சனி, 22 பிப்ரவரி, 2014

மதிப்புரை: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு


மு. அய்யனார்
முனைவர் பட்ட ஆய்வாளர்
பெரியார் உயராய்வு நடுவம்
பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சி -24
தமிழில் அகமரபு இலக்கியத்திற்கென்றே தனித்ததொரு மரபினைக் கொண்ட குறுந்தொகைப் பாடல்களையும் பழம் மொழிகளில் ஒன்றான பாலிமொழி இலக்கியமான பிராகிருதத்தில் இருந்து உருவாக்கப்பட்ட காதா சப்த சதியையும் ஒப்பிட்டுச் சிலகூறுகளைக் கட்டுரையாளார் முன்வைத்திருப்பது தமிழாய்வின் தேவைகளுக்குப் பயனளிக்கும் முயற்சியே ஆகும். அ. செல்வராசுவின் காலம் சுட்டிக்காட்டலில் நிலவும் மயக்கநிலையைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளார், சங்கச் செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையையும் காதா சப்த சதியையும் ஒரே காலத்தன என்னும் கருத்தியலை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளார். குறுந்தொகை தமிழில் இயற்றப்பட்ட அகநூல்களில் பெரும்பெயர் கொண்ட இலக்கியமாக விளங்குவது காதா சப்த சதி பாலி மொழியில் விளங்கிவந்த ஒரு பழம்பெரும் இலக்கியமாகும். கட்டுரையாளார் இரண்டிற்குமான சிறப்புகளை விளக்கும் பொழுது சில ஒற்றுமை வேற்றுமைகளை முன்வைக்கிறார். இவற்றைக் காலக் கணிப்புச்செய்கையில் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு,

1.    பாலிமொழி எத்தகுச் சூழலில் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
2.    இவை இரண்டிற்குமான சமூக, பண்பாட்டு உறவுநிலை யாது ?
3.    இரு இலக்கியங்களின் உருவாக்கப் பின்னணி என்ன? என்பவை.
பாலிமொழி சமய நிறுவனங்களின் பின்னணியில் தமிழ்ச்சூழலில் அறிமுகமானது. குறுந்தொகை, பண்டைத் தமிழகம் ஒரு பண்பட்ட சமூகமாக, அரசு உருவாக்கம் பெற்ற சமூகமாக விளங்கிய காலத்தில் மன்னன், மற்றும் மக்களை மகிழ்வுப் படுத்தும் ஒரு இன்பியல் இலக்கியமாக உருவாக்கம் பெற்றது.
            இரு இலக்கியங்களின் மீதான கால எல்லையை வரையறை செய்வதில் இதுபோன்ற காரணிகளும் கவனத்தில் கொள்வது நலம்பயக்கும் எனக் கருதலாம்.
            மகளிர் மலர் அணியும் வழக்கம், மலையமான் குறித்த பதிவுகளை விளக்குகையில் குறுந்தொகைப் பாக்கள் மட்டுமே சான்றிற்குக் காட்டப் பட்டுள்ளன. காதா சப்த சதியும் சான்றிற்குக் கொள்ளப் பட்டிருப்பின் வாசகர்களின் புரிதலுக்குப் பெருந்துணையாய் அமைந்திருக்கும்.
            கபிலர் - விக்கிரமன் இவர்களின் படைப்புகளை ஒப்பிட்டு அவற்றின் சிறப்புகளைச் சுட்ட முனைந்துள்ள கட்டுரையாளர் கபிலரின் சமகால நிகழ்வுகளின் புனைவுகளையும் விக்கிரமனின் சமகாலப்புனைவுகளையும் ஒப்பிட்டு அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளைப் பதிவுசெய்யும் திறம் சிறப்பு.
             இக்கட்டுரையில், கட்டுரையாளர் சுட்டிக்காட்டும் கூறுகள் ஒவ்வொன்றும் தனித்த நிலையில் விரிவாக ஆராயத்தக்கன. மேலும் ஒப்பியல் அணுகுமுறை வாயிலாக இவ்இரு இலக்கியங்களையும் அணுகும்பொழுது தமிழ் - பாலி மொழிகளுக்கு இடையிலான உறவை இனங்காண இயலும் எனும் நம்பிக்கையை இக்கட்டுரை அளித்துள்ளது நிறைவைத் தருகிறது.
            இக்கட்டுரையின் வழியே வெளிப்படும் ஆய்வாளரின் மொழிநடையின் வழி, பழந்தமிழ் இலக்கியங்களின் மீதான அவரது வாசிப்புப் புலமையையும் அவற்றின் மீதான நாட்டத்தையும் இனங்காண இயலுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன