பிறப்பு: 26.7.1933 இறப்பு: 2. 12. 2008
18.06.64 ஆம் ஆண்டு இராஜபாளையம் காந்தி கலைமன்றத்தில் தவத்திரு. குன்றக்குடி அடிகளாரால் பன்மொழிப்புலவர் என்னும் பட்டம் அளித்துச் சிறப்பிக்கப் பட்டவரே மு.கு.ஜகந்நாதராஜா. அக்காலத்தில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டவர். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க எத்தனையோ நல்லறிஞர்கள் பல்வேறு வகையிலும் தொண்டு செய்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகத் திகழ்ந்தார் மு.கு.ஜகந்நாதராஜா.
இவர் தானாகவே தெலுங்கு, மலையாளம், கன்னடம்,சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், ஹிந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்று அனைத்திலும் இலக்கிய, இலக்கணப் புலமை பெற்று கவி எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.
திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களைத் தெலுங்கிலும் (இவர் மொழிபெயர்த்த திருக்குறளையும், புறநானூற்றையும் தெலுங்கு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது), முத்தொள்ளாயிரம் நூலைத் தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஆக்கம் செய்து அவரே வெளியிட்டுள்ளார்.
பிராக்கிருத மொழிப் பேரிலக்கியம் "காதாசப்தசதி". இவ்விலக்கியத்தைக் குறுந்தொகை போலவே பாடல்களாக மொழியாக்கம் செய்துள்ளார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக "தமிழும் பிராகிருதமும்" என்ற ஆய்வு நூல் எழுதினார்.
இவரைப் போல ஒரு பன்மொழி ஆய்வாளர், இலக்கிய அறிஞர்,தத்துவ மேதை, தென்னிந்தியாவிலேயே இல்லை என்று பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். படைப்புலகப் பிதாமகன், பல எழுத்தாளர்களின் செவிலித்தாய், பலரையும் உருவாக்கிய பண்பாளர் என்றெல்லாம் பலவாறு பாராட்டப்பட்டவர்.
"ஆதர்ஸ் கில்ட் ஆப் இந்தியா" என்ற அமைப்பின் மாநாடுகள்,புதுதில்லி, லக்னெள, ஐதராபாத்து போன்ற நகரங்களில் நடந்தபோது,அங்கிருந்த தமிழ்ச் சங்கங்களில் பங்கேற்று பல ஆய்வுரைகளை நிகழ்த்தினார். இதனால் பல்கலைக் கழகங்கள் ஜகந்நாதராஜாவை அழைத்துச் சிறப்பித்தன.
இச்சிறப்புமிகு பன்மொழிப்புலவர் 1958ஆம் ஆண்டு, பூவம்மா என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். அவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மணிமேகலை இலக்கியத்தில் ஜகந்நாதராஜாவுக்கு இருந்த ஈடுபாடு காரணமாகப் பல ஆய்வுகளைச் செய்தது மட்டுமல்லாமல், 1958இல் மணிமேகலை மன்றம் ஒன்றைத் தோற்றுவித்தார். அம்மன்றம், ஆக்கப்பூர்வமான பல இலக்கியப் பணிகளைச் செய்து,சென்ற ஆண்டு பொன்விழாவும் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கிய ஐயப்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பல அறிஞர்கள் ஜகந்நாதராஜாவைக் காண வருவார்கள். அவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகி, அவர்களின் ஐயப்பாடுகளை நீக்கி அனுப்பிவைப்பார். தன்னிடம் இருந்த நூல்களை (பல்வேறு மொழி இலக்கிய ஆய்வு மற்றும் தத்துவ நூல்கள்) தனி நூலகமாக ஆக்கினார்.
"ஜகந்நாதராஜா இலக்கியத் தத்துவ ஆய்வு நூலகம்" என்ற பெயரில் இன்றும் அந்நூலகம் அவரது மருமகனார் டாக்டர் இராதாகிருஷ்ண ராஜாவால் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் அனைத்து நூல்களும் இடம்பெற்றிருக்கும். இராமாயணம் எத்தனை மொழிகளில் வெளிவந்ததோ அவை அனைத்தையும் இந்நூலகத்தில் காணலாம். இந்நூலகத்தின் மூலம் தொடர்ந்து பல ஆய்வறிஞர்கள் பலன் பெற்றுச் செல்கின்றனர். 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, குடியரசுத் தலைவர் பரிசு மற்றும் மலேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ளார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
பன்மொழிப் புலவரின் படைப்புகளில் சில வருமாறு:
1. கற்பனைப் பொய்கை(கவிதைத் தொகுப்பு), 1972, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
2. தரிசனம்(வசன கவிதை),1972, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
3. காவிய மஞ்சரி(குறுங்காவியங்கள்), 1986, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
4. சிலம்பில் சிறுபிழை(இலக்கியத் திறனாய்வு), 1968, விசுவசாந்தி பதிப்பகம்,
இராஜபாளையம்.
5. வான் கலந்த வாசகங்கள்(வானொலி உரை), 1980, மணிமேகலை மன்றம்,
இராஜபாளையம்.
6. தமிழும் பிராகிருதமும், 1992, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
7. மணிமேகலை ( இவர் இராஜபாளையத்தின் மணிமேகலை மன்றத் தலைவர்), மணிமேகலைமன்றம், இராஜபாளையம்.
8. இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம், 1994, நர்மதா பதிப்பகம்,
சென்னை.
9. வடமொழி வளத்துக்குத் தமிழரின் பங்கு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை .
10. தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள், 2005, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
11. ஆபுத்திர காவியம்
12. தெரு புதுக் காவியம்
13. பிஞ்சுக் கரங்கள்
14. ராஜுக்கள் சரித்திரம்
15. திராவிட மொழிகளில் யாப்பியல்
16. கவித்தொகை
17. அறிவுக் கதம்பம் (வானொலி உரை), 1993, மணிமேகலை மன்றம், இராஜபாளையம்
மொழிபெயர்ப்புகள்
1. கன்யா சுல்கம், 1963, பாரி நிலையம், சென்னை.
2. சேரி , 1984, சாஹித்ய அகாடமி, டெல்லி
3. ஆமுக்த மால்யத, தெலுங்குப் பல்கலைக்கழகம், ஹைதராபாத்
4. வேமனா, 1992, பாரி நிலையம், சென்னை
5. களாபூரணோதயம் (தெலுங்கு காவியம்), தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு
6. சுமதி சதகம்
7. தேய்பிறை
8. கந்துகூரி வீரேசலிங்கம் கட்டுரைகள்
9. காதா சப்த சதி , 1981, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
10. வஜ்ஜாலக்கம் (பிராகிருத மொழி அறநூல்)2005, தமிழினி, சென்னை 14
11. கர்பூர மஞ்சரி (பிராகிருத மொழி நாடகம்)
12. சன்மதி சூத்திரம் (சமண தத்துவம்)
13. தீகநிகாயம் (பௌத்த தத்துவம்), சுந்தர நிலையம், சென்னை
14. உதானம் (பௌத்த தத்துவம்)
15. மிலிந்தா பண்ஹா (பௌத்த தத்துவம்) (மினாந்தரின் கேள்வி)
16. விக்ஞப்தி மாத்ரதா சித்தி (பௌத்த தத்துவம்)
17. ஔசித்ய விசாரசர்ச்சா வடமொழித் திறனாய்வு நூல், 1989, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
18. நாகானந்தம் - வடமொழி நாடகம் (1992, பீக்காக் பதிப்பகம், சென்னை
19. குந்தமாலா - வடமொழி நாடகம்
20. சாணக்ய நீதி வடமொழி நீதிநூல் 1986, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
21. சாருசர்யா வடமொழி நீதிநூல்
22. சாதன ரகசியம் - வேதாந்த நூல்அனுபவானந்த கிரந்தமாலா, பாபட்லா (ஆந்திரா)
23. சிவசரணர் வசனங்கள்
24. பம்ப்ப பாரதம் (கன்னட காவியம்)
25. பிரேம கீதம் - மலையாளக் கவிதை
26. மகாயான மஞ்சரி, 2007, பவுத்தக் கல்வி மையம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வருமாறு:
1. சைல கீதமு (குறிஞ்சிப்பாட்டு), விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
2. முத்யால ஹாரமு (முத்தொள்ளாயிரம்), விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
3. பாரதி - சமகாலீன பாவமுலு, சாகித்ய அகாதமி
4. புண்யக்ஷேத்ராலு 1989, திருமுறைத்தலங்கள் வெளியீட்டுக்குழு, பெங்களூர்
5. திருக்குறள் தேடகீதுலு
6. தமிழ காவியாம்ருதம்
7. வெலி நாணூறு (புற நானூறு)
8. முத்தொள்ளாயிரம் (மலையாளம்)
9. முக்த ஹார (கன்னடம்)
பார்வை
அய்யா இந்நூலகத்தின் செல்லிடப்பேசி எண்ணைப் பதிவிடுங்கள். நன்றி
பதிலளிநீக்கு