வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ஒப்பீட்டியலில் எழுத்தாக்கமரபும் சஞ்ஞாபரிச்சேதமும்


            கி.பி.19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) தோற்றம் பெற்றன. இவ்விரு நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர். இவ்விருவரின் நூல்களில் அமைந்துள்ள முதல் இயல்கள் முறையே எழுத்தாக்கமரபும் சஞ்ஞாபரிச்சேதமும் ஆகும். இவ்விரு இயல்களில் அமைந்துள்ள கருத்தியல்களை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
            சுவாமிநாத எழுத்தாக்கமரபில் 10 நூற்பாக்களும் பாலவியாகரண சஞ்ஞா பரிச்சேத்தில் 23 நூற்பாக்களும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு இயல்களில் அமையப் பெற்ற கருத்தியல்களை 11 நிலைகளில் விளக்கலாம். அவை:1. புறக்கட்டமைப்புநிலைச் சிந்தனை, 2. எழுத்துக்களின் பொதுமரபு, 3. எழுத்துக்களின் அறிமுகம், 4. பிறப்புமுறை, 5. புணர்ச்சி, 6. சார்பெழுத்து, 7. வரிவடிவமும் மாத்திரையும், 8. மொழிமுதல், இறுதி, இடை நிலைகள், 9. பிந்து, 10. சொல்வகை, 11. வழு – ஏற்றல் என்பன. இவற்றுள் முதலாவது சுவாமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. சுவாமிநாதம் சுட்டும் புறக்கட்டமைப்புநிலைச் சிந்தனையாவது:
            ...
            செப்பெழுத்துச் சொற்பொருள்யாப்பு அலங்காரம் எனும் ஐந்
            தமிழ்தின் இலக் கணவிரிவை ஒவ்வொரு மூன்று இயலாய்
            அடக்கிமொழி குவன்; சுவாமி நாதம் இந்நூற் பெயரே(1)
என்பதாகும். இச்சிந்தனை அந்நூலில் உள்ள அதிகாரம், இயல்கள், நூலின் பெயர் ஆகியவற்றைத் தெளிவாக்குகிறது. இச்சிந்தனை சின்னயசூரியிடம் காணப்பெறாமைக்குக் காரணம் முன் நூலாரிடம் இது குறித்த சிந்தனை காணப்படாமையேயாகும். ஏனெனில், சாமிகவிராயர், வீரசோழியர்(கி.பி.11), ஈசான தேசிகர்(கி.பி.17) ஆகியோரைப் பின்பற்றியே சுட்டியுள்ளார் எனத் தெரிகின்றது.
            இரண்டாவது (எழுத்துக்களின் பொதுமரபு), சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. சுவாமிநாதம் எழுத்துக்களை ஆராயும் முறை, எழுத்தின் பொது விளக்கம், எழுத்துக்களின் பெயர் என்பனவற்றை விளக்குகிறது. இருப்பினும் அப்பொது மரபில் உள்ள இனம் குறித்த சிந்தனை மட்டும் பாலவியாகரணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அச்சிந்தையாவது க,ச,ட,த,ப ஆகியன கடினமானவை (பருசம்); க3, ஜ1, ட3, த3, ப3 ஆகியன எளிமையானவை (சரளம்): ஏனையவை இடையினம் (இசுத்திரம்) என்பனவாகும்.
            மூன்றாவது (எழுத்துக்களின் அறிமுகம்), இருநூலாரிடத்தும் காணலாகின்றது. சாமிகவிராயர், இறைவணக்கம், நூலின் பறக்கட்டமைப்புநிலைச் சிந்தனை, நூற்பெயர், எழுத்துக் களை ஆராயும் முறை, எழுத்துக்களின் பொது விளக்கம், எழுத்துக்களின் பெயர் ஆகியனவற்றைத் தொடர்ந்து எழுத்துக்களை அறிமுகம் செய்கின்றார். ஆனால் சின்னயசூரி நேரிடையாக எழுத்துக்களின் அறிமுகத்தை வைத்துவிடுகிறார். அவ்வறிமுகம் வேறுபட்டே நிற்கின்றது. ஏனெனின் சுவாமிநாதம்,
            அகராதி யீராறும் உயிர், ககராதிகள் மூவாறும் உடல்; இம்
            முப்பானு(ம்) முதலெலுத்தாம்...`                                       (3)
எனக் கூறி நிற்க, பாலவியாகரணம்
             ஸம்ஸ்க்ரு1தமுநகு வர்ணமு லேப3தி3                     (1)
            ப்ராக்ரு1தமுநகு வர்ணமுலு நலுவதி3                     (2)
            தெலுகு3நகு வர்ணமுலு முப்பதி3யாறு                    (3)
எனக்கூறி நிற்கின்றது. தெலுங்கு எழுத்துக்களை முதலில் அறிமுகம் செய்யாமல் சமசுக்கிருத, பிராக்கிருத எழுத்துக்கள் ஆகியனவற்றை அறிமுகம் செய்துவிட்டுப் பின்பு தெலுங்கு எழுத்துக்களை அறிமுகம் செய்கின்றது. இது ஒரு சிறந்த முறை எனலாம். ஏனெனின் தெலுங்கு சமசுக்கிருத, பிராக்கிருத எழுத்துக்கள், சொற்கள் ஆகியனவற்றைக் கடன் வாங்குவதால் இவ்வித விளக்கமுறை சிறப்பினதே.
            நான்காவது(பிறப்புமுறை), இருநூலாரிடத்தும் காணலாகின்றது. இச்சிந்தனை ஒருமித்துக் காணப்பட்டாலும், விளக்குமுறையில் வேறுபட்டே நிற்கிறது. சுவாமிநாதம் உயிர், மெய், சார்பு ஆகிய எழுத்துக்கள் எவ்விதம் பிறக்கின்றன என நிரலாக விளக்கிச் செல்கிறது. ஆனால், பாலவியாகரணம் ச், ஜ் ஆகிய இரு மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் பிறப்புமுறையைத் தருகிறது. அம்முறை மாறுபாட்டுடன் உள்ளது. அம்மாறுபாடாவது ச, ஜ எழுத்துக்கள் சம எழுத்துக்களாக இருக்கும்போது, பல்லொலிகளாகவும் அண்ணவொலிகளாகவும் வரும்; இ, ஈ, எ, ஏ ஆகியவற்றுடன் இணையும்போது அண்ணவொலிகளாகவும் (தாலவியம்); அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகியவற்றுடன் இணையும்போது பல்லொலிகளாகவும் (தந்தியம்) வரும்; சமசுகிருதத்திற்கு இணையான இகர ஈற்றுச் சொற்களில் ச, ஜ ஆகியன பன்மையாக வரும்போது அண்ணவொலியாக வரும் என்பனவாகும். இத்தன்மை தமிழில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
            ஐந்தாவது(புணர்ச்சி), இருநூலாரிடத்தும் தென்படுகிறது. இதனைச் சாமிகவிராயர் இறுதியாக விளக்குகிறார். அவ்விளக்கம் எழுத்து நிலைக்குரியதென்பது (மெய்ம்மயக்கம், பொலி, சாரியை) குறிப்பிடத்தக்கது.
            ஆறாவது(சார்பெழுத்து) சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. ஏனெனில், சின்னயசூரி எழுத்துக்களை உயிர்(அச்சு), மெய்(அல்லு) என்பதாக மட்டும் வகைப்படுத்திச் செல்வதால் அத்தன்மை ஈண்டு இல்லை எனலாம்.
            ஏழாவது(வரிவடிவமும் மாத்திரையும்), சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. இத்தன்மை சுவாமிநாதத்தில் இடம்பெறுவதற்குக் காரணம் தமிழ் மரபிலக்கணங்கள் எழுத்துக்களைப் பெயர், எண், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், இடை, இறுதிநிலைகள், போலி, பதம், புணர்ப்பு எனப் பன்னிரு நிலைகளாகப் பாகுபடுத்தி விளக்கக் கூடிய போக்கைக் கொண்டிருப்பதே. தெலுங்கு மரபிலக்கணங்களில் இத்தன்மை இல்லைபோலும்; அதனால் சின்னயசூரி விளக்கவில்லை எனலாம்.
            எட்டாவது(மொழிமுதல், இடை, இறுதிநிலைகள்), சுவாமிநாதத்தில் முழுமையுடனும், பாலவியாகரணத்தில் முதலி வாராச்(ய, வு, வூ, வொ,வோ) சொற்கள் என்பதாகவும் இடம்பெற்றுள்ளது.
            ஒன்பதாவது(பிந்து), தமிழில் இல்லை; தெலுங்கில் உண்டு. ஏனெனின் சமசுக்கிருத, பிராக்கிருத மொழிகளைத் தழுவித் தெலுங்கு இலக்கணங்கள் ஆக்கப்படுவதால் இது குறித்த சிந்தனைப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
            பத்தாவது(சொல்வகை), சுவாமிநாதத்தில் இல்லை. பாலவியாகரணத்தில் உண்டு. சுவாமிநாதம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனத் தனித்தனி அதிகாரப் பகுப்புடையது. எனவே, சொற்களின் வகைகளைச் சொல்லதிகாரப் பகுதியில் வைத்து விளக்குகிறது. பாலவியாகரணம் எழுத்து, சொல் என்றாயிரு கருத்தியல்களைப் பொதுமையாக விளக்கிச் செல்ல முற்படுவதால் சொற்களின் வகையினை நான்கு சூத்திரங்களில் விளக்கிச் செல்கிறது. தமிழில் சொற்களின் வகை என்பது பெயர், வினை, இடை, உரி என அமைந்துள்ளது. தெலுங்கில் தற்சமம், தற்பவம், தேசிகம், கிராமியம் என் அமைந்திருக்கிறது.
            பதினோராவது(வழு – ஏற்றல்), சொல் வகையுடன் தொடர்புடையது. இத்தன்மை பாலவியாகரணத்தில் உண்டு; சுவாமிநாதத்தில் (சொல்லதிகாரத்தில் உண்டு) இல்லை.
            மேற்குறித்த கருத்தியல்களின்வழி ஒப்பும் வேறுபாடும் காணப்படுவதைக் கீழ்வரும் வரைகோடு சுட்டிக்காட்டும்.
ஒப்பீட்டுக் கருத்தியல்கள்

            சுவாமிநாதம்                                                        பாலவியாகரணம்

எழுத்தாக்கமரபு                                                                                   சஞ்ஞாபரிச்சேதம்
1.     புறக்கட்டமிப்புநிலைச் சிந்தனை                                               1. எழுத்துக்களின் அறிமுகம்
2.     எழுத்துக்களின் பொதுமரபு                                                         2. எழுத்துக்களின் இனம்
3.     எழுத்துக்களின் அறிமுகம்                                                            3. பிறப்புமுறை
4.     பிறப்புமுறை                                                                                  4. புணர்ச்சி
5.     சார்பெழுத்துக்களின் விளக்கம்                                                   5. பிந்து
6.     வரிவடிவமும் மாத்திரையும்                                                       6. முதலில்வாரா
7.     மொழிமுதல், இடை, இறுதிநிலை                                             7. சொற்களின் வகை
8.     புணர்ச்சி(மெய்ம்மயக்கம், பொலி, சாரியை)                            8. வழு – ஏற்றல்
தெலுங்கில் பிந்து என்பது வட்டத்தைக் குறிக்கும். இவ்வட்டம் அரை, முழு என்ற இரு வடிவங்களில் காணப்பெறுகின்றது. இவ்வட்டங்கள் மெல்லினங்களுக்குப் பதிலாக வருவனவாகும். எ-டு. த3o(ண்)ட.


துணைநின்றவை
தமிழ்
1.     சண்முகம் செ.வை.(பதி), 1995, சுவமிநாதம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர்.
2.     சாவித்ரி சி.(மொ.ஆ.), பாலவியாகரணம்(பதிப்பிக்கப் பெறாத ஏடு).
தெலுங்கு
3.     உமா பி., பாலவியாகரணமு, பரவசத்து சின்னய்சூரி பிரணிதமு தீபிக வியாக்கிய சகிதமு, புல்லூரி உமே ராசதானி களாசல, மதராசு.
4.     பரவத்து சின்னயசூரி, 1994, பலவியாகரணமு, பாலசரசுவதி புத்தகாலயம், மதராசு.
(இக்கட்டுரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக இந்திய மொழிகள் பள்ளியின் மேனாள் துறைத்தலைவரின் (முனைவர் வே.சா. அருள்ராஜ்) மணிவிழாக் கருத்தரங்(2013)கில் வாசிக்கப் பெற்று, அக்கருத்தரங்க ஏட்டில் இடம்பெற்றுள்ளது. இங்குச் சில திருத்தங்களுடன் தரப்பெறுகிறது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன