையாக விளங்குகின்றன.
அகராதிகள் மொழி, அளவு, காலம் என்பனவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. சொல்லுக்குரியப் பொருளை விளக்குவதற்கு அகராதிகளில் காலந்தோறும் பல்வேறு உத்திகளும் நெறிமுறைகளும் கையாளப்பட்டு வருகின்றன.
அகராதித் தொகுப்பு வரலாறு
பயன்பாட்டு மொழியியலின் பகுதிகளாக விளங்கும் அகராதியியல் (Lexicography) அகராதிக்கலை (Lexicology) என்பன ஒன்றோடொன்று தொடர்புடையன. இவ்விரு சொற்களும் Lexico எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானவையாகும்.  Lexico என்பதன் வேர்ச்சொல் Lexis என்பதாகும். லெக்சிகோகிராபி என்பதற்குச் சொற்களை ஏதேனும் ஒரு நெறிமுறையின் கீழ் குறிப்பாக அகராதி வடிவில் தொகுத்து வழங்கும் இயல் என்பது பொருளாகும்.
லெக்சிகாலஜி எனும் சொல் சொற்களை பொதுநிலை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து அறியும் கலை என்று பொருள்படும். லெக்சிகோகிராபி எனும் சொல் கி.பி.1680 முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது (எச்.சித்திரபுத்திரன், அகராதியியல் கையேடு ப.2).
லெக்சிகோகிராபி, லெக்சிகாலஜி எனும் சொற்களுக்குப் பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் பலவாறு விளக்கங்கங்களைத் தருகின்றன (The new encylopaedia Britnnica vo.1,v p.187).
லெக்சிகோகிராபி என்பது அகராதி தொகுக்கும் கலை அல்லது பயிற்சி எனும் பொருளுடையது. லெக்சிகாலஜி என்பது சொற்களை அவற்றின் வடிவம், வரலாறு, சொற்பிறப்பு, சொற்பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயும் அறிவியல் ஆய்வாக அமைகின்றது.
கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவராகக் கருதப்பெறும் அரிஸ்டோ பேன்சு (Aristo phanes) என்பவர் முதல் அகராதிக் கலைஞர் என போற்றப்படுகிறார். கி.பி 9 நூற்றாண்டிற்கு அலெக்சாண்டர் பாம்பிலசு (Pamphilus) என்பார் சொற்றொகுதி வெளியிட்டார்.
அப்போலியன்சு என்பவரின் ஹோமரிக் கிளாசரிஎனும் நூலே முதல் அகராதி எனும் தகுதியைப் பெற்றுள்ளது. கி.பி 2ஆம் நூற்றாண்டில் அட்டிசிஸ்டுகளின் அகராதிகள் உருவாகின (தாவே வீராசாமி வாழ்வியற்களஞ்சியம் ப.78).
இதே ஆண்டில் ஜீலியஸீஸ் போலக்சு என்பவர் இலத்தீன் கட்டுரைப் பெயர;களைத் (Attic words) தொகுத்து வெளியிட்டார். கி.பி. 5 நூற்றாண்டில் ஹைசிசஸ் (Heisychus) என்பவரால் ஒரு சொற்றொகுதி உருவாக்கப்பட்டது. கி.பி 8ம் நூற்றாண்டில் இலத்தீன் ஆங்கில கோர்பஸ் கிளாசரி ஒன்று வெளியிடப்பட்டது. இதுவே ஆங்கிலத்தில் மிகத் தொன்மையானதாக கருதப்படும் இருமொழி அகராதியாகும் (தா.வே. வீராசாமி வாழ்வியன் களஞ்சியம் ப.78).
ஆரம்பிசோஜியோ கலிபினே (Ambrogio calepeno) என்பவர் பல்வேறு மொழிகளை உள்ளடக்கிய சொற்றொகுதியை உருவாக்கினார;. இதனால் அகராதியைக்  குறிக்க Calpm என்னும் சொல் அக்காலக்கட்டத்தில் வழங்கப்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி 1530 இல் ஆங்கில பிரெஞ்சு சொற்றொகுதி ஜான் பால்சிக்கி ரேவ் என்பவரால் உருவாக்கப்பட்டது. கி.பி 1538 இல் வெளியான தாமஸ் எலியட்டின் இலத்தீன் ஆங்கில அகராதியை தாமஸ் காப்பா என்பவர் விரிவுப்படுத்திப் பெரிய அளவிலான சொற்றொகுதியை கி.பி.1847 இல் வெளியிட்டார்.
ஆங்கில மொழியில் அகராதிப்பணி கி.பி 1530ல் தோற்றம் பெற்றுள்ளது. கி.பி 1530 இல் வில்லியம் டிண்டேல் (William Tyndale) என்பவரால் தொகுக்கப் பெற்ற ஆங்கிலச் சொற்றொகுதிதான் முதன்முதல் தோன்றிய ஆங்கிலச் சொற்றொகுதியாகும். இவ்வகராதிக்குப் பிறகு பல அகராதிகள் தோற்றம் பெற்றன.
அகராதியும் மொழியியலும்
அகராதி பல துறைகளுடன் நெருங்கிய தொடா;பு கொண்டிருந்தாலும் மொழியியலின் ஒரு பிரிவாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
பயன்பாட்டு மொழியியலின் ஒரு பிரிவாக விளங்கும் அகராதியியல் மொழியியலோடு இரண்டு நிலைகளில் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அவை:
1.   மொழியியல் பிரிவுகளுடனான தொடர்பு
2.   மொழியியல் வகைகளுடனான தொடர்பு
மொழியியல் பிரிவுகளுடனான தொடர்பு
மொழியியலின் பிரிவுகளாகிய ஒலியியல், ஒலியனியல், உருபனியல், பொருண்மையியல் தொடரியல் என்பன அகராதித் தொகுப்பதற்கு பெரிதும் பயன்படுகின்றன. அகராதியியலுக்கும் ஒலியளியலுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. சொற்கள் ஒலிகளால் ஆனவை. இவ்வொலிகள் உருபன்களின் ஆக்கத்திற்குப் பெரிதும் துணைபுரிகின்றன. இலக்கணச் செய்தி சொல் தேர்வு அடிப்படை வடிவத்தேர்வு போன்றவற்றிற்கு இலக்கணமரபும் உருபனியலும் பொருள் விளக்கத்திற்குப் பொருண்மையியலும் சொல்லின் செயல்பாட்டைக் கணிப்பதற்குத் தொடரியலும் பயன்படுகின்றன.
மொழியியல் வகைகளுடனான தொடர்பு
அகராதித் தொகுப்புப்படிநிலைகளில் எழும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மொழியியல் வகைகள் துணைநிற்கின்றன. சான்றாக, சமுதாய மொழியியல் மானிடவியல் மொழியியல் உளவியல் மொழியியல் கிளை மொழியியல் புள்ளி விவர மொழியியல் வரலாற்று விளக்க மொழியியல் உரல்நிலை மொழியியல் எனவாகும்.
கலைச்சொல் தெரிவிற்கும் பயன்பாட்டு பொருண்மையைக் கண்டறிவதற்கும் புள்ளி விவர மொழியியல் துணைபுரிகின்றன. மொழி வழக்குகள் பற்றிய குறிப்புகளை தருவதற்குச் சமுதாய மொழியியல் பயன்படுகின்றது. சொற்பிறப்பு பொருள் வகைப்பாடு என்பனவற்றிற்கு வரலாற்று மொழியியலும் உதவுகின்றது. சொற்பொருள் தொடர்பைக் கண்டறிய உளவியல் மொழியியலும் இன வட்டார வழக்குகளை அறிவதற்குக் கிளை மொழியியலும் துணைநிற்கின்றன. சொற்களின் வடிவம் மற்றும் பொருள் மாற்றங்களைக் கண்டறியவும் ஒப்புருச்சொற்களை இனங்காணவும் விளக்க மற்றும் வரலாற்று மொழியியல் பயன்படுகின்றன.
முடிவுரை
அகராதிப்பணி மொழியியல் மட்டுமல்லாது நீண்ட வரலாற்றைக்கொண்டது. உலக மொழிகளில் கடினச்சொற்களுக்கு பொருள் கூறும் பழக்கம் வழக்கத்திலிருந்தது. இப்பழக்கம் சிறு சொற்பட்டியல்கள் தோன்றுவதற்கு வழி வகுத்தது. இவ்வாறு தோற்றம் பெற்ற சொற்பட்டியல்கள் அகராதிகளின் உருவாக்கத்திற்கு அடித்தளமாய் அமைந்தன. மொழிகளில் அகராதிகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் பல அமைப்புகளில் தோற்றம் பெற்று வந்தள்ளன. 

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன