வெள்ளி, 4 ஏப்ரல், 2014

தமிழியல் ஆய்வுக்குச் செந்தமிழ்க் காவலரின் பங்களிப்புகள்



தஞ்சை, தமிழ்ப்பல்கலைக் கழக இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் திங்கள் மூன்றாம் நாள் நிகழ்த்தப் பெறும் அறக்கட்டளைச் சொற்பொழிவு இந்த ஆண்டும் நிகழ்த்தப் பெற்றது. நிகழ்வின் தொடக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அத்துறைத் தலைவர் பேரா. இரா. முரளிதரன் அவர்கள் வரவேற்புரை நல்குமாறு அமைந்தது. மேனாள் மொழியியல் துறைத்தலைவர் பேரா. கி. அரங்கன் அவர்கள் வாழ்த்துரையுடன் செந்தமிழ்க் காவலர் முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார் பெயர் சொல்ல நிற்பது ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியமே எனவும், அவர் கடமை, காலம் தவறாமையும் உணர்வுகளுக்குச் சரியான குறியீடாகவும் திகழ்கின்றார் எனவும், இன்று கல்விப் பணிக்கு ஊதியம் நிறைவு; ஆனால் அதற்குரிய வேலைகளை யாரும் செய்ய முன்வருவதில்லை எனவும் கூறி அமைந்தார்.
          நிகழ்வின் அடுத்ததாக மாண்பமை துணைக்கண்கானகர் பேரா. ம. திருமலை அவர்கள் முந்தைய (3.4.2013) சொற்பொழிவின் நூலை வெளியிட்டு, அந்நூல்கள் குறித்த கருத்தியல்களை முன்வைத்துத் தலைமையுரை ஆற்றினார். அவர்,
      ·        பழம் பாடலில் உள்ள குறிப்புகளைச் சுட்டிக் காட்டுதலும், அப்பாடல்களை நடைமுறை வாழ்க்கையொடு ஒப்பிட்டுக் காட்டுதலும் அவர் உரையில் காணலாகின்றன.
      ·        குறட்பாக்களை எவ்வாறு விளக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். 
    ·        அவர்கள் முன்வைக்கும் வினாக்கள் உணர்ச்சியின் அடிப்படையில் எழுந்தவை.
      ·        மிகைப்படச் செய்தல் கூறுகள் உள.

என்பன போன்ற கருத்துகளைக் கூறி நிறைவு செய்தார்.
          தமிழியல் ஆய்வுக்குச் செந்தமிழ்க் காவலர் அ. சிதம்பரநாதன் செட்டியார் பங்களிப்புகள் எனும் தலைப்பிலான கருத்துரை அடுத்த நிகழ்வாக அமந்தது. இதன் கருத்துரையாளராக மேனாள் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் தலைவர் பேரா. இராம. சுந்தரம் அவர்கள் அமைந்தார்கள். அவர்கள்,
         ·        முதன்முதல் தமிழில் பட்டம் பெற்றவர்.
         ·        1962இல் ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் உருவாக்கித் தந்தார்.
     ·        மொழியின் வளர்ச்சியைச் சமகாலத் தரவுகளுடன் ஒப்ப வைத்து விளக்கினார்.
        ·   பன்மொழி. ஒருமொழி, உயிரியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார்.
        ·        சிறுகதை, கவிதை ஆகியவற்றைப் படைத்துள்ளார்.
        ·        வடமொழியில் தமிழ் போல்வன கட்டுரைகளை ஆக்கியுள்ளார்.

போல்வன ஆய்வுப்பணிகளைத் தமிழ்ச் சமூகத்துக்கு விட்டுச் சென்றுள்ளார் எனக்கூறி நிறைவு செய்தார். இக்கருத்துரையாளர் செந்தமிழ்க் காவலரின் மாணாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. செந்தமிழ்க் காவலரின் தமையன் ஏற்புரை நல்கவும், முனைவர் சி. சாவித்ரி (இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி) அவர்கள் நன்றியுரை நல்கவும் சொற்பொழிவு நிறைவெய்தியது. இந்நிகழ்வைத் தொகுத்து வழங்கியவர் முனைவர் பட்ட ஆய்வாளர் பிரேம்குமார்.
                                                                                    -      த. சத்தியராஜ்(நேயக்கோ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன