ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தெலுங்கு இலக்கணங்களில் பிந்து(வட்டம்)


-       . சத்தியராஜ்
தமிழிலும் சமசுக்கிருதத்திலும் சொற்களுக்கிடையே மெல்லினங்கள் இடம்பெறும் இடங்களில் மெல்லின மெய்களே காணப்படுகின்றன என்பர்.  ஆனால் தெலுங்கும் கன்னடமும் வட்டம்(0) எனும் வடிவத்தினைப் பயன்படுத்துகின்றன. இவ்வடிவத்தினைச் சமசுக்கிருதம் அநுஸ்வாரக:, பி3ந்து3வு எனவும், தெலுங்கு சுந்நமு, பி3ந்து3வு, அநுஸ்வாரமு எனவும், கன்னடம் சொந்நெ(பிந்து) எனவும் குறிக்கின்றன. இதனைத் தமிழில் வட்டம் எனக் குறிப்பிடலாம்.
            தெலுங்கு இலக்கணங்களில் ஆந்திரசப்தசிந்தாமணி, அப்பகவீயம், பாலவியாகரணம் ஆகிய நூல்கள் வட்டம் குறித்து விளக்குகின்றன. இவற்றுள் அப்பகவீயம்(கி.பி.17) ஆந்திரசப்தசிந்தாமணியின் உரை நூலாகக் கருதப்படுகின்றது(லலிதா, 1996:27). இதன்கண் கூறப்பட்டுள்ள வட்டம் எனும் கருத்தியல் எதுகையை விளக்குமிடத்து(அப்பகவீயம், 1985:40) விளக்கப்பட்டுள்ளது. ஆதலின் அந்நூலை விடுத்து ஆந்திரசப்தசிந்தாமணியிலும் பாலவியாகரணத்திலும் இடம்பெறும் பிந்து குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பிந்துவின் செயல்பாடு
            பிந்து சொற்களின் இடையில் மெல்லினங்களுக்குப் பதிலாக வருவதாகும். அது குறில், நெடில் ஆகியனவற்றைத் தொடர்ந்தும், வல்லின மெல்லினங்களுக்கு முன்பாகவும் வரும் என்பது நன்னயா, சின்னயசூரி ஆகிக்யோரின் ஒருமித்த துணிபு.
ஆந்திரசப்தசிந்தாமணி
            ஆந்திரசப்தசிந்தாமணி கி.பி.11ஆம் நூற்றாண்டில் நன்னயாவால் எழுதப்பட்ட்தாகும். இது சமசுக்கிருத மரபைப் பின்பற்றிச் சமசுக்கிருத மொழியில் எழுதப்பட்டுள்லது. இந்நூல் தெலுங்கு மொழிக்குரிய முதல் இலக்கண நூலாகும். இதன்கண் சஞ்ஞா, சந்தி, அசந்தா, அலந்தா, கிரியா எனும் படலப் பகுப்புகல் காணப்படுகின்றன. இப்பகுப்புகளுள் சஞ்ஞாவில் வட்டம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இவ்வட்டம் அநுஸ்வார: என அழைக்கப்படுகிறது. இவ்வநுஸ்வார: பி3ந்து3வு எனவும் கூறப்படுகின்றது (சஞ்.32). இது வகை, பயன்படுத்தப்படும் இடம் என்றாயிரு வகைகளில் விளக்கப்பட்டுள்ளது.
வகை
            அநுஸ்வார: சித்34மு (இயல்பு), ஸாத்3யமு (இலக்கணக் கோட்பாட்டால் உருவாக்கப்பட்ட வடிவம்) என்றாயிரு வகைகளை உடையது என்பதை,
            ஸித்3த்4 ஸ்ஸாத்4 யச்சா நுஸ்வார: பூர்ணர்தே4 பே43தோத் விவித்4:   - சஞ்.19
எனும் நூற்பா விளக்கி நிற்கின்றது. மேலும், இந்நூற்பாவில் அநுஸ்வார: இயல்பு நிலையிலும் இலக்கணக் கோட்பாட்டுக்குட்பட்ட நிலையிலும் வருகிறது என்பதையும்,  இயல்பு முழுவட்டம் (பூ3ர்ண பி3ந்து3வு), அரை வட்டம் (க2ண்ட3 பி3ந்து3வு), இலக்கணக் கோட்பாட்டுக்குட்பட்ட முழுவட்டம்; அரைவட்டம் எனப் பிரிந்து நிற்கும் என்பதியும் குறிப்பிடுவதாகச் சாவித்ரி குறிப்பிட்டுள்ளார். அதனைக் குறிப்பிடும் வரைகோடு வருமாறு:
                                              அநுஸ்வார:
சித்34மு                                                            ஸாத்4யமு
பூ3ர்ண               2ண்ட3                              பூ3ர்ண                        2ண்ட3
03மு             கல(கி3                          செ0தொ3              வச்செ(3 மலக்ஷிடு3
(அழகு)              (கவலைப்படு)                       (சிவப்பு அல்லிமலர்)        (வந்தான் தாமரைக்கண்ணன்)
பயன்படுத்தப்படும் இடம்
            இவ்வநுஸ்வார: குறில் (ஹ்ரஸ்வமு), நெடில் (தீ3ர்க4மு) ஆகியனவற்றைத் தொடர்ந்து வருவதாகும். இவ்விரண்டைத் தொடர்ந்து வருவது அரைவட்டமே (க2ண்ட3 பி3ந்து3வு). இவ்வரைவட்டம் குறிலைத் தொடர்ந்து வரும்போது சிலவிடங்களில் முழுவட்டமாக மாறியும் மாறாமலும் வருவருண்டு என்பதை,
ஹ்ரஸ்வாத் பூர்ணோ அபிப4வேத்             – சஞ்.20
வரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
            டு.  செல(கி3 – செல0(ங்)கி3                (மகிழ்ந்து)
                        தொல(கி3 – தொல0(ங்)கி3           (தொலைந்து)
இவ்விரு காட்டுகளும் குறிலைத் தொடர்ந்து நின்ற அரைவட்டம் இலக்கணக் கோட்பாட்டால் முழுவட்டமாக மாறி ங் என்ற ஒலிக்குறிப்பைச் சுட்டி நிற்பதை காட்டுகின்றன.
            நெடிலைத் தொடர்ந்து அரைவட்டம் இருந்தால் அது எவ்வித மாற்றமும் பெறாது என்பதை,
            தீ3ர்கா4 ச்சே2 த்க2ண்ட3 ஏ வஸஜ்நேய:              - சஞ். 21
எனவரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
            டு.  வா((பக்கம்), வீ((மகிழ்ச்சி)
பாலவியாகரணம்
            சின்னயசூரி சமசுக்கிருத சொல்லாட்சிகளைப் புறந்தள்ளித் தெலுங்கிலே இலக்கணக் கூறுகளை விளக்க முனைந்துள்ளார். இருப்பினும் அவரால் முழுமையாகப் புறந்தள்ள முடியவில்லை. அவரியற்றிய பாலவியாகரணம் சஞ்ஞா, சந்தி, தத்சம, ஆச்சிக, காரக், சமாச, தத்தித, கிரியா, கிருதந்த, பிரகீர்ணக எனும் பத்து பகுப்புகளைக் கொண்டுள்ளது. இப்பகுப்புகளுள் சஞ்ஞாவில் பிந்து குறித்து விளக்கப்பட்டுள்ளது.
            இந்நூல் பிந்துவின் வகைகளைக் கூறாமல் அது பயன்படும் இடங்களை மட்டும் விளக்கிச் செல்கின்றது. முதலில் குறில் மீதுள்ள அரைவட்டத்துக்கு முழுவட்டம் விரவி வரும் என விளக்கம் காணப்பட்டுள்ளது. அவ்விளக்கத்தை,
            ஹ்ரஸ்வமு மீ(தி3 2ண்ட3பி3ந்து3வு நகு (பூ3ர்ணபி3ந்து3வு கல்ப்கமுகு3 நகு3நு  சஞ்.14
எனும் நூற்பாவில் காணலாம்.
            டு.  அட3(குவஅட30(ங்)குவ
                        அர(டிஅர0(ண்)டி
இவ்விரு காட்டுகளில் 3, எனும் குறில்களை அடுத்து அரைவட்டம் வந்துள்ளது. இவ்வரைவட்டம் மேற்காட்டிய நூற்பாவின்(14)படி முழுவட்டம் பெற்று வந்துள்ளது. அவ்வட்டம்ன் ங், ண் என்ற ஒலிக்குறிப்புகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
            அடுத்து, நெடில் மீது இலக்கணக் கோட்பாட்டால் விதிக்கப்பட்ட முழுவட்டம் விரவி வராது என்பதை,
            தீ3ர்க4முமீ(த ஸாத்யபூ3ர்ணமு லேது3                      – சஞ்.15
எனவரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
            எ – டு.  வா(டு3(அவன்), வீ(டு3(இவன்), லே(டு3
            அரைவட்டமும் முழுவட்டமும் சமசுக்கிருதச் சொற்களின் வல்லின(ப3ருஷமு), மெல்லின(ஸரளமு)ங்களுக்கு முன்னால் வரும் என்பதை,
    ஸம்ஸ்க்ரு1த ச்மேதரமு லயிந தெலு(கு3 ஸ்2ப்33முல யந்து3(3ருஷ   ஸரளம்பு3லகு முந்தே3 பி3ந்து3வு கா3நம்படு3 சுந்நதி3                             – சஞ்.16
எனவரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
            எ – டு. 0(ங்)கர, கல(குவ, த30(ண்)ட, தா3(டு
இக்காட்டுகளில் அரைவட்டமும் முழுவட்டமும் வந்துள்ளன. இதன்வழி சமசுக்கிருதச் சொற்களுக்கு மட்டுமின்றி தூய தெலுங்குச் சொற்களுக்கும் அவ்வட்டங்கள் வரும் என்பதை அறிய முடிகின்றது.
பயன்
            இப்பிந்து தெலுங்கில் இடம்பெறுவதற்குச் சமசுக்கிருதத் தாக்கமே காரணம் எனலாம். இது மெல்லினங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடாகும். இதன் வளர்ச்சி திரவிட மொழிகளுள் தெலுங்கில் மட்டுமே பல நிலைகளைக் கண்டுள்ளதெனலாம். அதனைக் கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் மெய்ப்பிக்கும்.
            எ – டு.      கொ0(ந்)த, கோ(த – தெலுங்கு
                            0(ண்)டு, ஒ0(ந்)து3 – கன்னடம்
இவ்விரு காட்டுகளின் வழி தெலுங்கு அரைவட்டம், முழுவட்டம் என்ற இரண்டையும் பயன்படுத்தியுள்ளது. ஆனால் கன்னடம் முழுவட்ட்த்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.
முடிப்பு
            ஆந்திரசப்தசிந்தாமணி குறில், நெடில் ஆகியவற்றைத் தொடர்ந்தே வட்டமானது வரும் எனக் குறித்துள்ளது. இக்கருத்தியலைப் பாலவியாகரணம் ஒப்புக் கொள்கிறது. மேலும், சமசுக்கிருதத்திற்கு இணையில்லாத தெலுங்குச் சொற்களின் வல்லின மெல்லினங்களுக்கு முன்னும் வட்டம் வரும் எனும் கருத்தியலையும் பாலவியாகரன்ணம் முன்வைத்துள்ளது. இத்தன்மை அவ்விலக்கணக் கூறின்(பிந்து) வளர்ச்சிப் போக்கைக் காட்டுகின்றது எனலாம்.
துணைநின்றவை
தமிழ்
1.     அறவேந்தன் இரா., 2008, சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
2.     சத்தியராஜ் த., 2012, ஒப்பீட்டியலில் எழுத்தாக்கமரபும் சஞ்ஞாபரிச்சேதமும், உறவு: பேரா. வே.சா. அருள்ராஜ் மணிவிழா கருத்தரங்க நூல், சைவமணி பதிப்பகம், திருச்சி.
3. வேங்கடாச்சலம் தண்.கி., 2000, கவிராச மார்க்கம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
தெலுங்கு
4.     தொரசாமி சர்மா ராவூரி, 1985, அப்பகவீய பாவபிராகசிக, திரிவேணி பப்ளிசர்ஸ், மசீலிபட்டினம்.
5.     பரவஸ்து சின்னயசூரி, 2002, பாலவியாகரணமு, பாலசரசுவதி புத்தகாலயம், சென்னை.
6.     லலிதா ஜி., 1996, தெலுகு வியாகரணமுல சரித்திர, வெலகபூடி பப்ளிசர்ச்ஸ், மதராசு.
கன்னடம்
7.  சூடாமணி, சர்வக்னா வசனகளு, ஜனபத பிரகாசந, பெங்களூரு.

  (இக்கட்டுரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக இந்திய மொழிகள் பள்ளியின் திராவிட மொழிகளின் வளர்ச்சியும் இன்றைய போக்கும்(2013) கருத்தரங்கில் வாசிக்கப் பெற்று, அக்கருத்தரங்க ஏட்டில் இடம்பெற்றுள்ளது. இங்குச் சில திருத்தங்களுடன் தரப்பெறுகிறது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

Bibliography of Tamil Literary History

Pillars of Tamil Literary History: Scholarly Works This compilation highlights the significant contributions of ...