புதன், 29 ஜனவரி, 2014

கழார்க்கீரன் எயிற்றியார் காட்டும் பிரிவு


                                                                   குபேந்திரன்
                                                                       இளம் ஆய்வாளர்
                                                                       அழகப்பா பல்கலைக் கழகம்
                                                                       காரைக்குடி
முன்னுரை
          சங்க இலக்கியங்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். சங்க காலப் புலவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கழார்க் கீரன் எயிற்றியார் ஆவார். பெண்பாற் புலவர்களில் ஒருவரான இவர் வேட்டுவக் குடியினைச் சார்ந்தவர். இவர் 'கழாஅர்' என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் இவ்வூர் தற்பொழுது தஞ்சை மாவட்டத்திலுள்ள  திருக்களார் என்றும் சோழர் படைத்தலைவராகிய கீரன் இவர்தம் கணவர் என்பதும் இவரைப் பற்றிய குறிப்புகளாகும். வேட்டுவக்குடியைச் சார்ந்த இப்புலவரின் பாடல்கள் வழி இவர்தம் தனித்தன்மையைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
     கழார்க் கீரன் எயிற்றியார் பாடியனவாக நற்றிணையில் இரண்டும் {281,312}, குறுந்தொகையில் மூன்றும் {35, 261, 330}, அகநானூற்றில் நான்கும் {163,217,235,294} என மொத்தம் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் பாலைத்திணைக்குரிய பிரிவுப் பொருள் தொடர்பாகவே பாடப்பெற்றுள்ளன. தலை மக்களிடையே கல்வி, தூது, பொருள், காவல், போர், பரத்தமை ஆகிய காரணங்களால் பிரிவு ஏற்படும். எயிற்றியார் பொருள், போர் என்னும் இருநிலையில் ஏற்பட்ட பிரிவை அடிப்படையாகக் கொண்டு தம் பாடல்களை யாத்துள்ளார்.

வேந்தர்க்குற்றிழிப் பிரிவில் தலைவி கூற்று

          தலைவன் போர் கருதி விட்டுப் பிரிந்த நிலையில் வருந்தும் தலைவியின் மன உணர்வுகளை எயிற்றியாரின் தலைவி கூற்றுப் பாடல்கள் விளக்குகின்றன.
          தலைவன் பிரிவுணர்த்திய தோழியிடம் தலைவி ஆற்றாமை மீதூர, ''தோழியே உலக உயிர்களைப் பாதுகாக்க வெண்ணிற மேகம் சிறிய மழைத்துளிகளை விட்டொழிந்தது. அதனால் வயலில் உள்ள கரும்பின் காம்புகள் கோடைக் காலத்துப் பூக்கும் பூளைப் பூக்களைப் போல வாடைக் காற்றில் அசைந்தாடின. இலைகளும் புதல்களும் வெண்மை நிறம் உடையனவாக மல்ந்தன. கொழுத்த இலைகளையுடைய அவரையின் வளஞ்சான்ற அரும்புகள் அலர்ந்தன. பேரரும்பு முதிர்ந்த தோன்றிய ஒளி பொருந்திய பூக்கள் மலந்து விரிந்தன. புலங்கள் தோறும் பறவைக் கூட்டம் கல்லென்று ஒலி செய்தன. தம் தலைவரைப் பிரிந்து வாழும் பெண்கள் தம் நலம் இழந்து பனிப்பருவம் நடுங்க வந்துவிட்டது. இப்பனிக்காலம் பொருள் ஈட்டப் பிரிவார்க்கு ஏற்ற காலம் என்று எண்ணி, அவ்வாறு பொருளைப் பெறுவதாயினும் எம்மை விட்டுப் பிரியாதீர் என்று நீ நம் தலைவர்க்குக் கூறவும். நம் மீது அருள் இல்லாத காதலர் நம்மைப் பிரிந்து செலவரேல் நோய் வருந்த அவர் புணர்தலை விரும்பிக் கடும்பனியால் மிக வருந்திப் பற்களை நற நற வென்று கடித்து நடுக்கம் கொள்வேன் என்றுரைப்பள்'' இதில் தலைவனைப் பிரிந்தால் தனக்கு என்னாகும் என்பதைத் தலைவி நன்கு வெளிப்படுத்தியுள்ளாள். (அகநானூறு. 217)

          பருவ வரவின் கண் வற்புறுக்கும் தோழியிடம் தலைவி, ''இருண்ட மேகமானது முழங்கி மழையினைப் பெய்து ஓய்ந்ததால் புகை போன்ற பனித்துளிகள் பூக்களில் நிறைந்தன. தம் காதலரின் பிரிவால் செயலற்ற நீர் சொரியும் கண்களைப் போலக் கருநிறக் காக்கனம் பூவும் மலர்ந்தது. சிவந்த மலர்களைக் கொண்ட ஈங்கைக் கொடி நெய்யில் தோய்த்து எடுத்தாற் போன்று நெய்ப்பும் பசுமையும் கொண்டு விளங்கும் இரு பிளவாகப் பிளந்த ஈரலைப் போன்ற நீரில் நனைந்த அழகிய தளிர்கள் அசைந்திட, அவரைப் பூக்கள் எங்கும் மலர, நெற்கதிர்கள் மண்ணில் தலைசாய்ந்து கிடந்தன வண்டுகள் கிளைகளில் மலரைச் சுற்றி மொய்த்துக் கிடக்கும் முன்பனிக்காலத்தின் நள்ளிரவில் சினமிக்க அரசனது பாசறையின் கண்ணே நெடிது காலம் தாழ்த்திருந்து நமது துன்பத்தினை அறியாத அறன் இல்லாத தலைவர் நமது துன்பத்தினைப் போக்க வருவரோ என்று எண்ணி வாடைக் காற்றிடம் யான் தனிமையோடு துன்புற்றுக் கிடக்கின்றேன் என்று தன் துயர நிலையை ஒரு தலைவி உரைக்கிறாள்'' (அகநானூறு. 294)


          பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குரைத்தது என்றும் கூற்றில் தலைவி தலைவன் பிரிவால் வருந்துவதை

          நாண்இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு
          சினைப் பசும் பாம்பின் சூல் முதிப்பன்ன
          கனைத்த கரும்பின் கூம்புபொதி அவிழ
          நுண் உறை அழிதுளி தலைஇய
          தண்வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே.
                                                                                                (குறுந் - 35) 
என்னும் பாடல் விளக்கும்.
                                                                                               
          இதில் தலைவி தன்னைப் பிரியும் நாளிலேயே, அதற்கு உடன்படாமல் கண்கள் மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு அவை செய்யாது, அவன் பிரிந்த பின்னர் அவர் பிரிந்துறையும் நாட்களையும், வழியின் ஏக்கங்களையும், வாராமையையும் குறித்துக் கலங்குதல் நாணமற்ற செயல். கார்ப்பருவம் தொடங்கும் நாளில் வந்து விடுவேன் என்று கூறி அவன் வரவில்லை. அவன் காண அழாமல் இருந்த கண்கள் பிரிந்த பின்னர் அழுதல் நாணமற்ற செயல் என்று தன்னையே நொந்து கொள்ளும் நிலை காணப்படுகிறது.

          மேலும் 'இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தோழிக்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது' என்றும் கூற்றில் அஃதாவது வரைந்து கொள்ளும் கருத்தின்றிக் களவொழுக்கமே விழைந்து ஒழுகும் தலைவன், ஒரு நாள் மாலையிலே இரவின்கண் வந்தமையுணர்ந்த தலைவி, அவன் வருகையை உணராதாள் போன்று தன்னிலையினைத் தலைவனுக்குணர்த்தி வரைவுகடாவுவாள் போன்று தோழியை நோக்கி , ''என்னுடைய கண்கள் இருள் செறிந்த நடுயாமத்தினும் நாழிகைக் கணக்கர் கண் போன்று பெரிதும் வருந்தித் துயிலாவாகின்றன, ''வருத்த மெய்தி என் நெஞ்சம் புண்பட்ட துன்பத்தாலே, பழைய மழை பெய்த்தாகச் செவ்வியறிந்து உள்ளுருகிப்போன குருட்டுக் காயையுடையை எள் செடிகளையுடைய, சிறிய மழையையுடைய இக்கார்காலக் கடைநாட்களிலே சேற்றின்கண் நிற்றலை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை நன் என்னும் ஓசையையுடைய நடுயாமத்தின் கண்ணே ஐ என்று ஒலிக்கும். அச்சம் உண்டாதற்குக் காரணமான பொழுதின் கண்ணும் என்னுடைய கண்கள் துயிலாவாயின என்றுரைப்பாள். (குறுந்-261)

          தலைவன் பிரிந்த காலத்தை நினைத்து வருந்திய தலைவி தோழியை நோக்கி ''நன்மையையும் அழகையும் உடைய வண்ணாத்தி கஞ்சியிலே தோய்த்து எடுத்து முதல் ஒலிப்பினை ஒலித்த பின்னர், குளிந்த குளத்திலே போகடப்பட்ட அந்நீரின் கண்ணே பிரிதலைச் செய்யாத பருத்த ஆடையின் முறுக்கினை ஒக்கும் பெரிய இலைகளையுடைய பகன்றையினது கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள். இனிய கடுப்பையுடைய கள்ளைப் போன்று நறுமணமின்றிக் கமழா நின்ற துன்பத்தையுடைய இம்மாலைப் பொழுதும் அதன்கண் மிகும் தனிமைத் துன்பமும் நம் தலைவர் சென்றுள்ள நாட்டின் கண்ணே இல்லையோ?'' என்று தலைவன் வேந்தர்க்கூற்றுப் பிரிவால் பிரிந்த நிலையில் மேற்சுட்டிய ஏழுபாடல்களும் தலைவி தன் பிரிவுத் துயரத்தை கூறும் நிலையில் அமைந்தனவாகும். (குறுந் - 330)

          பொருட்பிரிவின் காரணமாகத் தலைவன் தலைவியை விட்டுக்கூதிர் காலத்தில் பிரிந்து சென்ற நிலையில், முன்பனிக் காலம் தொடங்கியதால் குளிர்ந்த வாடைக் காற்றினைத் தாங்க முடியாமல் வருந்திய தலைமகள் தலைமகன் தன்னை நினையாது இருந்திருக்கிறாரே என்று வாடைக் காற்றிடம் கூறித் தன் வருத்தத்தை அவரிடம் கூறுவாயாக என்று வேண்டுகிறாள். இதில் தலைவன் இல்லாமையால் தலைவி நெஞ்சம் நெகிழ்வது நீர் ஓடும் வாய்காலிடத்துள்ள நுண் மணல் மேடு கரைந்து அழிவதோடு உவமைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மணல்மேடு கரைந்து அழிவது போல நானும் அழிந்து படுவேன் என்பதைத் தலைவி இதன் வழிக் குறிப்பாக உணர்த்துகின்றாள்''. (அகநானூறு. 163)

பொருள்வயிற்பிரிவில் தலைவி கூற்று
          பொருள் வயிற் பிரிந்த தலைவன் குறித்த பருவத்து வாராமையால் வருந்தியிருந்ததலைவி தோழியிடம் ''காக்கையானது மகளிர் தரும் சோற்றினை உண்டு சோழ நாட்டில் கழார் என்ற ஊரில் சோற்றுத் திரளையுடனே தரப்படும் ஊனை எண்ணி அந்தக் கிளையிலேயே அமர்ந்திருக்கின்றது. அதுபோல நடு இரவில் தலைவன் வருவான் என்ற நினைப்பில் குளிரில் தூங்காமல் வருத்தமுற்றுக் காத்திருந்தேன். ஆனால் தலைவனோ நம்மைப் பற்றிக் கவலையேபடாமல் இருக்கிறான். தலைவன் நம்மாட்டு அன்பே இல்லாதவர் என்பதற்கு. இதுவே சான்றாகும். இந்தச் சூழலில் அவனை எண்ணி வருந்துவதில் என்ன பயன் என்று தலைவி கேட்பதும் பொருட்பிரிவில் வருந்தும் தலைவியின் உளப்பாங்கினை நன்கு வெளிப்படுத்தும்.. (நற்-281)

          ''அம்ம-வாழி, தோழி! -  பொருள்புரிந்து
          உள்ளார் கொல்லோ, காதலர்? உள்ளியும்,
          சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ ?__
          பயன்நிலம் குழைய வீசி, பெயல்முனிந்து,
          …...............................................................
          …..............................................................
          என்னள்கொல் அளியள்? என்னா தோரே.'' (அகநானூறு. 235)

          என்ற பாடலும் தலைவனது பொருட்பிரிவால் தலைவி வருந்துவதை வெளிப்படுத்தும் நிலையில் அமைந்துள்ளது.
         
          இதில் 'நுதற் கண்ணே தங்குழல் கொண்ட அயலோரால் அறிப்படும் பசலையுடன் பழைய மேனி நலம் கெட மெலிந்து என்ன நிலையினளாயின என்று என்னைப் பற்றிச் சிறிதும் உசவியறியாத நம் தலைவர் நம்மீது கொண்ட அன்பு மிகச் சிறப்பாக உள்ளது என்று உளம் நொந்து தலைவி உரைப்பது பொருள்தான் தலைவனுக்கு இன்றியமையாத்தாகி விட்டது என்று நினைக்கும் தலைவியின் உள்ளப் பாங்கினை உணர்த்துவதாகும். நம் தலைவர் பொருள் தேடுதலையே விரும்பி நம்மை நினையாது போயினரோ? அன்றி நினைந்தும் பொருள் ஈட்டும் முயற்சி மிகுதியால் நம்மை மறந்து போயினரோ என்பது தலைவன் தன்னைவிடப் பொருளை இன்றியமையாததாகக் கருதுகின்றான் என்று தலைவி நினைப்பதை நன்கு அறிய இயலும். தலைவியின் பசப்பு பலரும் அறியுமாறு இருத்தலை வள்ளுவரும்
          ''உவகாண்எம் காதலர் செல்வார் இலக்காண்எம்
          மேனி பசப்புஊர் வது''               (திருக். 1185)
          என்றுரைப்பது சுட்டத்தக்கது.

தலைவனின் பிரிவுக் கூற்று            
          வினைவயிற் பிரிய நினைத்த தலைமகனால் தலைவியைப் பிரிய இயலவில்லை. அவன் நெஞ்சமே அவனைச் செயல் திறமை இல்லாதவன் என்று சாடியது. தலைவியோ கோடைக் காலத்தில் தலைவன் தன்னைப் பிரிந்து விடுவாரோ என்ற கவலை கொண்டாள். இச்சூழலில் கார் காலத்தில் அங்கு வந்த கொக்கினது மூக்கினை ஈங்கைச் செடியினது தழை வருட வருத்தமிக்க வெளிய கொக்கைப் பார்வையாக்கி வேட்டுவன் அதன் கால் கட்டை அவிழ்த்துவிட நின்ற கார் காலத்திலும் பகலிரவென அறியாவாறு மயங்கிக் கிடந்தலை உடைய கூதிர்க்காலத்திலும், வாடைக் காற்றோடு கலந்து வீசும் பெரிய முன்பனிப் பருவத்திலும், பின்பனிப் பருவத்திலும் தலைவி என்ன பாடுபடுவாளோ? என்று யான் வருந்திகின்றேனென்று நொந்து கூறுகிறான். இதில் தலைவன் தலைவியின் துன்பத்தை எண்ணிப் பிரிய மறுக்கும் நிலை பாடப்பெற்றுள்ளது. (நற். 312)

முடிவுரை
          சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர் கழார்கீரன் எயிற்றியார் சங்க இலக்கியத்தில் இவர் பாடியனவாக ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை என்பன போன்ற திணைகளில் அமைந்துள்ளன. இதில் தலைவி கூற்றாக எட்டுப் பாடல்களும், தலைவன் கூற்றாக ஒரு பாடலும் உள்ளன. இவ்ஒன்பது பாடல்களிலும்  தலைவனது பிரிவால் வருந்தும் தலைவியது துயரம் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. எயிற்றியார், படைத்தலைவராக இருந்த தமது கணவர் பிரிவைத் தாங்க இயலாத சூழலில் அதனைக் பாடல்களாக யாத்துள்ளார் என்பது புலனாகின்றது. எயிற்றியாரின் உள்ளத்துணர்வு அவரைப் பிரிவுப் பொருள் பற்றிப்பாடுவதில் வல்லவராக்கியுள்ளது எனில் அது மிகையாகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன